நீங்களும் உங்க வேலையும்....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2015
00:00

''ஹாய் தருண்... என்ன இது...'' என, கண்கள் விரிய, கேட்டாள், மனிதவளத் துறை என அழைக்கப்படும் ஹெச்.ஆர்., மேனேஜர். .
பெரிய தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இத்துறை உண்டு.
எப்படித் தான் இவளுக்கு சாத்தியமாகிறதோ தெரியவில்லை, முந்தைய நொடி வரை, 'ஹாய் மச்சான்...' என புன்னகை வழிய பேசிக்கொண்டிருப்பவள், அடுத்த நொடி, 'இன்னையோட நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்...' என்று கடிதத்தை நீட்டி விடுவாள்.
இவள் மட்டுமல்ல, ஹெச்.ஆர்., துறையிலிருக்கும் அனைவருக்குமே, இது கை வந்த கலை. இந்த வேலைக்கு ஆண்களை வைத்தால், இது போன்ற கல்தா கடுதாசி நீட்டும் சமயங்களில், கைகலப்பாகி விடும் என்பதாலேயே, அழகான, மலங்க மலங்க விழித்தபடி, ஹஸ்கி குரலில் பேசும் பெண்களை, குறிப்பாக, கல்யாணமாகாத இளம் பெண்களை தேடிப்பிடித்து வேலைக்கு அமர்த்துவர். அதுவும், தமிழ் தெரியாத வெளி மாநிலத்து பெண்கள் என்றால் இன்னும் சவுகர்யம்!
நேற்றிரவு நண்பன் நரேஷ், 'மச்சான்... இவனுங்க என்னை, திடீரென வீட்டுக்கனுப்புனத விட, அந்த ஹெச்.ஆர்., மேனேஜர், டிஸ்மிஸ் லெட்டரை நீட்டும் போது, 'ஆல் தி பெஸ்ட் அண்ணா'ன்னு சொல்லிட்டா மச்சி...' என, புலம்பி, கண்ணீர் விட்டான்.
அவனை சமாதானப்படுத்திய போது, 'டேய் என்ன அழவிடுடா... ஒரு பொண்ணு கையால, 'டிஸ்மிஸ்' ஆர்டர் வாங்கி பார்த்தவனுக்குத்தான் அதோட வலியும், வேதனையும் தெரியும். போன ஆபீஸ்லயும் இப்படித்தான் செய்தானுங்க. இவனுங்க வேணும்ன்னே தான் இந்த வேலைக்கு பொண்ணுகள போடுறானுங்க... ரூம்போட்டு பல நாட்கள் யோசிச்சுதாண்டா இப்படி ஒரு வியூகம் வகுத்திருக்கானுங்க...' என்ற போது, ஒரு பக்கம் பாவமாகவும், கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், அவனது கண்டுபிடிப்பு, சரி என்றே தோன்றியது.
'அந்த, ஹெச்.ஆர்., மட்டும் ஆம்பளையா இருந்திருக்கணும்... அப்ப தெரிஞ்சிருக்கும் என்னைப் பத்தி...' என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான்.
ஒரு வழியாக ஓய்ந்து, ஒரு புல் பாட்டிலையும் குடித்து கவிழ்த்த பின், 'என்னடா, இப்படி செய்துட்டானுங்களேடா...' என, அதுவரை அடக்கி வைத்திருந்த சுய பச்சாதாபத்தையும், அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற பயத்தையும் கட்டுப்படுத்த முடியாமல், வாய் விட்டு அழத் துவங்கியவனை ஆறுதல் சொல்லி, தேற்றி என் அறைக்கு அழைத்து வருவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது.
'என்ன நடக்கிறது இந்த சனியன் பிடித்த மென்பொருள் துறை எனப்படும் ஐ.டி., கம்பெனிகளில்... கன்சல்டன்சி, பி.பி.ஒ., கால் சென்டர் என, வகைக்கொரு பெயராக வைத்து, லட்சோப லட்ச இளைஞர்களை கசக்கி பிழிந்து, வாழ்க்கையை துவக்கும் முன், 'நீ வாழவே லாயக்கில்ல'ன்னு முத்திரை குத்தி, துரத்தி விடுகின்றனரே... தூக்கத்திற்கு கெஞ்சும், ஒடுங்கிய கண்கள், முன் வழுக்கை, கூன் நடை என, 30 வயதிலேயே, 70 வயதுக்காரனைப் போல் அல்லவா இருக்கிறான் சாப்ட்வேர் துறையில் வேலை பார்ப்பவன்!
