கேள்வி்- பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஒரு வழியாகப் பதிந்துவிட்டேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆனது. இதில் ஸ்டார்ட் மெனு கிடைப்பது மகிழ்ச்சி தான். இதனைச் சற்றுப் பெரியதாக ஆக்க முடியுமா? சில டைல்கள் மட்டும் மாறிக் கொண்டுள்ளன. மற்றவற்றைப் போல இதையும் மாறாமல் அப்படியே ஸ்டேடிக் ஆக அமைக்க முடியுமா?
என். பிரகாஷ் பாபு, திருநெல்வேலி.
பதில்:
விண்டோஸ் 10 இலவசமாகப் பெற்ற மகிழ்ச்சி உங்கள் கடிதம் முழுவதும் தெரிகிறது. நீங்கள் கேட்டுள்ளவற்றில் சிலவற்றிற்கு இங்கே விளக்கம் தருகிறேன்.
1. ஸ்டார்ட் மெனுவின் மேல்புறமாகக் கர்சரைக் கொண்டு சென்று, அதில் வைத்து, கர்சரை இழுத்து, ஸ்டார்ட் மெனுவின் பரப்பினைச் சுருக்கலாம், நீட்டிக்கலாம். டைல்ஸ் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, அவற்றை ஸ்டார்ட் மெனுவில் பின் செய்திடலாம். அல்லது பின் செய்ததிலிருந்து நீக்கலாம்.
2. டைல்ஸ்களின் அளவினைக் குறைக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Resize தேர்ந்தெடுக்க வேண்டும். சிமிட்டும் டைல்ஸ்கள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக இருந்தால், அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Turn live tile off” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: நான் புதியதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதில் அடிக்கடி நான் செல்லும் இடங்கள் குறித்த செய்தி வருகிறது. ஏற்கனவே பயன்படுத்திய சிம் கார்டினைத் தான் இதில் பயன்படுத்துகிறேன். ஆனால், இந்த போனில் மட்டுமே இந்த செய்திகள் வருகின்றன. இதனால், நான் அதிக பணம் கட்ட வேண்டியதிருக்குமா? எனக்கு இது தேவையற்றது. எப்படி இதனைச் சரி செய்வது? மொபைல் சேவை தரும் நிறுவனத்திற்கு எப்படி எழுதுவது என்றும் தெரியவில்லை? வழி காட்டவும்.
என். ஸ்வர்ணலதா, கொளத்தூர்.
பதில்:
கவலையே பட வேண்டாம். முதலில் இது என்ன தொழில் நுட்பம் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் செய்திகள், நீங்கள் எந்த ஊரில், அல்லது இடத்தில் அந்த போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற செய்திதான். சில நாடுகளில், மொபைல் போன் அழைப்பிற்கான கட்டணம், இடம் பொறுத்து மாறுபடும். அவர்களுக்கு இது மிகவும் உதவும். நம் ஊரில் அப்படி இல்லை. நாம் இரவில் ட்ரெயினில் பயணம் செய்கையில், எந்த ஊர் அருகில் நம் ட்ரெயின் போய்க் கொண்டிருக்கிறது என்பதனை, இந்த செய்திகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஊருக்குள்ளாக அங்கும் இங்கும் செல்கையில், அருகாமையில் இருக்கும் இடத்தினை எடுத்துக் காட்டும். சென்னையில், தேனாம்பேட்டை, ஆழ்வார் பேட்டை, அடையார் என்றோ அல்லது சில கட்டடங்களின் பெயர்களைக் குறிப்பிட்டோ செய்தி வரும். இந்த செய்திகள் வராமல் இருக்க, போனில் சில அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் Messages செல்லவும். இங்கு கீழாக இடது புறம் அழுத்தினால் கிடைக்கும் மெனுவில் Settings தேர்ந்தெடுக்கவும். இனி, கீழாகச் சென்றால், Cell Broadcast என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத்தான் CB செய்திகள் என பெயரிடப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டிருக்கும். இதனை நீக்கிவிடவும்.

கேள்வி: எனக்குப் பல பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துப் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்படுகிறது. என் வயது 65. இதற்குப் பதிலாக எழுதி வைத்தால், யாராவது தெரிந்து கொள்வார்களோ என்ற பயம் உள்ளது. எப்படி இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்?
என். தெய்வேந்திரன், சிதம்பரம்.
