சென்ற தலைமுறை வரை, தூக்கம் என்பது நல்வாழ்வுக்கான அருமருந்தாகவே இருந்தது. நம் முன்னோர், ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை.
தொடர்ந்து ஒருவர், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற மனம், உடல் நலம் ரீதியிலான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வீடு, அலுவலக பயணம், மன அழுத்தம், வேலைப்பளு, கோபம், சோர்வு போன்ற கழிவுகள், மூளையில் தேங்குகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் வேலையைத் தான், தூக்கம் செய்கிறது. தினசரி செய்ய வேண்டிய செயல்களில் தூக்கமும் ஒன்று.
மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு, தொடர்ந்து சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. இச்செயலுக்கு, ஓய்வு தேவை. ஒய்வு இருந்தால் தான், மறுநாள் வேலைகளை செய்ய முடியும். இல்லாவிடில், செயல்திறன் குறைந்துவிடும். எனவே கட்டாயம், எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது. சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. தூக்கம் நன்றாக இருந்தால், பல வேலைகளை சிறப்பாக செய்வதற்கான சூழலை உடலும், மனமும் உருவாக்கிக் கொள்கிறது.
தூக்கம் ஒரு சிறந்த சோர்வு நீக்கி படுத்தவுடன் ஒருவருக்கு தூக்கம் வருவது வரம். எல்லாருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. தூங்க நினைத்தும் தூங்காதவர்கள் ஒரு வகை என்றால், பல வேலைகளை காரணம் காட்டி தூங்காதவர்கள் மற்றொரு வகை. இவர்களுக்கு, வாழ்நாளில் பல பிரச்னைகள் காத்திருக்கின்றன.தலைவலி, வயிற்று வலி, நெஞ்சு வலி போன்றவை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இருந்தால், மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், ஒரு வாரம் தூக்கம் இல்லாமல் இருந்தால், அலட்சியம் செய்கிறோம்.
தூக்கமின்மை, அலட்சியம் செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து சரி செய்து கொண்டால், அதனால் வரும் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
ர. சபரீசன்
பொது மருத்துவர் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்,
பூந்தமல்லி, சென்னை
96597 77666