மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் 10 சாதனங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாய்த் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் சாதனங்களைச் சென்ற செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6ல், அறிமுகப்படுத்தியுள்ளது. முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'சர்பேஸ் புக்' (Surface Book) என்னும் மடிக் கணினியை வெளியிட்டது. மடிக்கணினிகளில் மிகச் சிறந்த உச்சத்தை இந்த மடிக்கணினி கொண்டுள்ளது. அதுதான் 'சர்பேஸ் புக்', என இதனை அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் பனோஸ் பனாய் (Panos Panay) குறிப்பிட்டார்.

சர்பேஸ் புக் மடிக்கணினி: இதுவே எங்கள் முதல் மடிக் கணினி. ஆனால் இதுவரை இயங்கிய மடிக்கணினிகள் அனைத்தின் அம்சங்களையும் மாற்றி அமைக்கப்பட்ட மடிக்கணினி. புதியதாக நாங்கள் ஒரு மடிக்கணினியைக் கண்டுபிடித்துள்ளோம்” என்று அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டார்.
இது மடிக்கணினி மட்டுமல்ல. இதன் திரைப் பாகத்தைத் தனியே கழட்டி ஒரு குறுங்கணினியாகவும் (“டேப்ளட் பி.சி.”) பயன்படுத்தலாம். கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியவுடன், திரைப் பகுதி தானாகக் கழண்டு தனியே கிடைக்கிறது. எனவே இது ”ஒன்றில் இரண்டு” என அழைக்கப்படும் ஒரு சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் திரை 13.1 அங்குல அளவில் அமைந்துள்ளது. இது சற்று மாறுதலான அளவு தான். வழக்கமாக நாம் பார்த்த மடிக்கணினி திரைகளைக் காட்டிலும் சற்று உயரம் கூடுதலாக இருக்கும். இந்த திரைப் பகுதியை எந்தக் கோணத்திலும் வைத்துக் காணலாம். சற்று உயர்த்திப் பிடிக்கலாம். இதற்கு வழி வகுக்கும் வகையில், மைக்ரோசாப்ட் "dynamic fulcrum hinge, என்ற ஒரு சுழல் மையப் பிணைப்பினைப் பயன்படுத்தியுள்ளது.
இதன் ஒளிப்புள்ளி என அழைக்கப்படும் 'பிக்ஸெல்' திறன் 3000 x 2000 ஆக உள்ளது. ஒரு சதுர அங்குலத்தில் 267 பிக்ஸெல்கள். மொத்தம் 60 லட்சம் பிக்ஸெல்கள். இதனைத் தொட்டும் இயக்கலாம். 'ஸ்டைலஸ்' பேனாவும் பயன்படுத்தலாம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும், காட்சி மிகத் தெளிவாக உள்ளது. திரையைத் தனியாகக் கழட்டி குறுங்கணினியாகப் பார்க்கையில், அதன் தடிமன் 7.7. மிமீ ஆக அமைகிறது. எடை 725 கிராம். மொத்த மடிக்கணினியின் தடிமன் 28.8 மிமீ. எடை 1.587 கிலோ.
இந்த லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் சி.பி.யு. ஐ5 வகையைச் சேர்ந்தது. இதன் தற்காலிகச் செயல் (ராம்) நினைவகத்தினை 16 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஹார்ட் டிஸ்க் எஸ்.எஸ்.டி. வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு டெரா பைட் அளவிற்கு உயர்த்தலாம். பின்புறமாக 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கேமராவும் உள்ளன. இதன் கீ போர்டில், விசைகள், பின்புறமாக ஒளியூட்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. கீழாக அமைக்கப்படும் சுட்டு தளம் (Track Pad) கண்ணாடியால் காக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயமாக மவுஸ் பயன்பாட்டினை விரும்ப மாட்டார்கள் என்று மைக்ரோசாப்ட் அடித்துச் சொல்கிறது. விரல்ரேகை உணர்ந்து இயக்கவும் இதில் வசதி உள்ளது.