முதல் மாத சம்பளத்தில், பெருமையாக வாங்கிய ஸ்மார்ட் போனிலிருந்து மணியடித்தாலே, 'நீ இன்னையோட வீட்டுக்கு கிளம்பலாம்'ன்னு வந்திருக்கும் மெயிலோ என, நள்ளிரவிலும் பதறியடித்து போனை எடுத்து வெறிப்பவனுக்கு, எங்கிருந்து வரும் தூக்கமும், குழந்தையும்? 'கல்யாணமாகி ஆறு வருஷம் ஆச்சு... இன்னும் குழந்தை இல்ல...' என டாக்டர் வீட்டு வாசலிலும், 'ஸ்டிமுலேஷன்லயே ப்ராப்ளம் சார்...' என செக்ஸாலஜிஸ்ட்கள் க்ளினிக்கிலும் தவம் கிடக்கும் ஐ.டி., தம்பதிகளின் எண்ணிக்கை நீளுகிறதே...
அவனுக்கென்னப்பா... புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் ஐ.டி.,யில வேலை...' என பெருமூச்சு விடுவோருக்கு தெரியுமா... குழந்தை பெத்துட்டு வர்றதுக்குள்ள, 'உங்கள் சேவை இனி எங்களுக்கு தேவையில்லை' என்ற மெயில் டெலிவரியாகிடுமோ என்ற பயத்தில், குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் ஐ.டி., மனைவிகளின் பயமும், பதட்டமும்!
பிரிஜ்லிருந்து ஐஸ் வாட்டரை மடமடவென தொண்டைக்குள் கவிழ்த்து, கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். வார்த்தைகளைக் கோர்த்து, அந்த கடிதத்தை டிசைன் செய்து முடித்து பிரின்ட் எடுத்து, கவரில் வைத்து முடிப்பதற்கும் மணி, 7:00 அடிப்பதற்கும் சரியாயிருந்தது.
'இன்னைக்கு முழுவதும் நரேஷ் தூங்கிக் கொண்டு தான் இருப்பான்; பாவம் நிம்மதியா தூங்கட்டும்...' மனதிற்குள் நினைத்தபடி, வெளிக் கதவை பூட்டி, கிளம்பினேன்.
''என்னாச்சு மிஸ்டர் தருண்?'' கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாள், ஹெச்.ஆர்., மானேஜர்.
''இது என் ரெசிக்னேஷன் லெட்டர்!''
அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த முக பாவனையுடன், என் ராஜினாமா கடிதத்தை வாங்கினாள். வாழ்க்கையிலேயே முதன் முதலாக இப்போது தான் ஒருவன், வேலையை விட்டுத் துரத்தப்படாமல், தானாக, வேலையை தூக்கி எறிவதை பார்க்கிறாள்.
''ஹேய்... நீ இப்ப எலிஜிபிள், 'சி' லிஸ்ட்ல இருக்க! அடுத்த மாசம், 'பி' கேட்டகரிக்கு ப்ரமோட் ஆகப் போற...'' என்றாள்.
சாப்ட்வேர் துறை ஊழியர்களை, அவர்கள் வேலை செய்யும் திறனுக்கேற்ப, ஏ.பி.சி.டி.இ., என, தரம் பிரிப்பர். அச்சமயங்களில், அலுவலகமே அல்லோ கல்லோலப்படும். ஒவ்வொருவரும், அடுத்தவன் எந்த பிரிவிற்குள் வந்திருக்கிறான் என, தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பர்.
''இப்ப எலிஜிபிள் கேட்டகரியில இருக்கற நான், எந்த நிமிடம், 'நான் எலிஜிபிள்' கேட்டகரிக்கு வருவேன்னு சொல்ல முடியாதே,'' என்றேன் கிண்டலாக!
அசட்டு புன்னகையுடன், தலையை தாழ்த்தினாள் ஹெச்.ஆர்., மானேஜர்.
என் நினைவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகர்ந்தது.
மே, 11, 2013 — என் நிறுவனம், நான் செய்து கொண்டிருக்கும் வேலை, அதன் சூழல், எத்தகைய அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை, முதன் முதலாக மிக கொடூரமாக உணர வைத்த நாள் அது!
