ஆப்பிள் தந்த புதிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2015
00:00

சென்ற செப்டம்பர் 9 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், 7,000 பேர் அமரக் கூடிய Bill Graham Civic Auditorium அரங்கத்தில், தான் நடத்திய விழாவில், ஆப்பிள் நிறுவனம் பல புதிய சாதனங்களையும், அறிமுகமாக இருக்கும் அதன் புதிய தொழில் நுட்பங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. முப்பரிமாண தொடுதல் கொண்ட புதிய ஐபோன் முதல், செறிவான திறன் கொண்ட புதிய ஐ பேட் சாதனம், ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ், ஆப்பிள் வாட்ச் என இன்னும் பல புதிய அதிசயங்கள் அங்கு காட்டப்பட்டன. அவை குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ்: ''நமக்குப் பழகிய தோற்றத்தை இந்த போன்கள் கொண்டிருந்தாலும், நாங்கள், இவற்றின் அனைத்து அம்சங்களையும் மாற்றி விட்டோம்” என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி, டிம் குக் கூறினார். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை இதுவரை நாம் பயன்படுத்தி வந்த முறையில், தற்போது புதிய மாற்றம் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. அது, முப்பரிமாண தொடுதல் கொண்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ். இது, இந்த இரண்டு போன்களிலும், தகவல்களைத் தருவதில் ஒரு புதிய பரிமாணத்தைத் தர இருக்கிறது. போனின் திரை, வெவ்வேறு வகையான தொடுதல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது.
எடுத்துக்காட்டாக, போன் திரையில் சற்று கூடுதலாக அழுத்தத்தினைத் தந்தால், ஓர் அப்ளிகேஷனில் போட்டோ ஒன்று காட்டப்படும். இன்னொன்றில் பைல் ஒன்று இன்னொரு அப்ளிகேஷன் வழியே திறக்கப்படும். டாகுமெண்ட் ஐகானில் சற்று அதிகமாக அழுத்தினால், அதன் முன் காட்சி காட்டப்படும். மின் அஞ்சலில் உள்ள முகவரியில் அழுத்தினால், மேப் ஒன்று திறக்கப்படும்.
ஆனால், அதற்காக, இந்த போன்களின் திரை அளவு பெரிதாக்கப்படவில்லை. சென்ற ஆண்டு, எந்த அளவில், இவற்றின் திரை இருந்தனவோ, அதே அளவில் தான் இப்போதும் இவை உள்ளன.
இந்த இரண்டு போன்களிலும் இன்னொரு முக்கிய அம்சம், இதில் தரப்பட்டுள்ள கேமராக்களாகும். ஐபோன் 4 எஸ் போனில், 8 எம்.பி. கேமரா சென்சார் கொடுத்து, அதனையே தொடர்ந்து தந்தது ஆப்பிள். தற்போது இதன் மெகா பிக்ஸெல் திறன் உயர்த்தப்படுள்ளது. இந்த இரண்டு போன்களிலும் 12 எம்.பி. பின்புறக் கேமராவும், 5 எம்.பி. முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் போகஸ் பிக்ஸெல்களின் எண்ணிக்கை 50% அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ போகஸ் மிக வேகமாக இயங்கும். இந்த கூடுதல் அம்சங்களினால், இதுவரை இல்லாத வகையில், ஆப்பிள் போன்கள் மிகத் துல்லியமாக போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும். ஆப்பிள் போன்களுக்கே உரிய பனாரமிக் ஷாட் என அழைக்கப்படும் “அகன்ற காட்சி” புகைப்படங்கள், 63 மெகா பிக்ஸெல் ரெசல்யூசனில் கிடைக்கும். வீடியோஸ் 4கே தன்மையில் கிடைக்கும்.
