திரையிசையின் மென்முகம் | காலச்சுவடு | Kaalasuvadu | tamil weekly supplements
திரையிசையின் மென்முகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஆக
2015
00:00

சில நாட்களுக்கு முன் யதேச்சையாய் யூட்யூபில் துழாவிக் கொண்டிருந்தபோது, ஒரு நாதஸ்வர இசைத்துணுக்கு கேட்கக் கிடைத்தது. அமரர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் வாசித்தது. ஆபோகி ராக ஆலாபனையில் தொடங்கி அமர்க்களமாகத் தொடர்ந்தது. பாடலுக்கு வந்து சேர்ந்தபோது இனிய அதிர்ச்சியை உணர்ந்தேன். ஆமாம், விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான 'கலைக்கோயில்' படத்தில் இடம்பெற்ற 'தங்கரதம் வந்தது வீதியிலே' பாடல் அது!

ஆமாம். எம்.எஸ். விஸ்வநாதன் என்ற இசை விஸ்வரூபம், திரையிசையோடு மட்டும் மீந்துவிடுவது அல்ல.

திருவுருக்களின் மரணத்தையொட்டி அஞ்சலிக் கட்டுரைகளும் இழப்பின் பெறுமானத்தால் கனத்த பாராட்டு மொழிகளும் பொங்கிப் பிரவகிப்பது இயல்புதான். அநேக பிம்பங்கள் இந்தப் பாராட்டுகளின் சுமை தாளாமல் சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். அண்மையில் காலஞ்சென்ற எம்.எஸ். விஸ்வநாதன்அவருக்குச் சூட்டப்பட்ட / சூட்டப்படவிருக்கிற புகழுரைகள் அனைத்துக்கும் அருகதையுள்ளவர். அவற்றைவிடவும் பலமடங்கு அதிகமான பெறுமானம் உள்ளவர். இத்தனைக்கும் அவர் திரையிசையில் தீவிரமாக இயங்குவது சிறுகச் சிறுக ஓயத் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது!

கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையிசையில் தன்னிகரற்றுக் கோலோச்சிய விஸ்வநாதனின் அருமைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அடுக்குவது எல்லாருக்கும் சாத்தியமில்லை - பெரும் இசை மேதையாகவு மிருந்து, தமிழ்த் திரைப்பாடல்களில் ஆசையோடு தோய்ந்தவராகவும் உள்ள ஒருவர் மட்டுமே செய்யக் கூடிய காரியம் அது. ஆனால், விஸ்வநாதனின் மேதமையை அளக்கத்தான் இந்த நிபந்தனை. அவருடைய இசையில் மயங்குவதற்கு எளிய மனமே போதுமானது.

மிகை நடிப்பு, மிகை ஒப்பனை, மிகையான நிகழ்வுகளின் தொகுப்பு என்று தமிழ்த் திரையுலகத்தின் சகல அங்கங்களும் யதார்த்த நிலையை மீறி இருந்த காலகட்டத்தில் திரையுலகத்தில் நுழைந்தவர்

எம்.எஸ்.வி சற்றும் மிகை தொனிக்காத மெட்டுகள், இடையிசைகள் மூலம் தமது பிரத்தியேக இடத்தை நோக்கிய பயணத்தை நடத்தியவர்.

அந்த நாளில் தமிழ்த் திரையிசை நாயகர்களாகத் திகழ்ந்தவர்களில் முக்கியமானவர்கள் என்று எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன், ஜி. ராமநாதன் போன்றவர்களைச் சொல்லலாம். மிகச் சில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலும் சாஸ்

திரீய இசையின் அடிப்படையிலான மெட்டுகளையே அவர்கள் அமைத்துக்கொண்டிருந்தார்கள்.

அடுக்குமொழி வசனப் பிரவாகம் மெல்லமெல்ல நடை முறை யதார்த்த வாழ்வின் பேச்சுமொழியை ஒட்டியதாக மாறத் தொடங்கி, மையப் பாத்திரங்களின் இயல்பில் நாடகத்தன்மை குறையத் தொடங்கியபோது, அதற்கேற்ற படி திரையிசையின் முகமும் மாறுவதற்கு எம்.எஸ்.வியின் மெட்டுகள் உதவிகரமாய் இருந்தன.