பதில்
: நாம் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கு அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கும் மற்றும் வங்கி சார்ந்த நிதி பரிமாற்றத்திற்கும். பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இன்னும் பலர் கூடுதலான எண்ணிக்கையில் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் செயல்படுவார்கள். இவர்கள், அனைத்தையும் நினைவில் கொள்ள இயலாமல், ஜிமெயில் அக்கவுண்ட்டிலிருந்து வங்கி அக்கவுண்ட்வரை ஒரே பாஸ்வேர்டினையே பயன்படுத்துவார்கள். இது அபாயமானதாகும். யாரேனும் ஒரு ஹேக்கர், இந்த பாஸ்வேர்டினைத் திருடிவிட்டால், நாம் அனைத்தையும் இழக்க வேண்டியதிருக்கும். இப்படி நினைவில் வைத்துக் கொள்ளாதவர்களுக்காகவே, பாஸ்வேர்ட் மேனேஜர் புரோகிராம்கள் பல (Dashlane or LastPass) உள்ளன. இவற்றில் ஒன்றை அவர்கள் பயன்படுத்தலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், சில தலைப்புகளை என்க்ரேவிங் முறையில் அமைக்க விரும்புகிறேன். வேர்ட் ஆர்ட் சரியாக இயங்குவது இல்லை. வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். இதில் ஷார்ட் கட் பயன்படுத்தி எழுத்துகளை, டாகுமெண்ட்டில் பதிந்திருப்பது போல, அதாவது என்கிரேவ் செய்தது போல அமைக்க முடியுமா?
கா. பரந்தாமன், திருச்சி.
பதில்:
வேர்ட் புரோகிராமில் இதற்கான வசதி உள்ளது. முதலில் என்க்ரேவிங் என்பதை விளக்குகிறேன். இது எம்பாஸிங் (embossing) என்பதற்கு எதிரானது. டெக்ஸ்ட் ஒன்றை என்க்ரேவ் செய்திடுகையில், அது அந்தப் பக்கத்தில் புதைந்து போல் இருக்கும். அதன் முனைகளில், சிறிய அளவில் நிழலாக இருக்கும். எந்த டெக்ஸ்ட்டை என்கிரேவ் செய்ய வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். ரிப்பனில், ஹோம் டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து Font குருப்பில் வலது மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Font டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Engrave என்னும் செக் பாக்ஸை டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின்னரும், என்கிரேவ் செய்யப்பட்ட டெக்ஸ்ட்டில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். பின்புலத்திற்கும், முன் தோற்றத்திற்கும் வெவ்வேறு வண்ணங்களை அமைக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஹோலோ லென்ஸ் என்ற புதிய பயன்பாடு ஒன்று இருப்பதாகப் படித்தேன். ஆனால், அதனைப் பதிந்துள்ளவர்கள், அது போல எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். இதில் எது உண்மை? அப்படி எதுவும் உள்ளது என்றால், அது ஏன் ஒரு சிலரிடம் கிடைக்கவில்லை? அன்பு கூர்ந்து விளக்கவும்.
என். தியாகேஸ்வரன், சென்னை.
பதில்:
நீங்கள் கூறுவது சரியே. விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுக விழாவில், அனைவருக்கும் ஆச்சரியம் தரத்தக்க வகையில் மைக்ரோசாப்ட் பொறியாளர்களின் கை வண்ணத்தில் உருவான ஹோலோ லென்ஸ் (HoloLens) குறித்து அறிவிக்கப்பட்டது. ஹோலோ லென்ஸ் என்பது தலையில் அணிந்து பார்க்க வேண்டிய ஒரு சாதனம். விண்டோஸ் 10 இயக்கத்தை இதன் வழியாகப் பார்க்கையில், நம் நிகழ் உலகமும், கற்பனையான மாயை உலகமும் இணைந்து காட்சிகளை வழங்கும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் கிரகம் குறித்து கம்ப்யூட்டரில் இயக்குகையில், இதன் வழியே பார்த்தால், நாம் அதன் பரப்பில் நடந்து சென்று, அனுபவிக்கும் உணர்வினைப் பெறுவோம். நம் நிகழ் உலகின் மேலாக, டிஜிட்டல் ஹோலோகிராம் உலகம் நமக்குக் காட்டப்படும். நாம் காணும் நிகழ்வு, சாதாரணமாக நாம் பார்க்கும் ஸ்கைப் விண்டோவாகவும் இருக்கலாம்; முப்பரிமாண மாடல் பொருளாகவும் இருக்கலாம். எந்தப் புதிய தொழில் நுட்பத்தின் விளைவையும் எழுத்தில் விளக்குவது எளிதல்ல; அதனை உணர்ந்து பார்த்தால் தான், அதன் முழு தாக்கத்தினையும் உணரலாம். ஹோலோ லென்ஸ் சாதனத்திற்கு இது முற்றிலும் பொருந்தும். இது இன்னும் நடைமுறைச் செயல்பாட்டிற்கு வரவில்லை.

கேள்வி: கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான புரோகிராம்களுடன், வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் ஒட்டிக் கொண்டு வந்துவிடும் என்றும், இந்த முதன்மை புரோகிராம்கள் ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து இயக்க வேண்டிய அளவிற்குத் தேவையானவை என்றால், அவையும் வந்துவிடுமே. அப்படியானால், இந்த வைரஸ் புரோகிராம்களை எப்படி நீக்குவது?
கா. தமிழ் அரசி, கோவை.