மூன்று மாதங்களுக்கு முன், வேலையை விட்டு துரத்தப்பட்ட இளங்கோவை, எதேச்சையாக பாண்டிச்சேரி கடற்கரையில் சந்தித்த போது, மிகவும் நம்பிக்கையுடன் தான், அக்கேள்வியை கேட்டேன்.
'ஹாய்டா மச்சான்... என்ன, புதுச்சேரியில் வேலை கிடைச்சிடுச்சா... இனிமே, எப்படா வீக் எண்ட் வரும், 'என்ஜாய்' செய்ய புதுச்சேரிக்கு போகலாம்ன்னு ஏங்க வேண்டியதில்ல. தினம் தினம் கொண்டாட்டம் தான்...' என்று, நான் உற்சாகமாய் கூற, இளங்கோவின் கண்களிலோ, தாரை, தாரையாய் கண்ணீர்!
உதடுகள் கோண, அழுதவனை தேற்ற முடியவில்லை.
'காசு இல்லேன்னா, தூரத்து உறவுகள் இன்னும் தூரமாகப் போகும்; நண்பர்கள் பறந்துருவாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, கட்டின பொண்டாட்டி ஓடிப் போவாளாடா...' என்றான் ஆற்றாமையுடன்!
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். அவன் காதல் திருமணத்தை நடத்தி வைத்த சாட்சிகளில் நானும் ஒருவன்.
'என்னடா சொல்றே...' என்றேன் அதிர்ச்சியுடன்!
'வேலை போயிடுச்சுன்னு தெரிஞ்ச அடுத்த நிமிடத்திலிருந்து ஒரே சண்டை!
'நீ உண்மையான ஆம்பளையாயிருந்தா, ஆறு மாசத்துக்குள்ள இதே சம்பளத்துல ஒரு வேலையத் தேடு; அது வரைக்கும் என்னைத் தேடவோ, பேசணும்ன்னோ முயற்சிக்காத... என் போன நான், 'சுவிட்ச் ஆப்' செய்துடுவேன். சரியா ஆறு மாசம் ஆனதும், நானே போன் செய்றேன். அப்ப, உன் நிலைமையைப் பொறுத்து, நாம திரும்ப ஒண்ணா சேர்ந்து வாழலாமா, வேணாமான்னு யோசிப்போம்'ன்னு சொல்லிட்டு, நான் ஆசையா வாங்கித் தந்த நகை, துணிமணி எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிட்டா...
'என் மேலயே எனக்கு வெறுப்பாயிருக்குடா. எனக்காக ஒருத்தி, என்னை விரும்பலங்கறத என்னால தாங்கிக்கவே முடியல.
'ஆனா, மச்சான்... இன்னையோட எனக்கு எல்லாத்திலேர்ந்தும் விடுதல...' என்றவன், 'ஒரு பாட்டில் தூக்க மாத்திரைய விழுங்கிட்டுத் தான், இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்...' என்றான்.
அப்போது தான், அவன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலையும், அவன் வார்த்தைகள் குழறுவதையும் கவனித்தேன். நெஞ்சம் பதற, 'ஐயோ... யாராவது இங்க வாங்களேன்... ஆட்டோ, டாக்சி...' பயத்திலும், பதட்டத்திலும் எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில், வெறி பிடித்தாற் போல, தடதடவென கடலை நோக்கி ஓடியவன், என் கண் முன்பே கடலுக்குள் போய் விட்டான்.
முதன் முதலில், எனக்கு மிக நெருக்கமான ஒருவரின் மரணத்தை, கண்கூடாகப் பார்த்ததுடன், அதற்கு காரணமான சாப்ட்வேர் நிறுவன அலுவலக சூழலின் இன்னுமொரு பக்கத்தை நினைத்து, உறைந்து போனேன்.
தொடர்ந்து, ஜூன், 8, 2014ல் நடந்த சம்பவம், என்னை மேலும் உலுக்கி விட்டது.