செல்பி கேமராவும், இம்முறை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களில், இது 1.2 எம்.பி. திறனுடன் இருந்தது. இம்முறை, இது 5 எம்.பி. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்புறக் கேமராவில் எல்.இ.டி. ப்ளாஷ் இல்லை. இருப்பினும், Retina Flash என்னும் தொழில் நுட்பத்தினை, ஆப்பிள் இந்த போன்களில் தந்துள்ளது. இந்த தொழில் நுட்பம், திரையின் ஒளிப் பொலிவினை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. இது பின்புறம் உள்ள கேமராவின் டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் திறனுக்கு இணையானது என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
இந்த கேமராக்களில், Live Photos என்னும் புதிய தொழில் நுட்பத்தினையும், ஆப்பிள் இந்த கேமராக்களில் தந்துள்ளது. போட்டோ ஒன்றைக் கிளிக் செய்வதற்கு முன்னும், பின்னும் 1.5 விநாடி விடியோ காட்சியினையும் பதிவு செய்கிறது. எடுத்த போட்டோவினை, மீண்டும் பார்க்கையில், போட்டோவிற்கு முன்னும் பின்னும், இந்த நொடிப்பொழுது விடியோ காட்டப்படுகிறது.
அப்ளிகேஷன்களை இயக்கும் ப்ராசசர் சக்தி, இப்போது 70% அதிகரிக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை உணர்ந்து செயல்படும் செயலி, இரண்டு மடங்கு கூடுதலான வேகத்தில் இயங்குகிறது. போன்களில், புதியதாக இளஞ்சிகப்பு கலந்த தங்க வண்ண போன் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது. இது ஐபோன் 6 எஸ் ப்ளஸ் போனில் மட்டும் வழங்கப்படுகிறது. வழக்கம் போல, இவை இரண்டும் ஸ்டாண்டர்ட் சில்வர், கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன.
வடிவத்தில், முன்பு வந்த போன்கள் போல இருந்தாலும், இவற்றில் சற்று பலமான கெட்டிப் பொருளால், (aircraft-grade 7000 aluminium alloy) மேலே உள்ள ஷெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அடர்த்தியில் குறைவாகவும், எடையில் சிறிதளவாகவும் இருந்தாலும், கடினமான பொருளாக இருந்து போனைக் காத்து நிற்கும். அதே போல, திரை மேல் உள்ள கண்ணாடியும் கடினமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
ப்ராசசர், விரல் ரேகை உணர் செயலாக்கம், 4ஜி நெட்வொர்க் செயல்பாடு, வை பி செயல்பாடு என அனைத்து செயலிகளும் இரு மடங்கு கூடுதலாகத் திறன் கொண்டு செயல்படுகின்றன.
அமெரிக்காவில், வழக்கமாக, ஏதேனும் மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையுடன் தான் மொபைல் போன்களை வாங்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாத மொபைல் போன்கள் ஒரு சில மாடல்களில் மட்டுமே தரப்படும். இம்முறை இந்த இரண்டு போன்களும், கட்டுப்பாடு இல்லாத நிலையிலும் விற்பனைக்கு வருகின்றன. ஐபோன் 6 எஸ் 16 ஜி.பி. 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. முறையே டாலர் 649, 749 மறும் 849 என்ற விலையில் கிடைக்கின்றன. இதே போல ஐபோன் 6 எஸ் ப்ளஸ், இதே ஸ்டோரேஜ் அளவிற்கு முறையே, 749, 849 மற்றும் 949 டாலர் என்ற விலையில் கிடைக்கும். இந்தியாவில் இந்த போன்களின் விலையினைச் சில வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 64 ஜி.பி. விலை ரூ. 63,988. ஐபோன் 6 ப்ளஸ் 16 ஜி.பி. ரூ. 50,746. ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 16 ஜி.பி. ரூ. 71,500.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில், இந்த போன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ல் தொடங்கியது. இவை கடைகளில் செப்டம்பர் 25 முதல் கிடைக்கத் தொடங்கும். இந்த புதிய மாடல்கள், இந்தியாவிற்கு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஐபேட் ப்ரோ: தன் ஐ பேட் சாதனத்தின் திரையை 12.9 அங்குலமாக அதிகரித்து, ஆப்பிள் புதிய ஐபேடைத் தந்துள்ளது. இந்த திரை 56 லட்சம் பிக்ஸெல் திறன் உடையதாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 2732 x 2048 பிக்ஸெல்களைக் கொண்டுள்ளது. இதன் புத்துணர்வு செயல்பாடு, ரெப்ரெஷ் ரேட், புதியதாகக் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
இசைப்பாடல்கள் மற்றும் விடியோ படங்களை இயக்குகையில், அதற்கான ஒலி, புதிய ஐபேட் ப்ரோவில், நான்கு ஸ்பீக்கர்கள் வழியே கிடைக்கிறது. அத்துடன், ஐபேட் ப்ரோ, எந்த வகையில், போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் உள்ளது என அறிந்து, எந்த வகையில் ஒலி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதைக் கணித்து, அதனைப் பின்பற்றுகிறது.
