கேள்வி: பொதுவாக இதுவரை விண்டோஸ் இயக்கத்தில் தரப்பட்ட ஷார்ட் கட் கீகள் இல்லாமல், புதியதாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தர முடியுமா? குறிப்பாக அவை சிஸ்டம் ஷார்ட் கட் கீகளாக இருக்க வேண்டும்.
என். சியாமளா, திருப்பூர்.
பதில்: நல்ல கேள்வி. தெரிந்ததையே மீண்டும் அறியப் பெறாமல், புதியனவற்றை மட்டும் கேட்டுள்ளீர்கள். இதோ.
விண்டோஸ் லோகோ கீ +A: ஆக் ஷன் செண்டர் திறக்கப்படும். விண்டோஸ் லோகோ கீ +S: தேடல் கட்டம் கிடைக்கும். விண்டோஸ் லோகோ கீ +C: கார்டனா (நம் நாட்டில் இயக்கப்படும்போது) நம் கட்டளையைக் கேட்கும் வகையில் திறக்கப்படும். விண்டோஸ் லோகோ கீ + டேப் கீ: டாஸ்க் வியூ கிடைக்கும். விண்டோஸ் லோகோ கீ +Ctrl+D: விர்ச்சுவல் டெஸ்க் டாப் திறக்கப்படும். விண்டோஸ் லோகோ கீ +Ctrl+Right Arrow: நாம் உருவாக்கிய வலது பக்கமாக அமைந்திருக்கும் விர்ச்சுவல் டெஸ்க்டாப் நிலைகளுக்கிடையே செல்லும். விண்டோஸ் லோகோ கீ +Ctrl+Left Arrow: நாம் உருவாக்கிய இடது பக்கமாக அமைந்திருக்கும் விர்ச்சுவல் டெஸ்க்டாப் நிலைகளுக்கிடையே செல்லும். விண்டோஸ் லோகோ கீ +Ctrl+F4: நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விர்ச்சுவல் டெஸ்க்டாப்பினை மூடும். இவைதான் முதன்மையான மாற்றங்களைக் கொண்டிருக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள். இன்னும்
பல உள்ளன. மைக்ரோசாப்ட் தளத்தில் இவற்றைப் பெறலாம். இணைய தள முகவரி: http://windows.microsoft.com/en-us/windows-10/keyboard-shortcuts#.
கேள்வி: எட்ஜ் பிரவுசர் பற்றி நிறைய குறிப்புகள் அதனைப் புகழ்ந்து வருகின்றன. நீங்கள் அதனைப் பயன்படுத்துபவராக இருந்தால், மிகச் சிறப்பான, உங்களைக் கவர்ந்த ஓர் அம்சம் குறித்து கூறுங்களேன்.
ஆர். ஜெயமாலா, காரைக்கால்.
பதில்: எட்ஜ் பிரவுசர் பயன்பாடு எனக்குப் பிடித்துள்ளது. என்னுடைய ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10, எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். பல அம்சங்களை எனக்குப் பிடிக்கும்; அவை குறித்து கட்டுரைகள் பல ஏற்கனவே எழுதி உள்ளேன். அந்தக் கட்டுரைகளில் இல்லாத ஓர் அம்சம் குறித்து இங்கு கூறுகிறேன். அந்த வசதியைத் தரும் ஓர் எக்ஸ்டன்ஷன் குறித்தும் பார்க்கலாம்.
எட்ஜ் பிரவுசரில் Reading View என்று ஒரு வசதி உள்ளது. வழக்கமாக, நீங்கள் பிரவுசர் வழியாக ஓர் இணைய தளத்தினைப் பார்க்கையில், பக்கத்தில் விளம்பரங்கள், தொடர்பே இல்லாத வேறு தகவல்கள், சார்ந்த மற்ற தளக் கட்டுரைகள் என, நம் மானிட்டர் திரை இடத்தைப் பிடித்துக் கொள்ளும் விஷயங்கள் அதிகமாக இருக்கும். இந்த வியூவில், இவை அனைத்தும் நீக்கப்பட்டு, நமக்கு வேண்டிய தளத்தில் உள்ள தகவல் கட்டுரை மட்டும் காட்டப்படும். ேலே உள்ள இரு படங்களில் இந்த இரண்டு காட்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் காணலாம்.
