பிரபல தமிழ் வார இதழான கல்கி, தற்போது, 75வது ஆண்டில் காலடி வைக்கிறது. கல்கி இதழின் பவள விழாவை ஒட்டி, கல்கி குழும பத்திரிகைகளின் ஆசிரியர், லட்சுமி நடராஜன், கல்கி இதழின் பொறுப்பாசிரியர்
ஆர்.வெங்கடேஷ் இருவரும், அளித்த பிரத்யேக பேட்டி:
கல்கி பத்திரிகை எப்படி துவங்கப்பட்டது?
தேச பக்தியை உயிர் மூச்சாக கொண்ட இரு இளைஞர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக, கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இருவர், கல்கி மற்றும் சதாசிவம்! திருச்சி சிறையில் இருந்த போது, இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். பின், கல்கி, ஆசிரியராகவும், சதாசிவம், விளம்பர மேலாளராகவும் சில ஆண்டுகள், ஆனந்த விகடன் இதழில், பணியாற்றி, பின், தங்கள் பணியை விட்டனர்.
திருவையாறு தியாகராஜ ஸ்வாமி ஆராதனைக்கு சென்றிருந்த போது, 'நாம் ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன!' என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. திருவையாறு புனித பூமியில் உதித்த அந்த எண்ணம், மனதில் வலுத்து, ஆக., 1, 1941ல் கல்கி, சதாசிவம்,
எம்.எஸ்.சுப்புலட்சுமி, ராஜாஜி மற்றும் ரசிகமணி, டி.கே.சிதம்பரனார் போன்ற ஐந்து தீர்க்கதரிசிகளின் உழைப்பில், பங்களிப்பில் கல்கி இதழ் வெளியானது.
அதுவரை ஆண் வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டிய, எம்.எஸ்.சுப்புலட்சுமி முதன் முறையாக, சாவித்ரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த சன்மானத்தை, கல்கி பத்திரிகை ஆரம்பிக்க, மூலதனமாக அளித்தார். மாயவரத்தை சேர்ந்த,
ஆர்.கே.சுப்பிரமணிய பிள்ளையும் மூலதனம் அளித்தார்.
எழும்பூர் ரயில்வே நிலையம் எதிரே, காந்தி - இர்வின் சாலையில், கல்கி அலுவலகம் அமைக்கப்பட்டது. அப்போது, தனக்கே உரிய நகைச்சுவையுடன், 'சென்னையில் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்குன்னு கேட்பவருக்கு, இனிமேல் பளிச்சென்று, 'கல்கி' அலுவலகத்துக்கு எதிர்த்தாற் போல் தான் இருக்கிறதுன்னு சொல்லி விடலாம்' என்று எழுதினார் கல்கி.
கல்கி பத்திரிகையின் கொள்கைகள் என்ன?
கல்கியின் முதல் இதழிலேயே, இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார் கல்கி. விநாயகர் பகவானுக்கும், கல்கிக்கும் உரையாடல் நடப்பது போன்றும், அதில், விநாயகர், கல்கி இதழின் கொள்கைகள் குறித்து கேட்பது போன்றும், அதற்கு கல்கி, 'முதல் கொள்கை, தேச நலன்; இரண்டாவது கொள்கை, தேச நலன்; மூன்றாவது கொள்கை, தேச நலன். இதுமட்டுமே எங்கள் கொள்கை...' என்று தங்கள் கொள்கையை தெளிவுபடுத்தியிருந்தார். அக்கொள்கையை இன்றும் கடைபிடிக்கிறோம்.
ஆசிரியர் கல்கியின் சாதனை என்று எதை கருதுகிறீர்கள்?
பல சாதனைகளை சொல்லலாம்; அவற்றில் குறிப்பிடத்தக்கது, அதுவரை தமிழ் பத்திரிகைகளில், கடுந்தமிழில் மட்டும் தான் எழுதி வந்தனர். எல்லாருக்கும் புரியும்படி எளிய, பழகு தமிழில் எழுதினார். சரித்திரம் என்றால் அறிஞர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலைமையை மாற்றி, சரித்திரத்தை எளிமைப்படுத்தி, நாவலாக தர முடியும் என்று செய்து காட்டி, வெற்றி பெற்றவர் கல்கி.