மில்லி மீட்டருக்கு மேல் நீளாத அளவெடுத்த புன்னகைகளுக்கு மத்தியில், வாய் விட்டு சிரிக்கும் ஒரே ஆத்மா, கதிர்; திருப்பூர்காரர். அவரை நாங்கள், 'தொப்பை அங்கிள்' என்று தான் செல்லமாக கூப்பிடுவோம். சாப்ட்வேர் துறையில் தானும் ஒரு அங்கமென நினைத்து, புல்லரித்து ஆனந்தப்படும் ஜீவன்.
'எங்க பரம்பரையிலேயே இவ்வளவு காசை, மாச சம்பளமா மொத்தமா பார்க்கற ஒரே ஆள் நான்தாம்ப்பா...' என, 38 ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பற்றி, வாய் ஓயாமல் சொல்வார். சம்பளத்தில் பாதியை ஊருக்கு அனுப்பிவிட்டு, சென்னையில் மேன்ஷன் வாழ்க்கை. பெரும்பாலான நாட்கள் இவர் சம்பளத்தில் தான், 'ரூம் மேட்ஸ்' அத்தனை பேருக்கும் சாப்பாடு.
அன்று, பதவி நீக்க கடிதத்துடன் வந்தவரின் கண்களில், முதன் முறையாக கண்ணீரைப் பார்த்தேன்; என் அடி வயிறு கலங்கியது.
என் கைகளை இறுக பிடித்தவர், 'இந்த மாசம் அப்பாவுக்கு ஆப்ரேஷன் செய்யணும்; பொண்ணுக்கு இப்ப தான் வரன் வந்திருக்குன்னு மனைவி போன் செய்து சொன்னா... பையனுக்கு இன்னும், 10 நாளைக்குள்ள பீஸ் கட்டணும்...' என அவர் பேச பேச, அவரின் கைகள் வழியாக, அவரின் உணர்வுகள், என் கைகளுக்குள் படர்ந்து தகித்தன.
அவர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது, மதியம், 12:10; மாலை, 6:18க்கு அவர் அறை நண்பனிடமிருந்து எங்களுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், 'தொப்பை அங்கிள் கமிடட் சூசைட்.!'
நான் என்னைப் பற்றியும், என் அலுவலக சூழலைப் பற்றியும், என் நிலையைக் குறித்தும் நினைத்து, உறைந்து போன மற்றுமொரு தருணம் இது!
வேலை என்ற பெயரில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்... கீழை நாட்டு மனித உயிர்களையும், உணர்வுகளையும் துச்சமாக மதிக்கும், உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும், பணம் கொழுத்த முதலைகளுக்கு சேவை செய்யவா நான் பிறப்பெடுத்தேன்... இதனால், எனக்கோ, நான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கோ ஒரு துளியேனும் பயனிருக்கிறதா... எம்.என்.சி.,யில் வேலை, சாப்ட்வேர் சம்பாத்தியம் என்று வெளியில் தம்பட்டம் அடித்து, இப்படி தினம் தினம் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரு மானங்கெட்ட பிழைப்பு இருக்க முடியுமா?
அடுத்து வந்த மாதங்களில் மிகத் தீவிரமாக சிந்தித்து, இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் அமைப்பில் உள்ள ஒருவரை சந்தித்த போது, என் மனதிற்குள் விதைத்த விதை தான், 'எவர்க்ரீன் டெவலப்பர்ஸ்!' பொன் விளையும் பூமியான தஞ்சை விவசாயிகளை ஒருங்கிணைத்தேன். அத்துடன், சாப்ட்வேர் துறையில், எவனெவனுடைய நிறுவனங்களுக்காகவோ கொட்டக் கொட்ட விழித்து நான் உருவாக்கிய, 'புரோக்கிராமிங்' அறிவையும், 'கஸ்டமர் கேர் சர்வீஸ்' என்ற பெயரில், வீடு துடைக்கும் மிஷினையும், மூடைத் தூண்டும் மாத்திரையையும் விற்று, அவை சரியாக வேலை செய்யாத கடுப்பில், போனில் அவர்கள் கழுவிக் கழுவி ஊற்றும் மலிவான வார்த்தைகளை, ஏதோ ஆசீர்வாதம் போல் புன்னகையுடன் பெற்று கொள்வதையே தினசரி பிழைப்பாக கொண்டுள்ள இன்னும் சில நண்பர்களின் மார்க்கெட்டிங் திறமையையும், நம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த, திட்டமிட்டு விட்டேன்.