அப்படியானால், இது போன்ற தெளிவான வியூ கிடைக்க, எட்ஜ் பிரவுசருக்குத்தான் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நீங்கள், குரோம், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், அதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்றைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திட்டால் போதும். அதே ரீடிங் வியூ கிடைக்கும். அந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் பெயர் ”Clearly”. இதனை https://evernote.com/clearly/ என்ற இணைய முகவரியில் உள்ள தளத்தில் இலவசமாகப் பெறலாம்.
இந்த தளத்திற்குச் சென்றவுடன், அது தானாகவே, உங்கள் பிரவுசர் என்னவென்று அறிந்து கொண்டு, அதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட லிங்க் தரும். கம்ப்யூட்டரில் இறக்கி, பதிவு செய்து பயன்படுத்தினால், எட்ஜ் பிரவுசர் தரும் ரீடிங் வியூ கிடைக்கும்.
கேள்வி: கூகுள் மேப் என்னும் தளத்தினை நான் பயன்படுத்தி, ஊர்கள், அவற்றிற்கிடையே உள்ள வழிகள் பார்த்திருக்கிறேன். ”கூகுள் ஸ்கை” என அண்மையில் கேள்விப் பட்டேன். இதுவும் மேப் தானா? அல்லது வேறா? இதன் பயன் என்ன? சின்ன குறிப்பாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். பரந்தாமன், மயிலாடுதுறை.
பதில்: நம் வாழ்வில், ஏதேனும் ஒரு வயதில், நமக்கு மேலே உள்ள விண்வெளி குறித்து வியப்பாகப் பார்த்திருப்போம். பள்ளியில் படிக்கும் போது, நட்சத்திரக் கூட்டங்கள் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகையில், வீட்டிற்கு வந்து மொட்டை மாடியில் இரவில் படுத்தவாறே, அது இதுதானோ என வியந்து பார்த்திருப்போம். விண்வெளியும் அதில் உள்ள நட்சத்திரங்களும், கோளங்களும் என்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயங்களாகும். இதனை, நம் கம்ப்யூட்டர் திரையில் காட்ட கூகுள் நிறுவனம் தரும் செயலி தான் ”கூகுள் ஸ்கை.”
விண்வெளி குறித்து ஆய்வு நடத்தும் பல்வேறு ஆய்வுக் கூடங்களில் பணியாற்றும் வல்லுநர்களின் ஒத்துழைப்போடு, கூகுள் இந்த தளத்தினை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் முதலில் நன்கு அறிந்து கொண்டு, பின் இதில் தகவல்களை அறிய முயற்சிக்கலாம். அதற்கு முதலில் http://www.google.com/sky/about.html என்ற தளம் செல்லவும். இங்கு அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள் பகுதி, மிகத் தெளிவாக இது குறித்து சொல்கிறது.
பின்னர், http://www.google.com/sky/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று கூகுள் ஸ்கை தரும் காட்சிகளைக் காணலாம். இங்கு இத்தளத்தின் முகப்பு பக்கம் சென்று, கீழாகத் தரப்பட்டுள்ள பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நாம் விரும்புவதைக் காணலாம். அடுத்த வகைக்குச் செல்ல வேண்டும் என்றால், மீண்டும் ஹோம் சென்று, தேர்வு செய்து காணலாம். அனைவரும், குறிப்பாக மாணவர்கள், பார்க்க வேண்டிய தளம் இது.
கேள்வி: என்னிடம் விண்டோஸ் 7 அல்டிமேட் உள்ளது. இது ஒரு 64 பிட் கம்ப்யூட்டர். இதில் எப்8 அழுத்தி சேப் மோட் செல்ல முயற்சித்தால், கிடைக்க மறுக்கிறது.
பெஞ்சமின் தனராஜ், நாகப்பட்டினம்
பதில்: கவலைப்பட வேண்டாம், பெஞ்சமின். இதற்கு மாற்று வழி ஒன்று விண்டோஸ் 7 வைத்துள்ளது.
1. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கட்டத்தில் “msconfig” என டைப் செய்து எண்டர் தட்டவும். இது, System Configuration டூல் காட்டும்.
2. இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Safe Boot என்பதற்கு அடுத்து உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். “Minimal” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்வு செய்தவுடன் ஓகே கிளிக் செய்திடவும்.