கடந்த, 50 ஆண்டுகளாக தமிழில் அதிகம் விற்பனையாகும் ஒரே புத்தகம் கல்கியின், 'பொன்னியின் செல்வன்' தான்! இந்த ரிகார்டை வேறு எந்த நாவலோ, புத்தகமோ எட்டியதில்லை. 1951ல் ஆரம்பித்து, மூன்றரை ஆண்டுகள், வாரா வாரம் தொடர்கதையாக எழுதி, பல லட்சம் வாசகர்களை மகிழச் செய்தார். கல்கி பத்திரிகையில், மிக நீண்ட காலம் வெளிவந்த தொடர் கதை, 'பொன்னியின் செல்வன்' தான். ஓவியர் மணியம், உயிரோட்டமுள்ள ஓவியங்கள் வரைந்து, இத்தொடருக்கு சிறப்பு கூட்டினார். 'பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை மற்றும் தியாக பூமி' போன்ற அழியாப் புகழ் பெற்ற நாவல்களை, தொடர்கதைகளாக எழுதி, வாசகர்களை மகிழ்வித்தார். கூடவே, கல்கி இதழின் சர்க்குலேஷனும் பல மடங்கு அதிகரித்தது.
கல்கி இதழின் வளர்ச்சி பற்றி, லட்சுமி நடராஜன் கூறியது:
செப்., 9, 1954ல் அகால மரணம் அடைந்தார் கல்கி. அப்போது, அவர் எழுதிக் கொண்டிருந்த, 'அமர தாரா' தொடரை, அவரது மகள் ஆனந்தி ராமச்சந்திரன், கல்கி எழுதி வைத்திருந்த குறிப்புகளின் உதவியோடு, மீதியை எழுதி முடித்தார்.
கல்கியின் மறைவை அடுத்து, மீ.ப.சோமு, ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தார். பின், ஆசிரியர் பொறுப்பை ஏற்றார் சதாசிவம். விளம்பர வித்தகர் என்று போற்றப்படும் சதாசிவம், பல புதிய விளம்பர உத்திகளை கடைபிடித்து, விளம்பர வருமானத்தை பல மடங்கு அதிகரித்தார். 1968ல் இரண்டாம் முறையாக, 'பொன்னியின் செல்வன்' தொடரை வெளியிட்டு, கல்கி வார இதழை, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் வார இதழாக தரம் உயர்த்தினார் சதாசிவம். அப்போதைய கல்கியின் விற்பனை, 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள்!
கல்கியின் மகன் கி.ராஜேந்திரன், 1970ல் கல்கி இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவர், இதழில் பல புதுமைகள், மாறுதல்களை கொண்டு வந்தார். நட்சத்திர எழுத்தாளர்கள் அறிமுகம், சிறப்பிதழ்கள், பிற துறைகளைச் சார்ந்தவர்களான, சுகி சிவம், ப.சிதம்பரம் (ஜனநாயக உரிமைகள்) முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் (குறை ஒன்றும் இல்லை) போன்றோரை தொடர் கட்டுரை கள் எழுத வைத்தார்.
மகா பெரியவர் விருப்பப்படி, குழந்தைகளுக்காக, 1972ல், 'கோகுலம்' இதழை துவக்கினார். இதில், வாண்டுமாமா, ரேவதி மற்றும் அழ.வள்ளியப்பன் போன்றோர் எழுதிய அறிவியல் வரலாறு, கதை, கட்டுரை, கவிதைகள் இடம் பெற்றன.
கடந்த, 1981ல் பெண்களுக்காக, 'மங்கையர் மலர்' இதழும், 1988ல் ஆங்கிலத்தில், 'கோகுலம்' இதழும் துவக்கப்பட்டது.
கடந்த, 1993ல் கல்கி இதழின் ஆசிரியர் பொறுப்பை, கி.ராஜேந்திரனின் மூத்த மகள் சீதா ரவி ஏற்று, சாதனைகள் பல புரிந்தார்.
