கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
00:00

கேள்வி: என் தொடு உணர் திரை கணினியில், ஸ்டைலஸ் எனப்படும் தொடு உணர் பென்சிலைப் பயன்படுத்தலாமா? இதனால், திரைக்கு பிரச்னை வருமா? விரல்களுக்கு வலி ஏற்படுமா? ஸ்டைலஸ் ஒன்றின் விலை என்ன?
கா. இளங்கோ, திருநெல்வேலி.
பதில்:
விண்டோஸ் 8 சிஸ்டம் புழக்கத்திற்கு வந்த பின்னர், இது போல திரை வழி இயக்கம் குறித்து பல சந்தேகங்களை வாசகர்கள் கேட்டு வருகின்றனர். தாராளமாக, ஸ்டைலஸ் கொண்டு, தொடு உணர் திரை கம்ப்யூட்டர்களை இயக்கலாம். எந்த வகை ஸ்டைலஸையும் பயன்படுத்தலாம். வெறுமனே ஸ்டைலஸ், பேனா, லைட் இணைந்த ஸ்டைலஸ் எனப் பல வகைகள் தற்போது சந்தையில் கிடைத்து வருகின்றன. வெறும் ஸ்டைலஸ் ரூ.300 முதல் ரூ.500 வரையிலான விலையிலும், பேனா மற்றும் எல்.இ.டி. விளக்கு இணைந்த ஸ்டைலஸ் ரூ. 600 முதல் ரூ. 1,500 வரையிலும் சந்தையில் கிடைக்கின்றன.
திரைகள் மிக மென்மையாகக் கையாளப்பட வேண்டும். விரல்களுக்கும் பளு அதிகமாகத் தரக்கூடாது. திரையை விரல்களால் தொட்டு இயக்கும் போதும், எந்நேரமும் குவிந்த நிலையிலேயே வைத்திருக்கக் கூடாது. திரையில் மிக அழுத்தத்தினைப் பயன்படுத்தக் கூடாது. விரல்கள் மற்றும் ஸ்டைலஸ் ஆகிய இரண்டையும் மிகவும் மென்மையாகவே கையாள வேண்டும்.

கேள்வி: எங்கள் நிறுவனத்திற்கெனத் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்களில் சில ஒரே பொருளைக் கொண்டு அமையும். ஒரு டாகுமெண்ட்டில் அமைக்கப்பட்ட ஹெடர் மற்றும் புட்டர் தலைப்புகள், படங்களை மற்ற டாகுமெண்ட்டிலும் அமைக்க விரும்புகிறோம். இதனை அதிக நேரம் எடுக்காமல் எப்படி செயல்படுத்தலாம்?
எஸ்.என். செல்வராஜ், திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி மற்றும் முயற்சியும் கூட. இதற்கான வழி வேர்ட் புரோகிராமில் உள்ளது. ஆனால், நீங்கள் எந்த பதிப்பினைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கூறவில்லை. கீழே தரப்படும் செயல்முறைகள், வேர்ட் 2007 மற்றும் பின்னர் வந்தவைக்குப் பொருந்தும்.
ஏற்கனவே டெக்ஸ்ட் அல்லது படம் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும். ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். Header & Footer குரூப்பில் ஹெடர் அல்லது புட்டர் டூலில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாட்டிற்கேற்ப Edit Header அல்லது Edit Footerஐத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் தானாகவே, தேவைப்பட்டால் Print Layout வியூவிற்கு மாறிக் கொள்ளும். கர்சர் ஹெடர் அல்லது புட்டரில் இருக்கும். ரிப்பனில் டிசைன் டேப் காட்டப்படும். இனி, புட்டர் அல்லது ஹெடரில், காப்பி செய்து பயன்படுத்த விரும்பும் டெக்ஸ்ட் மற்றும் படம் இருந்தால் அதனையும் காப்பி செய்திடவும். இப்போது நீங்கள் மற்ற டாகுமெண்ட்டில் அமைக்க விரும்புபவை கிளிப் போர்டில் இருக்கும்.
