கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், கம்ப்யூட்டரில் டூயல் பூட் முறையில், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் பதிந்து இயக்க முடியுமா? முடியும் எனில், அதே போல விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தையும் இணைத்து இயக்க முடியுமா?
என். தினேஷ், திருப்பூர்.
பதில்:
இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளுடன் பயன்படுத்தியது போல, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை டூயல் பூட் முறையில் பதிந்து இயக்கலாம். ஓர் அன்பான எச்சரிக்கை. இரண்டுமே மிக மெதுவாகத்தான் இயங்கும். அதே போல, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்துடனும் இதனை இயக்கலாம். ஆனால், ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். விண்டோஸ் 10 உங்களுக்கு இலவசமாகத் தேவை என்றால், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் மீது அப்கிரேட் ஆகத்தான் விண்டோஸ் 10 தரப்படுகிறது. விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 உரிமத்தின் மீதுதான், விண் 10க்கான உரிமம் அப்கிரேட் செய்யப்பட்டு தரப்படுகிறது. எனவே, இலவசமாக விண் 10 பெறப்படும் நிலையில், விண் 7/8.1 ஆகியவற்றை டூயல் பூட் முறையில் வைத்து இயக்க முடியாது. இவை இயங்கும் கம்ப்யூட்டரில், கட்டணம் கொடுத்து விண்டோஸ் 10 வாங்கிப் பதிந்து இயக்குவதாக இருந்தால், இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேற்கொள்ளலாம்.

கேள்வி: கூகுள் குரோம் பிரவுசர் வழியாக இன்டர்நெட்டிலிருந்து ஏதேனும் பி.டி.எப். பைல் ஒன்றை இறக்கம் செய்தால், அது பிரவுசரிலேயே திறக்கப்படுகிறது. என்னுடைய பி.டி.எப். ரீடரில் திறக்கப்படவில்லை. இது எதனால்? இதனை எப்படி மாற்றுவது? குரோம் பிரவுசரை ரீ இன்ஸ்டால் செய்தும் சரியாகவில்லை. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த பிரச்னை ஏற்படவில்லை. அறிவுரை கூறவும்.
கே.பிரியா சேகர், திருவண்ணாமலை.
பதில்:
பிரியா, உங்கள் பிரச்னை ப்ளக் இன் புரோகிராமால் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். குரோம் பிரவுசரைத் திறந்து அதன் தேடல் கட்டத்தில் “about.plugins” என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும் காட்டப்படும். இதில் Crome PDF viewer என்பதைத் தேடிப் பெற்று, அருகே உள்ள Disable என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் பிரச்னை தானாகத் தீர்க்கப்படும்.

கேள்வி: ஸ்கிரீன் டிப்ஸ் என்பது என்ன? நம் திரையில் தோன்றும் அனைத்து வழி காட்டல்களையும் ஸ்கிரீன் டிப்ஸ் என அழைக்கலாமா? அல்லது குறிப்பிட்ட ஒன்றை மட்டும் இது குறிப்பிடுகிறதா? சிறியதாக விளக்கவும். இது குறித்து எங்கள் குழுவில் சின்ன குழப்பம் உள்ளது. இது போன்ற டிப்ஸ்களை நாம் நிறுத்த முடியுமா என்பதற்கும் டிப்ஸ் கொடுக்கவும். நன்றி.
என். கோகிலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்:
இதில் என்ன தயக்கம்? குழப்பம்? கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகும் அனைவருக்கும் இந்த குழப்பம் இருக்கத்தான் செய்யும். இதோ சிறிய அளவிலான விளக்கத்தினைத் தருகிறேன்.
வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் தகவல் அல்லது டிப்ஸ் அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயக்கத் தொடங்கியதில் இருந்து, மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். இதனை நிறுத்த முடியுமா என்றும் கேட்டிருக்கிறீர்கள். நிறுத்தலாம். அந்த எண்ணம் இருந்தால், கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும்.
வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
1. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
2. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
3. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: நான் விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 10 க்கு இலவசமாக மாறிக் கொள்ள பதிவு செய்து வைத்திருக்கிறேன். இப்போது, கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா பைல்களை, ஏதேனும் ப்ளாஷ் ட்ரைவிற்கு மாற்றிக் கொள்ளவா? ஒன்றுக்கு மேற்பட்ட ப்ளாஷ் ட்ரைவ் தேவைப்படும். இல்லை எனில் ஒன் ட்ரைவ் பயன்படுத்தலாமா? விண் 10க்கு மாறிய பின்னர், பழைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு, ஒன் ட்ரைவிலிருந்து டேட்டா பைல்களை மாற்றிக் கொள்ளலாமா? இந்த வழி பாதுகாப்பானதா? அவசியம் வழி காட்டவும்.
கே.எஸ். பார்த்த சாரதி, சென்னை.
பதில்
: நீங்கள் திட்டமிடும் வழியே சிறந்தது. தாராளமாக ஒன் ட்ரைவ் வசதியைப் பயன்படுத்தலாம். பழைய ஸ்கை ட்ரைவ் தான், இப்போது ஒன் ட்ரைவ் என அழைக்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களுடைய மல்ட்டி மீடியா மற்றும் டாகுமெண்ட் பைல்களைத் தானாகவே, ஒன் ட்ரைவில் பேக் அப் பைல்களாக சேவ் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரிலும் இவற்றைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் இதோ:
முதலில் PC Settings செல்லவும். பின்னர் SkyDrive தேர்ந்தெடுக்கவும். Save documents to SkyDrive by default என்பதனை இயக்கி வைக்கவும். இதுதான் ஒன் ட்ரைவ். எனவே, குழப்பமடைய வேண்டாம். நீங்கள் எந்த புதிய டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்தாலும், அது மாறா நிலையில் OneDrive/SkyDriveல் சேவ் செய்திடப்படும். உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரிலும் சேவ் செய்து கொள்ளலாம். OneDrive/SkyDriveல் சேவ் செய்யப்பட்ட பைல் மீது ரைட் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் சேவ் செய்திடும் வகையிலும் அமைக்கலாம். இது நீங்கள் இணைய இணைப்பில் இல்லாத போது பயன்படும்.
இனி, உங்களுடைய கேள்விக்கு வருவோம். ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஹார்ட் ட்ரைவிலும் உங்கள் பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது தானே. இருப்பினும், க்ளவ்ட் ட்ரைவில் சேமித்து வைப்பதுவும் நல்லதுதான். நேரம் மற்றும் சாதனங்கள் இருப்பின், ஒன்றுக்கு இரண்டாக சேமித்து வைக்கலாம். மீண்டும் சொல்கிறேன். ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தி டேட்டா பைல்களை சேவ் செய்வதில் எந்த பிரச்னையும் ஏற்படாது. மீண்டும் விண் 10 சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பெற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: செக்யூர் பூட் (Secure Boot) என்ற வகையில் கம்ப்யூட்டர் ஒன்றை பூட் செய்திட என்ன வேண்டும்? எந்த பங்சன் கீயை அழுத்தி இதனை மேற்கொள்ள்லாம். இது என்னவென்றே புரியவில்லை. நான் பூட் செய்திடுகையில், எப்8 அழுத்திப் பார்த்தேன். இது கிடைக்கவில்லை. சற்று விளக்கவும்.
எம். தியாகராஜன், உடுமலைப்பேட்டை.
பதில்:
முன்பு ஒரு வாசகருக்கு இதே போன்ற சந்தேகத்தின் போது விளக்கம் அளித்திருந்தேன். அதனையே இப்போதும் தருகிறேன். செக்யூர் பூட் என்பதை ”பாதுகாப்பான கம்ப்யூட்டர் இயக்க தொடக்கம் (Secure Boot)” எனக் கொள்ளலாம்.
பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் இணைந்த அமைப்பு Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும். இதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதனை முழுமையாகப் பின்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய http://www.makeuseof.com/tag/what-is-uefi-and-how-does-it-keep-you-more-secure/ என்ற இணைய தளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படிக்கவும்.

