ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனம் தன் 20 ஆண்டு செயல்பாட்டினைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் 20 நகரங்களில் வாழும் மக்களுக்கு இணையத் தொடர்பினை இலவசமாக வழங்குகிறது. இதற்கென இணைய வசதி தரும் சர்வர்களுடன் கார்களை வடிவமைத்து உள்ளது. இந்த திட்டத்தினை “சக்கரங்களில் இணையம்” (Web on Wheels) என அழைக்கிறது. இந்த WOW கார்களின் தொடர்பு எல்லையில் உள்ளவர்கள், இலவசமாகத் தங்கள் சாதனங்கள் வழியாக இணையத்தினைத் தொடர்பு கொள்ளலாம். இதுவரை இணைய இணைப்பினை அனுபவிக்காதவர்கள், தங்களிடம் உள்ள மொபைல் போன்கள் வழியாக, இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்தலாம். வரும் 10 மாதங்களில், ஆக்ராவில் தொடங்கி, 20 நகரங்களுக்கு இந்த கார் பயணிக்கும். அந்தந்த நகரங்களில் தங்கி, இணைய இணைப்பினை வழங்கும். ஒவ்வொரு நகரத்திலும், பல இடங்களில், 20 நாட்கள், இந்த கார் நிறுத்தப்படும். ஆக்ராவினை அடுத்து, கான்பூர், வாரணாசி மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களுக்கு இது செல்லும்.
ஒரு ஊரை இந்தக் கார் அடைந்தவுடன், ஆப்பரா வை பி தொடர்புடன், உங்கள் மொபைல் சாதனத்தினை இணைத்து, இணையத்தைப் பயன்படுத்தலாம். இலவசமாகவே 20 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இந்த நேரத்தில் பரிமாறிக் கொள்ளும் டேட்டாவிற்கு அளவு இல்லை.
இந்த கார் வழங்கும் இணைய இணைப்பினைப் பயன்படுத்த, பயனாளர்கள், தங்கள் மொபைல் போனில், வை பி அமைப்பினை இயக்கி, ஆப்பரா மினி இலவச வை பி இணைப்புடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஆப்பரா மினி பிரவுசரை இயக்கியவுடன், இணைய இணைப்பு பெறுவதற்கான மெனு காட்டப்படும். அதில் தேவைப்படும் தகவல்களை நீங்கள் தந்தால், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் வழங்கப்படும். பின் 20 நிமிடங்கள், இலவசமாக இணையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இது குறித்து ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா பிரிவின் துணை தலைவர் சுனில் காமத் கூறுகையில், இன்று பலர் இணைய இணைப்பு தரக்கூடிய மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இணையத்துடன் இணைந்து செயல்படுவது எப்படி என்று அறியாமலும், அதற்கு அதிகம் செலவாகும் என்ற அச்சத்துடனும், இணையம் குறித்து முயற்சிக்காமலேயே வாழ்கின்றனர். அவர்களின் அச்சத்தைப் போக்கி, இணையம் என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்று அவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே, ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனம், இந்தியாவில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.