சென்ற நவம்பர் 5 அன்று, மும்பையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சத்ய நாதெள்ளா கலந்து கொண்ட Future Unleashed 2015 நிகழ்ச்சியில், இந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, சர்பேஸ் ப்ரோ 4 (Surface Pro 4) கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பி.சி. இணைந்த லேப்டாப், வரும் ஜனவரியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என அவர் அறிவித்தார். இந்தியாவில், இந்த சாதனத்தைப் பயன்படுத்த பலரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் இது கிடைக்கும் எனவும் கூறினார்.
சர்பேஸ் ப்ரோ 4 லேப்டாப் கம்ப்யூட்டரில், 12.3 அங்குல அளவில் திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 2160×1440 பிக்ஸெல்கள் ஆகும். பிக்ஸெல்கள் நெருக்க அளவு 267PPI. இதில் PixelGlass என அழைக்கப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 1024 வேறுபட்ட அழுத்த உணர்வு நிலைகள் இருக்கும்.
இதனை அதி நவீன Intel Skylake ப்ராசசர்கள் இயக்குகின்றன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10. தடிமன் 8.4 மிமீ. சர்பேஸ் ப்ரோ 3 கம்ப்யூட்டரின் தடிமன் 9.1 மிமீ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்புறமாக, 8 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 16 ஜி.பி. ஸ்டோரேஜ் 500 ஜி.பி. விரல் ரேகை, கேமரா மூலம் முக உணர் திறன் ஆகிய தொழில் நுட்பங்கள் இதில் இயங்குகின்றன.
இதனுடைய ட்ரேக் பேட் சற்றுப் பெரியது. இதில் கீகளுக்கிடையே அதிக இடம் இருப்பதால், விரைவாக இதில் டைப் செய்திடலாம்.