கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 செப்
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த புதிய சிஸ்டத்தில், முன்பு இருந்தது போல இணையத்தில் கிடைக்கும் காட்சிகளை, என் டெஸ்க்டாப் படமாக அமைக்க முடியவில்லை. முன்பு இருந்த சிஸ்டங்களில், இணைய இணைப்பில் இருக்கும்போதே, இணைய தளம் தரும் காட்சிகளின் மீது ரைட் கிளிக் செய்து, அதில் தரப்படும் மெனு வழியாக, டெஸ்க்டாப் படமாக அமைக்க முடிந்தது. தற்போது விண் 10ல் அந்த வசதி எடுக்கப்பட்டுவிட்டதா? இல்லை எனில் என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?
கே. என். பிரேமா சுந்தர், திருப்பூர்.
பதில்:
பிரேமா, இந்த வசதி, விண்டோஸ் 10ல் நீக்கப்படவில்லை. ஆனால், எட்ஜ் பிரவுசரில் தரப்படவில்லை. எட்ஜ் பிரவுசரில் இணையப் பக்கங்களில் உள்ள படங்களில் கிளிக் செய்தால், கீழ்க்காணும் வசதிகள் தரப்படுவதனைப் பார்க்கலாம். இதில் வால் பேப்பர் ஆக அமைக்கும் வசதி தரப்படவில்லை. ஆனால், இந்த தளத்தினை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களின் வழி பெற்று, ரைட் கிளிக் செய்தால், அந்த வசதி (set a picture as your background) தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். எட்ஜ் பிரவுசர் வழி தான் என்றால், அந்தப் படத்தினை தனியே சேவ் செய்து, பின்னர், அதனை பின்புலப் படமாக அமைக்கலாம்.

கேள்வி: தேவையற்ற அப்ளிகேஷன்களை உங்கள் அறிவுரைப்படி Msconfig>Startup சென்று நீக்கிவிட்டேன். நேற்று மீண்டும் Startup பார்த்த போது அந்த புரோகிராம்களின் பெயர்கள் அப்படியே உள்ளன. நான் அறியாமலேயே அவை மீண்டும் இயக்கப்படுகின்றனவா?
செ. தங்கவேல், கே.புதூர், மதுரை.
பதில்
: இல்லை. ஏற்கனவே, உங்கள் கம்ப்யூட்டரில் சிஸ்டம் இயங்குகையில் தொடங்கும்படி இருந்ததால், அவற்றின் பெயர்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் முன் உள்ள சிறிய கட்டத்தில் பாருங்கள். சிறிய டிக் அடையாளம் இருக்காது. டிக் அடையாளம் இருந்தால் மட்டுமே அவை இயக்கப்படும். நிறுத்தி வைக்கப்பட்ட சில புரோகிராம்கள் மீண்டும் உங்களுக்குத் தேவை எனில், மீண்டும் இந்தப் பிரிவு சென்று, டிக் அடையாளத்தை ஏற்படுத்தி, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்தால், அவை இயங்கத் தொடங்கும். இது சாதாரண விஷயம். கவலைப்பட வேண்டாம்.

கேள்வி: பெர்சனல் கம்ப்யூட்டரில், லேப்டாப் கம்ப்யூட்டரில், இணையத்தைப் பயன்படுத்துகையில், நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும், இணைய தள முகவரிகள் பதிந்திருப்பதை ஹிஸ்டரி பிரிவு சென்று அழிக்கிறோம். ஆனால், ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இந்த இணைய தள முகவரிகளை அழிக்க முடியுமா? அதற்கான செயல்முறை வழிகளைப் படிப்படியாகக் கூறவும்.
என். சுப்பிரமணியன், தேவாரம்.
