அன்று மாலை, லேசாக மழை தூறியது. மருத்துவமனையின் ஜன்னலோரம் நின்று பார்த்தபோது, ஒரு சிறுமியை, அவனது பாட்டி அழுத விழிகளோடு, அணைத்தவாறே தூக்கி கொண்டு வந்தார். அவரை விசாரித்ததில், மருத்துவமனையை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாகவும், கடந்த சில நிமிடங்களாக, தன் இரண்டு வயது பேத்தி மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறினார்.
'இவள் பெயர் நிரோஷினி; என் மகள் வயிற்று பேத்தி. மகளும், மருமகனும் வேலைக்கு செல்வதால், பேத்தியை நான் தான் கவனித்து கொள்கிறேன். அவளுக்கு ஏதாவது ஆபத்து என்றால், என்னால் தாங்க முடியாது. எப்படி என் மகளை எதிர்கொள்வேன்' என, அழுதுகொண்டே பேசினார்.
நிரோஷினியை பரிசோதித்தேன்; தொண்டையில் ஏதும் சிக்கவில்லை. ஆனால், மூக்கு துவாரத்தை பரிசோதித்தபோது, அதில் வித்தியாசத்தை உணர்ந்தேன். ஏதோ ஒன்று, மூக்கின் வலதுபக்க துவாரத்தில் அடைத்துக் கொண்டிருந்தது. அதனால், நிரோஷினி சுவாசிக்க சிரமப்பட்டாள். அவசரமாக சிகிச்சை செய்து, அப்பொருளை வெளியே எடுத்துப் பார்த்தேன்.
ஆச்சரியம்...! வெள்ளை மூக்கடலை. அது எப்படி நிரோஷினி கைகளுக்கு கிடைத்தது என, அவள் பாட்டியிடம் விசாரித்தேன். 'நேற்று மாலை, மளிகைப் பொருட்கள் வாங்கினோம். அவற்றை, இன்று தான் டப்பாக்களில் போட்டேன். அப்படி போடும்போது, ஏதோ ஒன்று வீட்டில் சிதறியிருக்க வேண்டும். அதை நிரோஷினி எடுத்து, மூக்கிற்குள் போட்டிருக்க வேண்டும்' என்றார்.
நிரோஷினி சரியானதும், சாக்லெட்டுக்காக பாட்டியோடு சண்டையிட ஆரம்பித்துவிட்டாள். பாட்டி கண் கலங்கியபடியே நன்றி கூறினார்.
நம் வீட்டு பெரியவர்கள், குழந்தை பிறந்து ஐந்து வயது வரை, கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறுவர். காரணம், குழந்தைகளின் கைகளுக்கு கிடைக்கும் பொருட்கள் எல்லாம், ஆபத்து இல்லாதவை என, சொல்ல முடியாது. ஆனால், குழந்தைகளின் அகராதியில், ஆபத்து என்ற ஒன்று கிடையாது; எல்லா பொருட்களையுமே அவர்கள், விளையாட்டாகத்தான் பார்ப்பர்.
கூர்மையான பொருட்கள், நாணயங்கள், நெல்மணிகள், சிறு அளவில் உருண்டையாக இருக்கும் பட்டாணி, வேர்க்கடலை போன்ற பொருட்களை, அவர்கள் கைகளில் படும் வண்ணம் வைக்கக் கூடாது. நிரோஷினியின் பிரச்னை என்னவென்று கண்டுபிடித்து, சரிசெய்யப்பட்டது. மூச்சுத் திணறல் மட்டும் தொடர்ந்திருந்தால், உயிருக்கே ஆபத்தாகிவிட்டிருக்கும்.
இறுதியில் நிரோஷினி, பாட்டியின் செல்லக் கட்டளைக்கிணங்க, என் கன்னத்தில் தன் அழகான உதடுகளை ஆழப்பதித்து முத்தமிட்டாள். அந்த நிமிடம் ஆனந்தமாய் உணர்ந்தேன். உண்மை தான்... ஒரு முத்தத்தில், குழந்தைகள் நம் உலகத்தை அழகானதாக மாற்றி விடுகின்றனர்.
த.ருக்மணி,
குழந்தைகள் நல மருத்துவர்,
அரக்கோணம்.
dr.rukmani@gmail.com