கடந்த, 2006ல் கி.ராஜேந்திரனின் இரண்டாவது மகளான நான், 'மங்கையர் மலர்' ஆசிரியர் பொறுப்பையும், பின், கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குனராகவும், செயல்பட்டு வருகிறேன்.
நீங்கள் பொறுப்பேற்ற பின் செய்த மாற்றங்கள் என்ன?
கடந்த அக்., 2011ல், 'தீபம்' ஆன்மிக இதழ் துவங்கப்பட்டது. 2012ல் கல்கி குழும பத்திரிகைகளின் தோற்றம், அமைப்பு, பொருளடக்கம் புது பொலிவோடு மாற்றி அமைக்கப்பட்டன. செப்.,2013ல் மாத இதழாக இருந்த, 'மங்கையர் மலர்' மாதமிருமுறை வரும் இதழானது.
அவ்வப்போது, பல மாற்றங்கள் செய்து வந்தாலும், அடிப்படை கொள்கையாக தேச நலனை முன் வைத்து, நடுநிலைமை தவறாது செயல்படுகிறது கல்கி இதழ்.
கல்கி பவள விழா ஆண்டின் போது நீங்கள் ஆசிரியராக இருப்பதை எப்படி கருதுகிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் கருதுகிறேன். நான் மட்டுமல்ல, கல்கி குழுமத்தின் ஆசிரியர் குழு மற்றும் எல்லா பணியாளர்களும் பெருமையாக கருதுகின்றனர்.
கல்கி குழுமத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன?
இப்போது இருக்கும் குழும பத்திரிகைகளோடு, வாய்ப்புள்ள புதிய துறைகளின், புதிய பத்திரிகைகளை வெளியிடும் எண்ணம் இருக்கிறது. மேலும், மின்னணு, இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, டிஜிட்டல் முறையிலும், காலடி தடம் பதிக்க விரும்புகிறோம்.
கல்கி இதழில் வெளி வந்து பின், சாகித்ய அகாடமியின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகள் வென்ற படைப்புகள்:
கல்கியின், 'அலை ஓசை' (1956) ராஜாஜியின், 'சக்கரவர்த்தி திருமகன்' (1958), அகிலனின், 'வேங்கையின் மைந்தன்' (1960).
கல்கியின், 'பார்த்திபன் கனவு' தொடர்கதை, ஜெமினி கணேசன் - வைஜெயந்தி மாலா நடிப்பிலும், கல்கி இதழில் வெளிவந்த, உமா சந்திரனின், 'முள்ளும் மலரும்' தொடர்கதை, ரஜினிகாந்த் - ஷோபா நடிப்பிலும் திரைப்படங்களாக வெளிவந்தன.
சென்னை அடையாறு லாட்டிஸ் பிரிட்ஜ் சாலையின் ஒரு பகுதிக்கு, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை என்று பெயர்.
கல்கி குழும பவள விழா கொண்டாட்ட சிறப்புகளில் ஒன்று, கல்லூரி மாணவர்களுக்காக இதழியல் பயிற்சி! தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பயிற்சியை வழங்கவிருக்கிறது கல்கி குழுமம்.
திரைப்பட தொழில் நுட்பம் எளிமையாக, கைக்கெட்டும் தொலைவில் வந்து விட்டதன் பலனாக, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தங்கள் படைப்புகளை குறும்பட வடிவில் வெளியிட விரும்பும் இளைஞர்களின் ஆற்றலை கவுரவிக்கும் வகையில், விரைவில், கல்கி பவள விழா குறும்பட போட்டி அறிவிக்கப்படவிருக்கிறது.
முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மன, உடல் நல சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்குகள், கல்கி குழுமத்தின் சார்பில், விரைவில் நடைபெற உள்ளன.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில், இதுவரை எம்.எஸ்., குறித்த கல்கி இதழில் வெளியான அரிய செய்திகள், புகைப்படங்களை தாங்கிய ஒரு மலரும், வெளியிடப்படவிருக்கிறது.
தொகுப்பு : எஸ்.ரஜத்