அடுத்த தலைமுறை இயக்குநர்கள் தலையெடுத்தபோது அவர்களுடன் இணைந்து நகரத் தொடங்கின அவரது மெட்டுகள். ஒருவிதத்தில், தாளாத முதுமையிலிருந்து வாலிபத்தை நோக்கி எதிரோட்டம் போட்டுவந்தது என்று எம்.எஸ்.வியின் இசையைச் சொல்லலாம்.

'பாசவலை' படத்தில் சி.எஸ். ஜெயராமனின் குரலில் அமைந்த 'அன்பினாலே உண்டாகும் இன்பநிலை' என்ற பாடலுக்கும், தமது திரையிசை வாழ்வின் வயோதிகப் பருவத்தில் 'அவன்தான் மனிதன்' படத்தில் அமைத்த 'அன்பு நடமாடும் கலைக்கூடமே' என்ற பாடலுக்கும் இடையிலான தொலைவே அவர் கடந்து வந்த பாதை. மாறும் தலைமுறைகளுக்கு ஈடுகொடுத்து யௌவனமடைந்து வந்த இசை அவருடையது. 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் 'what a waiting' பாடலை, அதன் இடையே ஒலிக்கும் கித்தார் இசையைக் கோத்த மனத்தின் பிராயத்தை, வயதை, எவ்விதம் நிர்ணயிப்பது!

அதற்காக, சாஸ்திரீய இசையை விட்டு முழுக்க முழுக்க விலகிவந்தவர் அவர் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. திரையிசையில் மிக அதிகம் பயன்பட்ட கல்யாணி, கானடா, சாருகேசி போன்ற ராகங்களோடு அதிகம் புழங்காத ராகங்களையும் தமது மெட்டுக்களில் ஈடுபடுத்தினார். மதுவந்தி என்ற ஒரே ராகத்தில், கறுப்பு - வெள்ளைப் படமான 'காவியத்தலைவி'யில் 'ஒரு நாள் இரவு' என்ற பாடலையும், 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக தமது இறுகிவிட்ட குரலில் டி.எம். சௌந்தரராஜன் பாடிய 'அம்மானை, அழகு மிகும் கண்மானை' பாடலையும் அமைக்கத்தான் செய்தார். ஒரே ராகத்தின் இரண்டு வெவ்வேறு சாயைகள் தொனித்த பாடல்கள். ஒன்றில் ஏக்கமும், மற்றதில் தாபமும் விரவியிருக்கும். (மரபிசை ராகங்கள் திரைமெட்டுக்களாக உருவெடுக்கும்போது வேறு ராகங்களின் சாயலையும் காட்டுவதால் அவை முழுமையானவை அல்ல என்று ஒரு வாதமும் இருக்கிறது - மேற்சொன்ன 'ஒரு நாள் இரவு' பாடல், 'சுமநேச ரஞ்சனி' என்ற ராகத்தில் அமைந்தது என்று ஒரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது!)

ஒரே மெட்டைக் கைவசம் வைத்துக்கொண்டு சின்னச் சின்ன வேறுபாடுகளும், இடையிசையின் வாத்தியக் கோவையில் மேலோட்டமான மாற்றங்களும் செய்து தமது ஆகிருதிக்குப் பொருத்தமேயில்லாத விளம் பரத்தையும் வருவாயையும் ஈட்டும் சமகால இசைக்குன்றுகள் கழுத்து சுளுக்க அண்ணாந்து பார்க்க வேண்டிய உயரத்தில் இருந்த மேதை எம்.எஸ். விஸ்வநாதன்.

அடுத்தடுத்த தலைமுறைகள் வந்து சொற்களுக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறைய ஆரம்பித்துவிட்ட இந்த நாட்களில், கேட்பவர் காதுகளுக்கு ஒரு சொல்லும் தப்பிவிடாதபடி மெட்டும் இசையும் கோத்த பெருமையும் அவருக்குரியது.

மூத்த எழுத்தாளர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, 'கர்ணன்' படப் பாடல்கள் பற்றிப் பேச்சு வந்தது. ஒரேயொரு

தம்பூராவை மட்டும் துணையாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட 'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா'வில் வந்து நின்றது. எழுத்தாளர் சொன்னார்:

தமிழ் மனத்தின் நுட்பமான தந்திகளை மீட்டிவிடக்கூடியவர் கண்ணதாசன். அந்தப் பணியில் கண்ணதாசனுக்கு உறுதுணையாய் இருந்தவை என்று விஸ்வநாதனின் மெட்டுகளைச் சொல்லலாம். தமிழ்ச் சமூகத்தின் சகல உணர்வுகளுக்கும் அவரிடமிருந்து மெட்டுக்கள் பிறந்து வந்தன. தாலாட்டு, துக்கம், தத்துவ விசாரம், ஒப்பாரி, கோலாகலம், பிறந்தநாள், நகைச்சுவை என்று எல்லா மூலைகளுக்கும் சென்று திரும்பின அவை.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே', 'மயக்கமா கலக்கமா', 'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ' என்ற துயரம் மண்டிய பாடல்களும், தமிழ்த் திரையிசை ரசிக மனத்துக்கு ஆறுதலாய் அமைந்து, அதில் நீங்கா இடம்பிடிப்பனவாய் இருந்தன.