பதில்:
உங்கள் அச்சம் சரியே. கம்ப்யூட்டர் பூட் ஆகிச் செயல்படுவதற்குத் தேவையான புரோகிராம்களை நாம் ஸ்டார்ட் அப் என்ற வகையில் இயக்குகிறோம். இவை எப்போதும் கம்ப்யூட்டர் இயங்குகையில் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றுடன் வைரஸ் இணைந்து கொண்டால், அவற்றை நீக்கும் வேளையில், தேவைப்படும் புரோகிராமும் நீங்கிவிடும். எனவே, இவற்றைத் தனியே அறிந்து கொள்ள msconfig என்ற டூலைப் பயன்படுத்தலாம். முதலில், சந்தேகப்படும் புரோகிராமினை இயக்காமல் முடக்கி வைத்து, கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்க வேண்டும். கம்ப்யூட்டர் இயங்கினால், அந்த புரோகிராமினை நீக்கிவிடலாம். கம்ப்யூட்டர் இயங்க மறுத்தால், அல்லது அது குறித்து வேறு நோட்டிபிகேஷன் வந்தால், அதனை மீண்டும் தொடங்கும் புரோகிராம் பட்டியலில் இணைத்து இயக்க வைக்கலாம். உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது முந்தைய சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் இருந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து அதில் Run என்பதில் கிளிக் செய்திடவும். கட்டத்தில் msconfig.exe என டைப் செய்து ஓகே தட்டவும். இப்போது எம்.எஸ். கான்பிக் விண்டோ திறக்கப்படும். இங்கு உள்ள டேப்களில் ஸ்டார்ட் அப் (Startup) கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் புரோகிராம் பட்டியலில், தேவைப்படாத புரோகிராம் மீது ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் விளக்கத்தினைப் படிக்கவும். அதன் பின்னரும் அந்த புரோகிராம் தேவை இல்லை என முடிவு செய்தால், disable செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, எம்.எஸ். கான்பிக் விண்டோ சற்று வித்தியாசமாகக் கிடைக்கும். இருப்பினும் செயல்பாடு ஒரே விதமாகவே இருக்கும்.

கேள்வி: வாட்ஸ் அப் போன்ற புரோகிராம்கள் மூலம் நண்பர்களிடையே தகவல்களைப் பகிர்ந்து கொண்டாலும், சிலருக்கிடையே அல்லது ஒரு குழுவிற்கிடையே ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சென்று, குழுவினர் மட்டுமே அறியும் வகையில் அமைக்க இயலவில்லை. இதற்கான புரோகிராம்கள் எதுவும் உள்ளனவா? மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் இருக்க வேண்டும்.
எஸ்.ஸ்ரீகாந்த், சிதம்பரம்.
பதில்:
வாட்ஸ் அப் போன்ற புரோகிராம்களிலும் ரகசியம் பாதுகாக்க முடியும் என்றாலும், தேடல் சாதனங்களில் இவை காட்டப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இவை பகிர்ந்து கொள்ள என்று வெளியிடப்படுவதால், நண்பர்களில் ஒருவருக்கொருவர் நட்பு தொடர்கையில், தகவல்கள் மற்றவர்களால் அறியப்படலாம். இருப்பினும் உங்கள் தேவையினை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்தக் கூடிய புரோகிராம் ஒன்று உள்ளது. அதன் பெயர் Threema. மற்றவர்களுக்குத் தெரியாமல், தங்கள் தனிப்பட்ட உரையாடல் ரகசியமாக, நண்பர்களுக்குள் இருக்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கு இந்த புரோகிராம் சரியாக இருக்கும். உரையாடல் இறுதி வரை, மற்றவருக்குத் தெரியாதவகையில் சுருக்கப்பட்டு இருக்கும். பெயர், தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டே, உரையாடல் உரியவர்களுக்குக் கிடைக்கும். இருப்பினும், த்ரீமா, மற்ற அப்ளிகேஷன்கள், வாட்ஸ் அப் போன்றவை தரும் அனைத்து வசதிகளையும் தருகிறது. வாய்ஸ் மெசேஜ் முதற்கொண்டு அனைத்து வசதிகளும் உள்ளன. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன், அமேஸான் ஆகியவற்றிற்கான அப்ளிகேஷன்கள் தனித்தனியே கிடைக்கின்றன. இதனைத் தரவிறக்கம் செய்திட https://threema.ch/en/download என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Gopalan - Chennai,இந்தியா
06-அக்-201517:35:51 IST Report Abuse
Narayanan Gopalan நண்பரொருவர் போகிற போக்கில் அவர் யு எஸ் சில் பயன் படுத்திக் கொண்டிருந்த மோடொரொல்லா எம் பி 855 மடலை என்னிடம் விட்டுச்சென்றார் . அதில் என்ன செய்தாலும் தமிழ் எழுத்துருக்களை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை எந்த தமிழ் எழுத்துச் செய்தியும் சிறு கட்டங்களாக வரகின்றது என்? மாற்ற வழி உண்டா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X