இனி ஒட்ட வேண்டிய டாகுமெண்ட்டினைத் திறக்கவும். மேலே குறிப்பிட்டது போல, ஹெடர் அல்லது புட்டரைத் தேர்ந்தெடுத்து, ஏற்கனவே காப்பி செய்ததை கண்ட்ரோல்+வி கொடுத்து ஒட்டவும்.

கேள்வி: தொடர்ந்து எக்ஸெல் ஒர்க்புக் தயாரிக்கும் பணி என்னுடையது. இதில் தேதியை செல்களில் டைப் செய்திடுகையில், ஒவ்வொரு முறையும் நமக்கு வேண்டிய வகையில் dd/mm/yyyy என்ற பார்மட்டை, Format Cells சென்று தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டியதுள்ளது. எப்போதும் இந்த பார்மட்டிலேயே தேதி அமைந்திட எங்கு சென்று செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். தயவு செய்து இதற்கான பதில் தரவும்.
எஸ். கீதா முருகன், திருச்சி.
பதில்:
நீங்கள் விரும்பியவாறு தேதிக்கான வடிவமைப்பை ஏற்படுத்தி, அதனையே மாறா நிலையில் வைத்திட சில வழிகள் உள்ளன. முதல் வழி: நீங்கள் பார்மட் செய்திட விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும். ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுங்கள். Number குரூப்பின் வலது கீழாக உள்ள சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது Format Cells டயலாக் பாக்ஸில் Number டேப் தேர்ந்தெடுத்த நிலையில் கிடைக்கும். இடது பக்கம் உள்ளவற்றில் Date என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Locale கீழ்விரி பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் தேதிக்கான வடிவமைப்பினைப் பயன்படுத்தும் நாட்டினை இங்கு தேர்ந்தெடுக்கலாம். இதில் English (India) என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் உங்களுடைய தேதியாக அமைக்கப்பட்ட செல்லில் அமைக்கப்படும் தேதி dd/mm/yyyy என்ற வடிவில் அமையும்.
இதற்கான இன்னொரு வழியும் உள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம். கண்ட்ரோல் பேனல் செல்லவும். அதில் Regional Settings தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் விண்டோவில் தேதி மற்றும் நேரம் பார்மட் அமைத்திட பல பார்மட் கிடைக்கும். உங்களுக்குத் தேவைப்பட்ட பார்மட்டினைத் தேர்ந்தெடுத்துவிட்டால், விண்டோஸ் இயக்கும் அனைத்து செயலிகளிலும், இதே பார்மட்டில் தேதி அமையும்.

கேள்வி: என் நண்பர் ஒருவரிடமிருந்து பெற்ற ஒர்க் ஷீட்டில், செல்களில் அவை கொண்டுள்ள மதிப்பிற்கேற்ப வண்ணத்தில் உள்ளது. இதனால், பார்க்கும்போதே, உள்ளிடப்பட்ட மதிப்பு அறியாமலேயே என்னால், தகவல்களை அறிய முடிகிறது. நானும் இதே போல் தயாரித்தேன். ஆனால், வண்ணத்தை மாற்றுவது எப்படி எனத் தெரியவில்லை. அதற்கான வழி என்ன?
என். ராமகிருஷ்ணன், மதுரை.