கேள்வி: இணையப் பயன்பாட்டிற்கு குரோம் பிரவுசரை, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பயன்படுத்துகிறேன். திடீரென சில டூல்பார்கள், பிரவுசர் திறந்தவுடன் காட்டப்படுகிறது. இது சில விளம்பரங்களால் வந்ததா? அல்லது நானே, இணையத் தேடல்களின் போது, அனுமதி அளித்தேனா என்று தெரியவில்லை. இவற்றை எப்படி அறிவது? இதனால், கெடுதல்கள் ஏற்படுமா?
ஆர். சிவக்குமார், கும்பகோணம்.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டரில், மால்வேர் என்னும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் ஒன்று வந்திருக்கலாம். அதன் வேலையே இது. இது நல்ல நிறுவனம் அனுப்பிய நல்ல டூல் பாராகவும் இருக்கலாம். இதனை நீங்கள் அந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று, நல்லதுதான், பயன் அளிக்கும் என உறுதி செய்தால், அதனை வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பயன்படுத்தப் போவதில்லை எனில், நீக்குவதே நல்லது. ஏனென்றால், இது மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இருக்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடியாக நீக்கவும். ஆனால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சயம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.
சில வேளைகளில், இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கையில், வேறு ஒரு இணையதளம் செல்லுமாறு நாம் தூண்டப்படுவோம். கம்ப்யூட்டரை ஹேக் செய்திடுபவர்கள் பலர் இதனைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு மாற்றுவழிப் படுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்ப்பதற்காக நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கிளிக் செயல்பாட்டிற்கும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இது போன்ற நிகழ்வுகளும், போலியான டூல்பார்களால் மேற்கொள்ளப்படும். எனவே மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி இந்த டூல் பார்களை நீக்கவும்.

கேள்வி: அண்மையில் அவசரமாக மைக்ரோசாப்ட் நிறுவனம், வழக்கத்தில் உள்ள கால அட்டவணைக்கு மாறாக பேட்ச் பைல் ஒன்றை அனுப்பியது. விண்டோஸ் 10க்கு மட்டும் என சில; பழைய விண்டோஸ் பதிப்புகளுக்கும் சில என அவை கிடைக்கப் பெற்றதாகப் படித்தேன். அதில் Zero Day Exploit எனச் சில மால்வேர் மற்றும் வைரஸ் குறித்து தகவல்கள் இருந்தன. அப்படியானால், அந்த வைரஸ் அல்லது மால்வேர் வரவில்லையா? அல்லது எந்த தினம் எனத் தெரியாமல் வந்துள்ளதா? இதன் பொருள் என்ன?
என். கே. கலிய பெருமாள், சேலம்.
பதில்:
நல்ல சந்தேகம். எழுதியமைக்கு நன்றி. இந்த Zero Day Exploit குறித்து, பலர், பலவிதமாகக் கருத்து கொண்டுள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி நமக்கு தகவல் அளிப்பதற்காக உருவாக்கிய சொல். வைரஸ் ஒன்று புதியதாக வந்தால், அதனைக் கண்காணித்து வரும் பல ஆண்ட்டி வைரஸ்
நிறுவனங்கள், அதற்கான தடுப்பு புரோகிராமினைத் தயார் செய்திட சிறிது காலம் எடுத்துக் கொள்ளலாம். அதுவரையில், அந்த வைரஸ் அல்லது மால்வேர் தன் செயல்பாட்டினைத் தடையின்றி மேற்கொள்ளும்.
இந்த கால இடைவெளியைத் தான் Zero Day Exploit எனக் குறிக்கின்றனர். ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பாளர்கள் அளிக்கும் அதனைத் தடுக்கும் புரோகிராமினை, வைரஸ் டெபனிஷன் என அழைப்பார்கள்.
இந்த பைலைக் கொண்டு நாம் அப்டேட் செய்து கொண்டால், அல்லது கம்ப்யூட்டர் தானாக அப்டேட் செய்து கொண்டால், நாம் குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். இங்கு Day எனக் குறிப்பிடுவது வைரஸ் உருவான நாள் அல்ல. நாம் எந்த பாதுகாப்பும் இல்லாமல், இந்த வைரஸை எதிர்கொள்ள வேண்டிய நாள் தான் அது. Zero என்பது நாம் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், Zeroவாக இருக்கிறோம் எனவும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X