பதில்:
பலரின் மனதில் இருக்கும் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி. இணையத்தில் தள முகவரிகள் மட்டுமின்றி, நாம் பார்த்த யு ட்யூப் படங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் தேடியவை, புத்தகங்கள் போன்ற அனைத்து தேடல்களும் பதியப்படுகின்றன. ஸ்மார்ட் போனில், இலவசமாக எந்த அப்ளிகேஷனையோ அல்லது ஒரு பொருளையோ பெற்றாலும், அது தளம் சார்ந்து பதியப்படுகிறது. தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன்கள் “My Apps” என்ற பட்டியலில் இடம் பெறும். இந்த பட்டியல் நாளுக்கு நாள் தொடர்ந்து வளரும். எனவே, இந்தப் பதிவுகளை அவ்வப்போது நீக்குவதும் நல்லதே. இதற்கு ஹோம் ஸ்கிரீனில், கூகுள் பிளே ஸ்டோர் ஐகான் அழுத்தி, பிளே ஸ்டோர் செல்லவும். அங்கு மேலே, இடது புறம் சிறிய மூன்று கோடுகள் ஒரு சிறிய படமாகத் தெரியும். அதனைத் தொட்டு இயக்கவும். அங்கு ஒரு மெனு கிடைக்கும். அதில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Clear local search history” என்று இருக்கும் இடத்தைத் தொட்டு இயக்கவும். உங்கள் தேடல் பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும். ஆனால், நீக்கப்பட்டுவிட்டதா என உங்களுக்குத் தகவல் கிடைக்காது. மீண்டும் தேடல் கட்டம் சென்று, எதனையேனும் தேட முயற்சிக்கையில், பழைய தேடல்கள் காட்டப்படவில்லை என்றால், அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கேள்வி: பல நூல்களில், இதழ்களில், The Internet of Things எனப் படிக்கிறேன். இதன் பொருள் விளங்கவில்லை. எந்த பொருள்களின் இணையத்தை இது குறிப்பிடுகிறது? அன்பு கூர்ந்து விளக்கவும்.
ஜே. டேவிட்ராஜ், கோவை.
பதில்:
நல்ல கேள்வி: இணைய செயல்பாட்டில் எழுந்து வரும் புதிய பரிமாணத்தை இது குறிக்கிறது. முன்பு, தகவல் தேட, அஞ்சல் அனுப்ப, படங்களை சர்வர்களில் பதிந்து வைக்க, நாம் இணையத்தைப் பயன்படுத்தினோம்; பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இப்போது இந்த இணைப்பு, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் நுழைந்துள்ளது. அதனைத்தான் நாம் “எங்கும் எதிலும் இணையம்” எனக் குறிப்பிடுகிறோம். எங்கும் எதிலும் இணையம்” என்பது மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள், தகவல்கள், பொருட்கள் ஆகிய அனைத்தையும் இணையம் வழி இணைப்பதே ஆகும். மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய அனைத்தும், உலக அளவில் இணையச் செயல்பாட்டினை, இந்த அடிப்படையில் அமைத்து வருகின்றன. திறமையுடன் கூடிய வாழ்க்கை ஒன்றை வழங்க, அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. அலுவலகத்தில் இருந்தவாறே, நம் வீட்டின் சமையலறையில் உள்ள அடுப்பினை இயக்கலாம். வீட்டிற்கு வரும் வழியிலேயே, நம் மொபைல் போன் மூலம், வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனரை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் டி.வி. சேனல் அல்லது பாடல் காட்சிகளை இயக்கலாம். நம் வீட்டில் கேமராவினை அமைத்து, இன்னொரு நாட்டில் இருந்தவாறே, நம் வீட்டில் நடக்கும் காட்சிகளைப் பார்க்கலாம்.
இவற்றுடன் தெருவிளக்குகள், சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பெரிய விளக்குகள், சிறிய வர்த்தக மையங்கள், விடுதிகள், உணவு நிலையங்கள் என அனைத்தும் சென்சார் வழி உணரப்படும். இணையத்தில் இவற்றின் இயக்கம் அறிந்து அனைவரும் இவற்றை அணுகும் வழிகள் கிடைக்கும். சாலைகளில் போக்குவரத்தினை, வேறு ஒரு மூலையில் உள்ள அறையில் அமர்ந்து கட்டுப்படுத்தலாம். இந்த நிலையையே “எங்கும் எதிலும் இணையம்” எனக் கூறுகிறோம்.
சென்ற 2014 அக்டோபரில், இந்திய அரசின் மின்னியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையால் ''எங்கும் எதிலும் இணையம்” என்பதற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தியாவிற்கான Internet of Things (IoT) கொள்கை வரைவு என இது அழைக்கப்பட்டது. இந்த தொழில் பிரிவில், 2020 ஆம் ஆண்டுக்குள் 1,500 கோடி டாலர் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப பிரிவு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்கான அறிக்கையாக இது அமைந்துள்ளது.

கேள்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் விண்டோஸ் இயக்கத்திலேயே வைரஸ் மற்றும் மால்வேர்களுக்கு எதிரான புரோகிராம்கள் இருப்பதாகப் படித்தேன். அப்படியானால், அவை நாம் அறியாமலேயே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா? இவை போதுமான பாதுகாப்பினைத் தருமா?
