1. 'டயபடிக் நெப்ரோபதி' என்றால் என்ன?
சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக் குழாய் அடைபட்டு, 'நெப்ரான்' என்ற சிறுநீரகத்தில்உள்ள நுண்பகுதியை பாதித்து விடுகிறது. இது நீரிழிவால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு. ஆங்கிலத்தில், 'டயபடிக் நெப்ரோபதி' என்பர். கவனிக்காமல் விட்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்படும். பின், 'டயாலிசிஸ்' (ரத்த சுத்திகரிப்பு) செய்ய வேண்டிய நிலையும் வரும்.
2. 'டயபடிக் நெப்ரோபதி' வரக் காரணம்?
பரம்பரை காரணமாகவும் வரும். பொதுவாக, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை காரணமாகவே 'டயபடிக் நெப்ரோபதி' வருகிறது. நீரிழிவு நோய் தாக்கி, 10, 15 ஆண்டுகள் கழித்து, 'டயபடிக் நெப்ரோபதி' வரலாம்.
3. 'டயபடிக் நெப்ரோபதி'க்கான அறிகுறிகள் என்னென்ன?
'டயபடிக் நெப்ரோபதி'யை பொறுத்தவரை சோகம் என்னவென்றால், இறுதிக்கட்ட நிலை வரை அறிகுறிகள் தென்படாமல் போகலாம். நாள்பட்ட நீரிழிவு நோயாளிகள், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து, அறிந்து கொள்ள முடியும். சில நோயாளிகளுக்கு, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறி கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
4. 'டயபடிக் நெப்ரோபதி'யை அறிந்து கொள்ள, என்னென்ன பரிசோதனை முறைகள் உள்ளன?
'யூரின் மைக்ரோ ஆல்புமின்' பரிசோதனை செய்தால், ஆரம்ப நிலையிலேயே நீரிழிவால் ஏற்படக் கூடிய சிறுநீரக பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அல்லது சாதாரண சிறுநீர் பரிசோதனை மற்றும், 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனைகளில், 'டயபடிக் நெப்ரோபதி' உள்ளதை கண்டறியலாம்.
5. 'டயபடிக் நெப்ரோபதி' வராமல் தடுப்பது எப்படி?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இவ்விரண்டையும்
கட்டுக்குள் வைப்பதன் மூலம், 'டயபடிக் நெப்ரோபதி' வராமல் தடுக்கலாம். அதோடு, மருத்துவர் பரிந்துரையில்லாமல், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்படி கவனமாக இருந்தாலும், 'டயபடிக் நெப்ரோபதி'யை தடுக்கலாம்.
6. 'டயபடிக் நெப்ரோபதி' வராமல் தடுக்க, உணவு முறை மாற்றம் அவசியமா?
உடல் எடை அதிகமானால், சர்க்கரை நோய் வரும். மூன்று வேளையும் அரிசி சாப்பிடுவது
ஆபத்து. இதனால் தொப்பை, உடல் பருமன் போன்றவை அதிகமாகின்றன. மேலும், 'கொலஸ்ட்ரால்' அதிகமுள்ள உணவை குறைத்து, அதற்கு மாற்றாக, நிறைய காய்கறிகள் - பழங்கள் நார்ச்சத்துள்ள உணவுகள் உண்பது நல்லது.
7. 'டயபடிக் நெப்ரோபதி' மற்றும் 'டயபடிக் ரெட்டினோபதி'க்கும் உள்ள சம்பந்தம் என்ன?
'டயபடிக் நெப்ரோபதி' தாக்கினால், அடுத்து, 'டயபடிக் ரெட்டினோபதி'யும் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், இந்த நோய் தாக்கினால், நோயாளிகள் கட்டாயம், கண் மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்வது நல்லது.
8 இந்த நோயால் பாதிக்கப்பட்டோர், எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு, கண் மருத்துவரை அணுகி, 'டயபடிக் ரெட்டினோபதி' வரும் அபாயம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
9. இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?
ஆரம்ப கட்டம் என்றால், குணப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இறுதிக்கட்டம் என்றால், ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகமாகி விடும். அதை சமன் செய்வது கடினம்.
10. இறுதிக்கட்டத்தில், ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை தான் இறுதி தீர்வா?
இறுதிக்கட்டத்தை பொறுத்தவரை, சிகிச்சை முறைகள் குறைவு. இதற்கு, 'டயாலிசிஸ்' எனப்படும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை மட்டுமே உள்ளன.
- கே.ஆர். விஜய் சக்ரவர்த்தி,
பொது மருத்துவ நிபுணர்,
சென்னை.
97513 10211.