''ஆனா தருண்... நீங்க நோட்டீஸ் கொடுக்கணுமே...'' என்றாள், ஹெச்.ஆர்., மேனேஜர்.
''இதுக்கு முன் வேலை பாத்தவங்கள, வேலையை விட்டு துரத்தும் போது, நீங்க நோட்டீஸ் கொடுத்தீங்களா...''
''ரெண்டு மாச சம்பளத்தை கொடுத்தோமே...''
''நான், என் மூணு மாச சம்பளத்தை, உங்க கம்பெனிக்கு தர்றேன்னு மேனேஜர் கிட்ட போய் சொல்லுங்க,'' என்றேன்.
வாயைப் பிளந்தபடி, என்னை ஆச்சர்யமாய் பார்த்தாள், ஹெச்.ஆர்., மேனேஜர்.
''தருண்... இப்ப நீங்க பார்த்திட்டிருக்கிற புராஜெக்டோட மூளையே நீங்க தான்; இப்படி திடீர்ன்னு விட்டுட்டுப் போனீங்கன்னா, கம்பெனிக்கு எவ்வளவு நஷ்டம்ன்னு யோசிச்சீங்களா...'' என்றாள்.
என் கண் முன், நவீன், இளங்கோ, கதிர் அங்கிள் வந்து போக, வார்த்தைகள் என் கட்டுப்பாட்டை மீறி வெடித்துச் சிதறின.
''உங்க முதலாளியோட லாபத்தை விட, எனக்கு, மனுஷனோட உயிர் முக்கியம்,'' என்றபடி திரும்பிப் பார்க்காமல், வாசலை நோக்கி வேகமாக நடந்தேன்.
எதுவும் புரியாமல், குழப்பத்துடன், நான் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹெச்.ஆர்., மேனேஜர்!

சி.ஆர்.செலின்
கல்வித்தகுதி: பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன் எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம், எம்.எஸ்சி., சைக்காலஜி.
பணி: மனநல ஆலோசகர், சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில், விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவராக உள்ளார். இதுவரை, 23 சிறுகதைகள் மற்றும் இரண்டு தொடர்கதைகள் எழுதியுள்ளார். ஐந்து புத்தகங்கள் மற்றும் எட்டு மொழி பெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சாமான்ய மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தன் படைப்புகளில் பதிவு செய்ய வேண்டுமென்பது இவரது லட்சியம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சக்தி - chennai,இந்தியா
17-நவ-201514:53:11 IST Report Abuse
சக்தி இப்படி ஒரு கதை தேவையா ? ... இல்லை கதைக்கு பஞ்சமா ?...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
11-நவ-201520:51:33 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கார்பொரேட் கம்பெனிகளை பத்தி எவ்ளோ கரீக்டா புட்டுபுட்டுவசிருக்காங்க , இவனுக தேறும் சம்பளத்துக்கு ராப்பகலா உழைக்கும்னபர்கலை வேலை இழந்து தவிக்கும்போது ஏற்படும் நிலைகள் எவ்ளோ , இத நம்பி பல இளைஞ்ஞர்கள் அரசு வேலைக்கும் முயற்சியே செய்றதே இல்லே என்பது கசப்பான உண்மை ,பல ரேங்க் ஹோல்டர்சம் கூட பாரின் வேலைக்கு காத்துண்டுருக்கிரத்தை பார்க்கும்போதுவயறு எரியுது
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
11-நவ-201500:34:39 IST Report Abuse
Manian இந்த கதை தவறான எண்ணங்களை பரப்புகிறது. பிரிக்ஸ் எனப்படும் - பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சைனா,சவுத் கொரியா - என்ற எல்லா நாடுகளிலும பொருளாதார வளர்சி மிக குறைந்து விட்டது. அங்கெல்லாம் வளர்சி வராத வரை நம் நாடும் பொருளாதார வளர்சி பெறாது. சோஷிலிச கொள்கைகள் நமக்கு உதவாது. நம்மையும் ம் தனிப்பட்ட அணுகு முறைகளும் மாற வேண்டும். தொடர்ந்த தகுதி முன்னேற்றம் ஒன்றே வழி. கண்டது காட்சி, கொண்டது கோலம் இருப்பவர்கள் வாழ்வு உலகம் பூராஉமே இப்படிதான் துன்பப்படுவதாக ஆராய்சிகள் கூறுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X