பல்வேறுவிதமான இசை வகைகளைக் கையாண்டவர் விஸ்வநாதன். 'தவப்புதல்வ'னில் பி.பி. ஸ்ரீநிவாஸின் குரலில் 'சங்கீத்துகுலோங்கி பஹியா ஹே' என்று எழும்பும் ஹிந்துஸ்தானி மெட்டு அசல் ஹிந்துஸ்தானி மெட்டாகவே ஒலிக்கும். அராபிய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க மெட்டுகளும் தாளவகைகளும் கூட அவருடைய மெட்டுகளில் கலந்து ஒலித்தன.

ஆனால், மொழிமாற்றப் படங்கள் என்று வந்தபோது, மூலமொழிப் பாடல்களைப் பிரதி செய்ததில்லை அவர். 'ஆராதனா' என்ற பெயரில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்த திரைப்படம் 'சிவகாமியின் செல்வ'னாகத் தமிழ் வடிவெடுத்தபோது, ஹிந்தி மெட்டுகளுக்குச் சமமாக தமிழ் மெட்டுகளும் தமிழ்நாட்டில் பிரபலமடைந்தன. 'எஸ்.டி. பர்மனின் துயரம் பொங்கும் குரலில் பதிவான 'காஹெ

கொரோயே' என்ற பாடலா, எம். எஸ். விஸ்வநாதனின் ஆறுதலான குரலில் பதிவான 'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே வா' இவற்றில் எது உயர்வானது என்று நினைக்கிறீர்கள்' என்று ஒரு நண்பர் கேட்டார் - 'அப்படி ஒப்பிடுவதே சரியில்லை. இரண்டு வெவ்வேறு மொழிப் பிரதேசங்களின், இசைப் பாரம்பரியங்களின், ரசனை உணர்வின் செல்வாக்கில் உருவான இரண்டு தனித் தனி மேதைகளை எதற்காக ஒப்பிடுவது?' என்று பதிலுக்குக் கேட்டேன்.

பத்தே நிமிடத்தில் போடப் பட்ட மெட்டுகள், மாதக் கணக்கில் காத்திருந்து அமைக்கப்பட்டவை, முன்னூறுக்கும் அதிகமான கருவிகளைப் பயன்படுத்தியவை, மூன்றே கருவிகளை வைத்து உருவாக்கப்பட்டவை என்று அவருடைய மெட்டுக்களைப் பற்றி விதவிதமான தகவல்கள் உண்டு. உச்சமாக ஒரேயொரு தம்பூராவை மட்டும் பயன்படுத்தி அமைத்த பாடல் மேலே குறிப்பிட்ட 'கர்ணன்' படப் பாடல். இந்தப் புறத் தகவல்கள் அத்தனைக்கும் அப்பால், எம்.எஸ். விஸ்வநாதன் என்ற கலையுச்சத்தின் வீரியமும் சீர்மையும் இயங்கியிருக்கும் விதமே கவனத்துக்குரியது.

தமது மெட்டுக்களுக்குப் பாடகர்களைத் தேர்வு செய்வதிலும், இடையிசைக்குக் கருவிகளைத் தேர்வு செய்வதிலும் தமக்கேயுரிய தனித்துவம் கொண்டிருந்தவர். 'கர்ணன்' படத்தில் ஸாரங்கி வாசிக்க பண்டிட் ராம்நாராயணனையும், 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடலுக்கு வீணை வித்வான் பிச்சுமணியையும், 'மிருதங்கச் சக்ரவர்த்தி'யில் மிருதங்க விற்பன்னர் உமையாள்புரம் சிவராமனையும் ஈடுபடுத்தி அந்தப் படைப்புகளின் சிரஞ்சீவித்தன்மைக்கு வழியமைத்தவர்.