இரண்டு யு.எஸ்.பி.3 போர்ட்கள் தரப்பட்டுள்ளன. முழு அளவிலான, எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. “ஹலோ” என்று சொன்னால், நம் முகத்தினை அடையாளம் கண்டு இயங்க, கேமராவும் கிடைக்கிறது.
இதன் பேட்டரியின் திறன் தொடர்ந்து 12 மணி நேரம் கணினியை இயக்க மின்சக்தியினைத் தருகிறது.
இந்த 'சர்பேஸ் புக்' (Surface Book) வரும் அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேவைப்படுபவர்கள், முன்பதிவினை அக்டோபர் 7 முதல் மேற்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், இவற்றின் விலை தான் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், கண்களில் நீர் வரவழைப்பதாகவும் உள்ளது. தொடக்க நிலை சர்பேஸ் புக் கணினியின் (Core i5, 8GB RAM, and a 128GB PCIe SSD) விலை அமெரிக்க டாலர் 1,499. இதில் கிராபிக்ஸ் செயலி தனியாக இருக்காது. கிராபிக்ஸ் செயலி தனியாகவும், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. யும் கொண்டதன் விலை 1,899 டாலர். உயர்நிலையில், Core i7 with 16GB RAM and a 512GB SSD கொண்ட கணினி 2,699 டாலர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அழகான தோற்றம் மற்றும் பிரித்தெடுத்த நிலையில் செயல்பாடு போன்றவற்றைக் காண https://www.youtube.com/watch?t=1&v=XVfOe5mFbAE என்ற காணொளியைக் காணவும்.
“விண்டோஸ் பயன்படுத்தும் பயனாளர்கள் முதலில் இதனைத் தங்கள் தேவை என உணர்ந்தனர். பின்னர், அதுவே தங்கள் தேர்வு என அறிந்தனர்; இப்போது அதுவே தாங்கள் நேசிக்கும் விண்டோஸ் என உணர்கின்றனர்” என சத்ய நாதெல்லா, இந்த காட்சி அரங்கில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்து அறிவித்தார்.

புதிய லூமியா போன்கள்
: இதே நிகழ்ச்சியில், மைக்ரோசாப்ட், Lumia 950 and 950XL என்ற இரு மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. வழக்கமாக, சாதனங்களின் முன்னோட்டத்தைக் காட்டும் ப்ரையன் ரோப்பர் (Bryan Roper) விலாவாரியாக இவற்றின் செயல்பாடுகளைக் காட்டினார். இவற்றின் விலை முறையே 549 மற்றும் 649 டாலர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, லூமியா போன்கள் வருவது தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது நோக்கியா ஊழியர்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்ட நிலையில், இந்த இரு லூமியா போன்கள் வெளியாகியுள்ளன. இரண்டும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு அதிரடியாய் இறக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஒரு மொபைல் போன் என்னவெல்லாம் செய்திட முடியும் எனக் காட்டப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா, Windows Hello செயலியை இயக்குவதால், நாம் போனைத் தூக்கிப் பிடித்தவுடன், தன்னை இயக்கத் தயார்ப்படுத்திக் கொள்கிறது. அதே போல் Continuum செயலி இயங்குவதால், இந்த போன்கள், ஏறத்தாழ பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ள தயாராகின்றன. போன்களை மானிட்டர் ஒன்றில் இணைத்துவிட்டால், முழுமையான பெர்சனல் கம்ப்யூட்டர் கிடைக்கிறது.
லூமியா 950 மொபைல் போனில், திரை 5.2 அங்குல அளவில் உள்ளது. இதில் பயன்படுத்தப்படுவது ஹெக்ஸா (6) கோர் ப்ராசசர் ஆகும். லூமியா 950 எக்ஸ்.எல். மொபைல் போனின் திரை 5.7 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதில் ஆக்டா கோர் சிப் இயங்குகிறது.
