ஏர்டெல் நிறுவனம் தன் ப்ரீ பெய்ட் சந்தாதாரர்கள் அனைவருக்கும், விநாடிக் கணக்கினில் கட்டணத்தைக் கணக்கிடும் திட்டத்திற்கு மாற்ற உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் போன் பயனாளர்களில், 95% பேர் ப்ரீ பெய்ட் திட்டத்தில் இயங்கி வருகின்றனர். சென்ற
செப்டம்பர் 21 முதல், இவர்கள் அனைவரையும், விநாடிக் கணக்கில் கணக்கிடும் திட்டத்திற்கு, ஏர்டெல் மாற்றிவிட்டது. இதனால், தங்கள் வாடிக்கையாளர்கள், குறைந்த கட்டணத்தில் அதிகம் பேச முடியும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
நிமிடக் கணக்கில் கட்டணம் கணக்கிடுகையில், பத்து விநாடிகள் பேசினாலும், வாடிக்கையாளர்கள், தாங்கள் செலுத்திய முன் பணத்திலிருந்து, ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தொகையினை இழப்பார்கள்.
தற்போது தாங்கள் பேசிய விநாடி வரை மட்டுமே, இவர்களின் பணம் எடுத்துக் கொள்ளப்படும். “பயன்படுத்துவதற்கு மட்டுமே கட்டணம்” என்ற இந்த முயற்சியினை, மக்கள் அனைவரும் வரவேற்பார்கள் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இது போன்ற கட்டண மாற்றங்கள் தரும் சலுகையுடன், மொபைல் போன் கட்டமைப்பிலும் ஏர்டெல் கவனம் செலுத்தி, அதனை மேம்படுத்தி வருகிறது. இதனால், அழைப்புகள் இடையே தொடர்பின்றி போவது போன்ற நிகழ்வுகள் கூடுமானவரை தவிர்க்கப்படுகின்றன.
விநாடி அளவில் கட்டணம் என்ற திட்டத்துடன், வழக்கமாக அவ்வப்போது வழங்கப்படும் சலுகைக் கட்டணத்திட்டத்தினையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.