4. இதனை அடுத்து காட்டப்படும் பாக்ஸில் ஓர் எச்சரிக்கை செய்தி இருக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். அதாவது, உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்கள் சேப் மோடில் இயக்கலாம். இதில் Restart என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது நீங்கள் அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் பணியினை முடிக்க வேண்டும் என்றால், ரீ ஸ்டார்ட் செய்திடாமல், அந்த வேலையை முடிக்கவும். அதன் பின் ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் சேப் மோடில் இயங்கத் தொடங்கும்.
5. நீங்கள் சேப் மோடில் இருக்கும்போது, நீங்கள் எதை எல்லாம், கம்ப்யூட்டரில் சரி செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டீர்களோ, அவை அனைத்தையும் முடித்துவிடவும். பின் மீண்டும் எம்.எஸ். கான்பிக் கொடுத்து System Configuration utility விண்டோ பெறவும். இங்கு சேப் மோட் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இல்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து சேப் மோடில் தான் இயங்கத் தொடங்கும்.
கேள்வி: அடிக்கடி ஆட்டோ கரெக்ட் டூல் பாக்ஸினை நான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு ஒரு ஷார்ட் கட் கீ அமைத்து செயல்படுத்த முடியுமா? அதனால், மெனுவின் மற்ற பிரிவுகள் பாதிக்கப்படுமா?
ஏ. துரைராஜ், திருப்பூர்.
பதில்: ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸ் பெற, வேர்ட் தொகுப்பில், அதிலேயே தரப்பட்ட ஷார்ட் கட் கீ எதுவும் இல்லை. ஆனால், இதனை உருவாக்க இரு வேறு வழிகள் உள்ளன. அவற்றை இங்கு தருகிறேன்.
1. முதலில் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்தால், கிடைக்கும் சிறிய விண்டோவில், வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) பட்டன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 மற்றும் வேர்ட் 2013 தொகுப்புகளில், ரிப்பனில், பைல் டேப் கிளிக் செய்து, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில், Customize என்னும் ஆப்ஷன் அல்லது Quick Access Toolbar (வேர்ட் 2010 மற்றும் 2013ல்) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸின் கீழாக Key Board Shortcuts என்பதன் அருகே Customize என்னும் பட்டன் தரப்பட்டிருக்கும். அதில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Choose Commands என்பதைப் பயன்படுத்தி, Commands Not In The Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அங்கு தரப்பட்டிருக்கும் கட்டளைகள் பட்டியலில் கீழாக ஸ்குரோல் செய்து சென்று, AutoCorrect என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. தொடர்ந்து Add பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது இந்த கமாண்ட், டயலாக் பாக்ஸின் வலது பக்கம் எடுத்துச் செல்லப்படும்.
7. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். இப்போது இந்த கமாண்ட் Quick Access டூல்பாரில் காட்டப்படும். new tool என்பதில் கிளிக் செய்திட, AutoCorrect டயலாக் பாக்ஸ் பாப் அப் ஆகும். இங்கு நீங்கள் விரும்பும் ஆட்டோ கரெக்ட் டேட்டாவினை அமைக்கலாம்.
ஷார்ட் கட் கீ அமைக்க இன்னொரு வழியும் உள்ளது. கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. மேலே தரப்பட்டுள்ள 1, 2, மற்றும் 3ல் உள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும். பின்னர், Customize Keyboard டயலாக் பாக்ஸில், Categories என்னும் பிரிவில், All Commands என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதன் கீழாகச் சென்று Tools>Auto Correct என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து, Press New Shortcut Key என்பதில் கிளிக் செய்திடவும். இதனை கிளிக் செய்தவுடன், கர்சர் அங்கு நிறுத்தப்படும். இங்கு ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸ் பெறுவதற்கான, நீங்கள் அமைத்திட விரும்பும் ஷார்ட் கட் கீகளை அமைக்கவும். இதுவரை அமைக்கப்படாத ஷார்ட் கட் கீயாக இருக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டதாக இருந்தால், ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாகக் காட்டப்பட்டு, நீங்கள் தொடர்ந்து அதனையே தேர்ந்தெடுத்தால், முந்தைய பயன்பாடு நீக்கப்படும். புதிய ஷார்ட் கட் கீ தேர்ந்தெடுத்த பின்னர், Assign என்பதில் அழுத்தவும். இப்போது நீங்கள் அமைத்த ஷார்ட் கட் கீ, உங்களின் விருப்பப்படியான கட்டளைக்கு அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்து அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடி வெளியேறவும்