இரண்டிலும் 20 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா உள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 30 ஜி.பி. இதனை 2 டெரா பைட் அளவிற்கு, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் கை வளையம்: நம் உடற்பயிற்சியைக் கண்காணித்துச் சொல்ல, Microsoft Band என்ற சாதனத்தையும் மைக்ரோசாப்ட் காட்டியது. இதுவும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
நம்முடைய இதயத் துடிப்பு, உடற் பயிற்சி, அதன் மூலம் எரிக்கப்பட்ட கலோரி சத்து ஆகியவற்றை அளந்து சொல்கிறது. அத்துடன் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் பார்க்கவும் வழி தருகிறது. காலண்டர் பயன்பாட்டில் நாம் அமைத்து வைத்திருக்கும் நினைவூட்டல்களும் நமக்கு இதில் கிடைக்கின்றன.
இது கார்டெனா டூலுடன் செயல்படுவதால், நாம் நம் ஒலிக் குறிப்பின் மூலம், செய்திகளை டைப் செய்திடும்படி கட்டளை கொடுக்கலாம்.
அக்டோபர் 30ல் இது 249 டாலருக்குக் கிடைக்கும். முன்பு வெளியிட்ட சாதனத்திற்கு மாறாக, இதில் 32மிமீ x 12.8 மிமீ வளைவான AMOLED டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. ஒரு வகையான தெர்மல் பிளாஸ்டிக்கில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. இதில் உள்ள பாரோமீட்டர் சென்சார், நாம் இருக்கும் இடத்தின் உயரத்தினையும் காட்டுகிறது. இதனை 300 மீட்டர் முதல் 4877 மீட்டர் உயரத்தில் உள்ள இடங்களில் வைத்துப் பயன்படுத்தலாம்.
Windows Phone 8.1 update, iPhone: 4S, 5, 5C, 5S, 6, 6 Plus, iOS 8.1.2,மற்றும் ஆண்ட்ராய்ட் 4.3 - 5.0 ஆகிய சாதனங்களுடன் இது இணைந்து செயல்படும். புளுடூத் 4.0 தொழில் நுட்பமும் இதில் இயங்குகிறது. இதன் லித்தியம் பாலிமர் பேட்டரி 48 மணி நேரம் தொடர்ந்து இயங்க சக்தி அளிக்கிறது. முழுமையாக இதனை 90 நிமிடங்களில் சார்ஜ் செய்திடலாம்.
இந்த சாதனத்தின் இயக்கத்திற்கென, Uber, RunKeeper, Starbucks, Subway, Lose it, MyFitnessPal, Twitter and Facebook ஆகிய நிறுவனங்களுடன் மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஹோலோ லென்ஸ்:
இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹோலோ லென்ஸ் குறித்து விபரமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அதன் இயக்கத்தைக் காட்டியது. அதன் மூலமாக Project X-Ray என்னும் புதிய கேம் ஒன்றை விளையாடிக் காட்டியது. அடுத்த ஆண்டு, முதல் காலாண்டில், இது வெளியிடப்படும் என்றும், இதற்கென கேம் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள், அதற்கான சாதனங்களையும், புரோகிராம்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயக்கத்தில் அனைத்து வகை சாதனங்களையும் தந்து, சத்ய நாதெள்ளா, புதிய உச்சத்தினைத் தொடுவார் என்று இந்த காட்சி அரங்கில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள். தற்போது, 11 கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 இயங்கி வருவதாக, மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலர் மையர்சன் அறிவித்தார்.
பத்து வாரங்களில் இந்த சாதனை ஈட்டப்பட்டுள்ளது. விண்டோஸ் ஸ்டோர் இதுவரை 125 கோடி முறை அணுகப்பட்டுள்ளது. 80 லட்சம் வர்த்தக கணினிகளில், விண்டோஸ் 10 நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன், பேஸ்புக், தன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிகளை, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் வகையில் தர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலட்சியமான, நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் இயங்கும் நாள் அதிக தொலைவில் இல்லை என்பது, இந்த சாதனங்களின் செயல்பாடுகளைக் கண்டவுடன் தெரிவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X