இதனுடன், நாம் விரும்பினால் வாங்கிக் கொள்ள, ஒரு கீ போர்ட் (விலை 169 டாலர்) மற்றும் ஆப்பிள் பென்சில் (ஸ்டைலஸ்) (விலை 99 டாலர்) தந்துள்ளது. ஐபேட் ப்ரோ சாதனத்தை, “எதிர்காலத்தில், பெர்சனல் கம்ப்யூட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்கால இலட்சியத்தின் முன்னோடியாக இது இருக்கும்” என ஆப்பிள் நிறுவன அலுவலர் அறிவித்துள்ளார். ஐபேட் ப்ரோவில், ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்க முடியும்.

ஐபேட் மினி 4: ஐபேட் மினி சாதனம் மீண்டும் ஒரு மேம்படுத்தப்பட்ட நிலையைப் பெற்றுள்ளது. அதே ப்ராசசர், டிஸ்பிளே தன்மை என பழைய ஐபேட் மினி போலவே இருந்தாலும், இதன் இயக்கம் 30% வேகமாக இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. கிரே, கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் இது கிடைக்கும். வை பி மட்டும் அமைந்த 16, 64 மற்றும் 128 ஜி.பி.மாடல் ஐபேட் மினி 4, முறையே 399, 499 மற்றும் 599 டாலர் என விலையிடப்பட்டுள்ளன. வை பி + 4ஜி மாடல் ஐபேட் மினி தேவை எனில், கூடுதலாக 130 டாலர் விலை செலுத்த வேண்டும்.

ஆப்பிள் பென்சில் எனப்படும் ஸ்டைலஸ்: ஆப்பிள் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டைலஸ் இயக்கத்தினை இறுதி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை. ஆனால் அடுத்த தலைமுறை, தேவை என்றால் ஏற்றுக் கொள்ளட்டும் எனக் கூறி வந்தார். இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டைலஸாக, ஆப்பிள் பென்சில் வெளியாகியுள்ளது. இதன் வடிவமைப்பில் அமைந்துள்ள தொழில் நுட்பம் மிகச் சிறப்பானது, முற்றிலும் புதியதும் ஆகும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. இதில் இரண்டு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த திசையில், இந்த பென்சில் சாய்க்கப்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப, செயல்பாட்டினை மேற்கொள்கிறது. ஐபேட் ப்ரோவின் திரையில், ஒரு பிக்ஸெல்லினை மட்டும் கூட இந்த பென்சில் கைப்பற்றி, செயல்படுத்த முடியும். இந்த பென்சில் ஒரு முறை சார்ஜ் செய்தால், பல மணிநேரத்திற்கு இயக்கத்தினை மேற்கொள்ளும். இதனை, ஐபேட் ப்ரோவில் செருகி சார்ஜ் செய்து கொள்ளலாம். ஐபேட் ப்ரோவில் பவர் பாய்ண்ட் செயலியை இயக்கி, அதில் உருவங்களை இந்த பென்சில் கொண்டு உருவாக்க முடியும். அவை, ஆப்ஜெக்ட்களாக பவர் பாய்ண்ட் பைலில் இணைந்து கொள்ளும்.