பதில்
: நீங்கள் வண்ணம் அமைத்திடப் பயன்படுத்திய டூல் இதற்கும் உதவுமே. சரி, தெளிவாக இதனைப் பார்ப்போம். எக்ஸெல் செயலியில், Fill Color என்ற ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இது ரிப்பனில் ஹோம் டேப்பில் கிடைக்கும். சிறிய வாளி மற்றும் வண்ணம் தெரியும் வகையில் இதன் படம் இருக்கும். இந்த டூலில் இரண்டு செயல்பாட்டிற்கான பகுதிகள் உண்டு. நீங்கள் இடதுபுறம் கிளிக் செய்தால், அதில் கிடைக்கும் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால், செல்லில் அந்த வண்ணம் அமைக்கப்படும். இதில் ஒன்றைக்
கவனிக்க வேண்டும். செல்லில் உள்ள எழுத்தின் வண்ணம் மாற்றப்படாது. பின்புல வண்ணம் மட்டுமே அமைக்கப்படும். இந்த டூலின் வலதுபுறம் உள்ளதைக் கிளிக் செய்தால், வண்ணங்கள் அடங்கிய கட்டம் காட்டப்படும். மவுஸ் மூலம் விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். எழுத்தின் வண்ணம் மாறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் வண்ணம் Fill Color டூலிலும் காட்டப்படும்.
வண்ணம் மாற்ற இன்னொரு வழியும் உள்ளது. எந்த செல்களின் வண்ணத்தினை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Ctrl+Shift+F அழுத்தவும். இப்போது எக்ஸெல், Format Cells டயலாக் பாக்ஸினைக் காட்டும். Fill டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த டயலாக் பாக்ஸை அமைக்கவும். இந்த டயலாக் பாக்ஸில் காட்டப்படும் வண்ணக் கட்டங்களிலிருந்து, பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் வண்ண்ங்களில் திருப்தி இல்லை எனில், More Colors என்பதை அழுத்தி, கிடைக்கும் வண்ணங்களைப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். பின், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: Proximity Sensor என்னும் வசதி கட்டாயம் நம் மொபைல் போன்களில் தேவையா? இதன் பயன் என்ன? எந்த வகை போன்களில் இது கிடைக்கிறது? புதிய ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறேன். எனவே டிப்ஸ் தரவும்.
கி.ஜெ. மஹேந்திரன், சென்னை.
பதில்
: Proximity Sensor என்பதை நான் ஒரு முறை 'அருகமை உணர்வலை' என்று குறிப்பிட்டிருந்தேன். இது தேவையா? இல்லையா? என்பதல்ல நீங்கள் முடிவு செய்ய வேண்டியது. இதன் செயல்பாட்டினை முதலில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலான ஸ்மார்ட் போனில் இந்த தொழில் நுட்பம் தரப்படுகிறது. ஸ்மார்ட் போனில், திரையைத் தொட்டு இயக்கும் செயல்பாடு உள்ளதால், இயக்கத்திற்காக தொடுதலையும், போனை முகம் அருகே கொண்டு செல்வதையும் வேறுபடுத்திப் பார்க்க இந்த தொழில் நுட்பம் பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம், உங்கள் மொபைல் போனின் திரை உங்கள் உடம்புக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைக் கணிக்கிறது. காதருகே கொண்டு சென்றவுடன், திரைக் காட்சி அணைக்கப்படுகிறது. அத்துடன், தேவையற்ற திரைத்தொடுதல்களை உணரா வண்ணம் செயல்படுகிறது. உங்கள் காதுகளில் இருந்து போனை எடுத்த பின்னரே, நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்தும் செயல்படும். இதனால், காதுகளால் போனில் ஏற்படும் தொடு உணர்வு மூலம் தேவையற்ற போன் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன. ஐபோனைப் பொறுத்தவரை, இந்த சென்சார், திரைச் செயல்பாட்டினை அறவே நிறுத்தி, தொடு உணர்ச்சியினைக் கண்டறியும் சர்க்யூட்டின் செயல்பாட்டினையும் முடக்குகிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Kumar - Chennai,இந்தியா
29-செப்-201510:23:15 IST Report Abuse
Shiva Kumar நான் தற்போது விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகிறேன். என்னிடம் தற்போது விண்டோஸ் இன் ஹர்ட் காப்பி எதுவும் இல்லை. எதாவது பிரச்சனைகளால் விண்டோஸ் reload பண்ண வேண்டியது இருந்தால் என்னால் விண்டோஸ் 10 reload பண்ண backup CD எவ்வாறு தயாரித்து வைக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X