பொதுவாகவே, ஆங்கிலச் சொற்களை கற்கும் வயதில், அவற்றை கேம்ஸ் வழியாகக் கற்றுக் கொள்வதனை பலரும் விரும்புவார்கள். நமக்குச் சவால் தரும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். நாமும் பல புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். இப்படிப்பட்ட விளையாட்டுகளை இணையத்தில் தேடிய போது கிடைத்த தளம் Knoword. இந்த தளத்தில் கிடைப்பது சொல் விளையாட்டு மட்டுமல்ல; சொல்லை எழுத்துப் பிழை இல்லாமல், தட்டச்சு செய்திடவும் வேண்டும். எனவே, அந்த இரு திறமைகளும் இங்கே சோதனைக்கு ஆளாகின்றன என்று கூறலாம். விளையாடிப் பார்க்கும்போதுதான், நம் தட்டச்சு திறனும், ஸ்பெல்லிங் திறனும் சோதிக்கப்படுவதனை உணர்வோம்.
தங்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று எண்ணுபவர்கள் எல்லாம் இந்த தளம் சென்று இதில் விளையாடிப் பார்க்கலாம்.
விளையாட்டில் நிலைகளும் உண்டு. Novice, Hotshot மற்றும் Wizard என மூன்று நிலைகளில் விளையாடலாம். விளையாடத் தொடங்கும்போது, குறிப்பிட்ட சொல்லின் முதல் எழுத்தும், அந்த சொல் குறித்த சிறிய விளக்கமும் தரப்படும். விளக்கத்தினைப் படித்து, அந்த சொல்லை நினைவில் தேடிப் பெற்று, சரியாக எழுத்துப் பிழை இன்றி, வேகமாக தட்டச்சு செய்திட வேண்டும். ஒரு நிமிடத்திற்குள் இதனை முடிக்க வேண்டும். சரியாகத் தந்துவிட்டால், 20 புள்ளிகளும், கூடுதலாக 5 விநாடி நேரமும் தரப்படும். தவறான சொல் தந்தால், 10 புள்ளிகள் மைனஸ் ஆகத் தரப்படும்.
இணைய இணைப்பில் எந்த இடத்திலும் இதனை நீங்கள் விளையாடலாம். மூளைக்கான சரியான பயிற்சி இது. இதன் மூலம், நம் சிந்தனையைத் துடிப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரு நிமிடத்தில் நாம் அடையும் பரபரப்பும் அதன் பின்னர் கிடைக்கும் வெற்றியும் நமக்கு அருமருந்தாக அமைகிறது. அவசியம் ஆங்கிலம் தெரிந்த அனைவரும் விளையாடிப் பார்க்க வேண்டும்.