இந்தமுறை கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டது. ஐபேட் ப்ரோவில், எம்.எஸ். ஆபீஸ் எப்படி செயல்படுத்தலாம் என்பதனை மைக்ரோசாப்ட் நிறுவன வல்லுநர் சுட்டிக் காட்டினார். இது ஆப்பிள் நிறுவனக் கருத்தரங்கில் முதல் முறையாக நடந்தேறியுள்ளது. ஐ.ஓ.எஸ். 9 சிஸ்டம் தரும், இரண்டு திரைக் காட்சியை, ஆபீஸ் செயலியின் பயன்பாட்டில் காட்டியது அற்புதமாய் இருந்தது.

ஆப்பிள் டி.வி.: இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் டி.வி. மேம்படுத்தப்பட்ட வடிவில் கிடைக்க இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கிறது. இதன் மூலம், குரல் வழி கட்டளை கொடுத்து, டி.வி. பார்ப்பவர்கள் தங்களுக்குப் பிடித்த புரோகிராமுக்கு மாறிக் கொள்ளலாம். இதற்கு சிரி டிஜிட்டல் அசிஸ்டண்ட் (Siri digital- assistant) சாப்வேர் கை கொடுக்கிறது. ஆப்பிள் டி.வி.யினை, “மிக எளிய, ஆனால், முற்றிலும் புரட்சிகரமான செயல்பாட்டினைக் கொண்டது” என ஆப்பிள் நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் தொலைக் காட்சி பெட்டியை இயக்கி ரசிக்கும் வழிகளில், முற்றிலும் புதிய சகாப்தத்தினை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, மற்ற நிறுவனங்கள் இது போன்ற வசதிகள் கொண்ட டி.வி. பெட்டிகளை விற்பனை செய்து வருகின்றனர். Roku, Fire TV, LG, Android TV ஆகிய தொலைக்காட்சி பெட்டிகளில், குரல் வழி செலுத்தல் தரப்பட்டு வருகிறது. எனவே, இந்த புதிய ஆப்பிள் டி.வி., ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வரும் டி.வி.யின் பரிணாம வளர்ச்சி என்று நாம் கொள்ளலாம்.

ஐ.ஓ.எஸ். 9 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.2: அனைவரும் எதிர்பார்த்தபடி, ஆப்பிள் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மக்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பதனை அறிவித்துள்ளது. செப்டம்பர் 16லிருந்து, இவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற, ஆப்பிள் டெவலப்பர் கருத்தரங்கில் ஐ.ஓ.எஸ். 9 அறிவிக்கப்பட்டது. புதிய பல வசதிகள் இதில் அறிமுகமாகியுள்ளன. ஐபேட் சாதனத்திற்கு, திரையைப் பிரித்து இயக்கும் வசதியினை இந்த சிஸ்டம் தருகிறது. சிரி செயலி மேம்படுத்தப்பட்டு, நம் தேவைகளை அறிந்து முன்கூட்டியே டெக்ஸ்ட் அமைக்கும் செயல்பாடு இணைக்கப்பட்டுள்ளது.
வாட்ச் ஓ.எஸ்.2, இதே போல பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. அனிமேஷனில் இயங்கும் வால் பேப்பர்கள், தர்ட் பார்ட்டி செயலிகள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட செயலிகள் என அனைத்திலும் வாட்ச் ஓ.எஸ்.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலிகளாக, பேஸ்புக் மெசஞ்சர், ஐ ட்ரான்ஸ்லேட் அப்ளிகேஷன், சுழன்று வந்து படம் எடுக்கும் GoPro cameras எனப் பல வசதிகளுக்குத் தேவையான மாற்றங்கள் இதில் தரப்பட்டுள்ளன.
தொழில் நுட்பத்தில் மற்றும் அதன் சாதனங்களில், யாரும் எதிர்பாராத மாற்றங்களைத் தருவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான செயல்பாடாகும். இந்த ஆண்டு அறிமுகமான அனைத்தும், எதிர்பாராத வசதிகளைத் தந்தன என்று முற்றிலுமாகக் கூற இயலாது. இந்த சாதனங்கள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னரே, இவற்றின் புதிய தன்மை தெரிய வரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X