கருவுற்ற காலங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா?
ஆ.நிரோஷினி, சென்னை
கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்போது அதிகமான உடல் இயக்கங்கள், அழுத்தமான செயல்முறைகளால், சிலருக்குக் கரு கலைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் சிலருக்கு ரத்தப்போக்குக் கூட ஏற்படலாம். எனவே, சில மாதங்களுக்குக் கவனமாக இருங்கள் என்பது, கரு பாதுகாக்க வேண்டும் என்பதால் மட்டுமே. முன்பெல்லாம் தாம்பத்ய உறவில் ஈடுபட்ட பல பெண்களுக்கு சுகப் பிரசவம் நடந்தது. அது முமுக்க முழுக்க மனவலிமை மற்றும் தம்பதியருக்குள் இருக்கும் சவுகரியத்தை பொறுத்தது.
ரா.கவிதா, மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.
நான் திடீரென குண்டாகி விட்டேன். வயது, ௨௮. நண்பன், 'வெள்ளை உணவுகளை தவிர்த்து விடு' என்கிறான். வெள்ளை உணவுகள் ஆபத்தா?
வை.பிரசாத், மயிலாடுதுறை.
அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது உண்மை தான். அதற்காக, முற்றிலும் தவிர்த்து விடுவதும் சாத்தியம் இல்லை. சர்க்கரையை ஒரு நாளைக்கு ௩ கிராம் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை முற்றிலும் வெள்ளையாக இருக்க, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது கல்லீரல் நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுகின்றன. சர்க்கரைக்குப் பதில் பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
பாலுக்கு பதிலாக கால்சியத்தை, எள், கேழ்வரகு மூலம் பெற்றுக் கொள்ளலாம். கடலிலிருந்து கிடைக்கும் உப்பு, சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், அயோடின் உப்பை தயாரிக்கும்போது, அதிக வெப்பத்தில் உப்பை, 'பிளீச்' செய்கின்றனர். இதனால் உப்பிலுள்ள பல தாதுக்கள் வெளியேறி விடுகின்றன.
அயோடின் அதிகளவு நிறைந்த உப்பை உணவில் சேர்ப்பதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு, இந்தியா. இதற்கு அரிசி உணவு முக்கிய காரணம். அரிசியிலுள்ள மாவுச்சத்து, கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும். எனவே, அரிசி சாப்பாட்டை குறைப்பது நல்லதே.
ந.கிஷோர், வீகன் டயட் நிபுணர், சென்னை.
ண என் கணவருக்கு பல் தேய்க்கும்போது ரத்தம் வருகிறது. அவரது ஈறு மற்றும் பற்களில் ஏதாவது பிரச்னை இருக்குமா?
தா.ராஜேஸ்வரி, கடலூர்.
கடினமாக, அழுத்தமாக பல் தேய்ப்பதால் ரத்தம் வரும். வைட்டமின் 'சி' குறைபாடு, நீரிழிவு நோய் போன்ற காரணங்களாலும் வரும். பெண்களுக்கு சில ஹார்மோன் மாற்றங்களால் பற்கள் மற்றும் ஈறுகளில் ரத்தம் வரும். இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், எப்போதுமே மென்மையான பிரஷ் வைத்து, மெதுவாக பல் தேய்க்கும் பழக்கமே நல்லது. மூன்று மாதங்களுக்கு ஒரு பிரஷ்ஷை மாற்றுவது நல்லது அல்லது பல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
அ.நிஷா, பல் மருத்துவர், சென்னை.