ஒரு பாடகராக எம்.எஸ். விஸ்வநாதன் எட்டிய எல்லைகளும் சாமானியமானவை அல்ல. அவர் பாடிய பாடல்கள் இன்னொரு குரலில் கற்பனை செய்தே பார்க்கவியலாத அளவு தனித்துவம் வாய்ந்தவை. தமது இசையிலும், அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் அவர் பாடிய பாடல்களில் கிட்டத்தட்ட அனைத்துமே பிரசித்தி பெற்றவை.

முதன்முதலாக அவர் முழுமையாகப் பாடிய 'பாசமலர்' படத்தின் 'அன்பு மலர் - ஆசை மலர்' பாடலில், 'கன்றின் குரல் கேட்டு தாய்ப்பசு ஓடுமே' என்று அவருடைய விருத்தக் குரல் உயர்ந்து கடைசிச் சொல்லில் மெலிதாக உடைவுறும். உணர்ச்சியின் உச்ச வெளிப்பாடு அது. இயல்பாகவே அசரீரித் தன்மை கொண்ட குரலில் விட்டேற்றியாகப் பாடுவது போன்ற பாவனையுடன் அவர் பாடிய பாடல்கள் மிகமிக அலாதியானவை. தீவிரமான பாவத்தில் 'வாழ்வு என் பக்கம்' படத்தின் 'திருப்பதி மலையில் ஏறுகிறாய்' பாடலையும், குடிபோதையில் பாடுவதாக 'மேயர் மீனாட்சி'யில் வாணி ஜெயராமுடன் இணைந்து 'இருந்தா நல்லா இரு' பாடலையும் சமமான வசீகரத்துடன் பாடியவர் அவர்.

எம்.எஸ். விஸ்வநாதனின் அத்தனை மெட்டுக்களுக்கும் அவரையே உரிமையாக்கிவிட முடியாது - ராமமூர்த்தியின் பங்கை மறுப்பதற்கில்லை என்று அடிக் கோடிட்டுச் சொல்பவர்களும் உண்டு. இருவரும் பிரிந்தபிறகு தனித்தனி இசையமைப்பாளர்களாக அவர்கள் பரிமளித்த விதத்தை வைத்து நாம் மேலதிகமாகக் கொஞ்சம் அறிந்துகொள்ள முடியும்.

பின்னணி இசை கோப்பதில் அடுத்த தலைமுறை கொண்டிருந்த திறன், விஸ்வநாதனிடம் இருந்ததா என்பதும் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான இன்னொரு கேள்வி. 'இல்லை' என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிட முடியாது. காட்சிகளுக்கான பின்னணி இசை பற்றிய பிரக்ஞையும் அக்கறையும் கொண்ட இயக்குநர்கள் உருவாவதற்கு தமிழ்த் திரையுலகம் 1980களின் ஆரம்பம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னமுமே கூட இசையின் இடத்தில் இரைச்சலும் மௌனமும் நிசப்தமும் தேவைப்படும் இடத்தில் அடர்த்தியான வாத்திய இசையும் பின்னணியாக ஒலிப்பதைப் பார்க்க முடிகிறதே.

தன்னியல்பாக சாஸ்திரீய இசையில் அமிழ்ந்து கிடந்த ஒரு சமூகத்தை, இசையின் நீர்த்த வடிவத்தை நோக்கிக் கொண்டுசெலுத்தியதில் தமிழ்த் திரைப்படவுலகுக்குப் பெரும் பங்கு உண்டு என்ற குற்றச்சாட்டு மரபிசை ஆர்வலர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. ஆனால், திரையிசை முழுக்க முழுக்க மேலோட்டமானதாக, உள்ளீடற்றதாக ஆவதை அரைநூற்றாண்டுக் காலம் ஒத்திப்போட்டவர் என்ற பெருமையை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு தாராளமாக வழங்கலாம்.

பொதுவாக, மேதைகள் அமரராகும்போது அவர்கள் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள் என்ற பிரலாபம் ஓங்கி ஒலிக்கும். அமரர் எம்.எஸ். விஸ்வநாதன் விடுத்துச் சென்றிருப்பது ஒரு மகா மண்டபம். ஒலியாலான மகத்தான மாளிகையின் இதயப்பகுதியில் அமைந்திருப்பது. புழுங்கும் மனத்துடன் உள்ளே நுழைகிற எவருக்கும் தண்மையை, இளைப்பாறுதலை தரக்கூடிய வரலாற்றுச் சின்னம்.

அ. பரஞ்சோதி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X