என். சுபஸ்ரீ காமராஜ், சிவகாசி.
பதில்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் மற்றும் விண்டோஸ் டிபண்டர் புரோகிராம்களே அவை. இவற்றின் செயல்பாடு குறித்து இங்கு விளக்கினால், இவற்றின் தன்மை, செயல்பாடு தெரிய வரும். இவை இரண்டும் இருவகையான வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள். விண்டோஸ் டிபண்டர், பெர்சனல் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் எனப்படும், நம் தகவல்களைத் திருடும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருகிறது. செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் இந்த பணியைச் செய்வதுடன், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, வைரஸ்களை நீக்குகிறது.
விண்டோஸ் டிபண்டர் இணையத்திலும், வெளியிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்திருக்கையில், இது கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்கள் இருந்தால் அவற்றைக் கண்டறியும். டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமும் இதே திறனைக் கொண்டுள்ளது. இதனை, நம் கம்ப்யூட்டர் செயல்படத் தொடங்கும் முன்னரே இயக்கி, கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர் புரோகிராம்களை நீக்கலாம். இதற்குத் தேவை இந்த புரோகிராம் ஒரு ப்ளாஷ் ட்ரைவ் அல்லது வெளியிலிருந்து இணைக்கப்படக் கூடிய ஹார்ட் ட்ரைவில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் டிபண்டர், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கவும் செய்கிறது.
மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் விண்டோஸ் டிபண்டருடன் இணைந்து இயங்கி வைரஸ் புரோகிராம்களை நீக்குகிறது. அத்துடன், ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களிலிருந்து கம்ப்யூட்டரைக் காக்கிறது.
விண்டோஸ் டிபண்டர் புரோகிராம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து வைரஸ்களை நீக்குவதால், அதில் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க முடியாது. சிலர், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் என அழைக்கின்றனர். இரண்டுக்கும் இடையே உள்ள குழப்பத்திற்கு இதுவே காரணம். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், விண்டோஸ் டிபண்டர் மற்றும் எசன்ஷியல்ஸ் என இரண்டு புரோகிராம்களும் தேவைப்பட்டன.
இந்த இரண்டு புரோகிராம்களையும், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்களின் இணைய தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களுக்கு இரண்டும் தேவைப்படும்.

கேள்வி: வங்கிகளின் நெட் பேங்கிங் செயல்பாட்டில், இரண்டு அடுக்கு பாதுகாப்பு என அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பயர்வால் போன்றதா? விளக்கமாக எடுத்துக் காட்டுகளையும் தரவும்.
ஜே. எஸ். ரங்கநாதன், சென்னை.
பதில்:
சரியான கேள்வி கேட்டீர்கள். மால்வேர் புரோகிராம்களை அனுப்பும் டிஜிட்டல் திருடர்கள், உங்களுடைய ஒன்றிரண்டு பாஸ்வேர்ட்களைத் திருடி, உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தலாம். நம் காண்டாக்ட் முகவரிகள், ரகசிய மின் அஞ்சல்கள் இவர்கள் கைகளில் சிக்கி நமக்கு தொல்லை கொடுக்கலாம். எனவே தான், வங்கிகள் சார்ந்த நிதி பரிமாற்றத்தில், இரண்டு அடுக்கு பாதுகாப்பு தரப்படுகிறது. இதனை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். நம் பாதுகாப்பிற்காகவே, வங்கிகள், இப்போது இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்கியுள்ளன.
நாம் ஏதேனும் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்குகையில், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை நாம் அமைக்கிறோம். பின்னர், அந்த அக்கவுண்ட் சேவைதளத்திலிருந்து, நம் போனுக்கு டெக்ஸ்ட் அல்லது வாய்ஸ் அழைப்பின் மூலம் நம் அக்கவுண்ட் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. இந்த வகையில் தொலைபேசி வழி பாதுகாப்பினை விரும்பாதவர்கள், தற்போது வழங்கப்படும் யு.எஸ்.பி. பாதுகாப்பு கீ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு நம் சாதனத்தில் யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும். நமக்கு இந்த சேவையை வழங்குபவர்கள், இது போல யு.எஸ்.பி. வழி பாதுகாப்பினை வழங்க வேண்டும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar - viruthunager,இந்தியா
26-செப்-201509:20:55 IST Report Abuse
sundar android ஐ root செய்வதன் முலம் வரும் முழு பலனை தெரிவிக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X