இன்றைய கணினிகள் தரும் வசதிகள், எந்த வரையறைக்குள்ளும் அடங்குவதில்லை. இந்நிலையில், லேப்டாப், டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் கணினிகளின் பயன்கள் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ள கட்டுரை மிக அருமை. பயனாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில்தான் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனையும் சரியாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆர். ஜென்ஸி, தாம்பரம்.
கேண்டி க்ரஷ் விளையாட்டிற்கு, எல்லாரும் ஏதேனும் ஒரு வயதில் அடிமைகளாகிறார்கள். இவர்களில் ஒரு சதவீதம் பேர் தரும் பணமே, எக்கச்சக்கமாக உள்ளது என்றால், இதன் வடிவமைப்புத் திறனை மெச்சியே ஆக வேண்டும். அதனாலேயே, இந்நிறுவனம் இன்று வியக்கத்தக்க விலைக்கு கை மாறியுள்ளது. புதிய நிறுவனத்தின் மூலம் இன்னும் சில உச்சங்களைக் காணலாம்.
ஆர். கார்த்திகேயன், சிவகங்கை.
மைக்ரோசாப்ட் தற்போது, தன் முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, விண்டோஸ் 10 ஐ மையமாகக் கொண்டே இயக்குகிறது. மெல்ல, மெல்ல, முன்பு தந்த சிஸ்டங்களின் வாழ்நாளை முடிவிற்குக் கொண்டு வருகிறது. இதன் ஒரு நிலையே, விண்டோஸ் 7 மற்றும் 8 இயக்கங்களுக்கான உரிமங்கள், கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கு நிறுத்தப்படுவது குறித்த அறிவிப்பு. நம்மை எப்படியும் தன் வலைக்குள் கொண்டு வந்துவிடும் திறன் படைத்தது மைக்ரோசாப்ட்.
என். ஜீவகன், பொள்ளாச்சி.
க்ளவ்ட் கம்ப்யூட்டிங் குறித்த விரிவான கட்டுரை, அதன் பல பரிமாணங்களைக் கற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. எழுதிய ஆசிரியருக்கு நன்றி. பல சந்தேகங்கள் கட்டுரையில் தீர்க்கப்பட்டுள்ளன.
பா. ஞானவேல், விழுப்புரம்.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பிரபலமான ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களைப் பட்டியலிட்டமைக்கு நன்றி. அதே போல, புதிய அப்ளிகேஷன்கள் அந்த ஸ்டோரில் தரப்படும் போது, தரமானவற்றின் பெயர்களையும், அவற்றின் பயன்களையும் டிப்ஸ் ஆகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. சுந்தரேசன், திருநெல்வேலி.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் மால்வேர் என்று உங்கள் எச்சரிக்கைத் தகவலைப் பார்த்த பின்னர், என் போனில், பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிட்டேன். தேவையற்று இயங்கி வந்த, பதிந்த புரோகிராம்களை நீக்கிவிட்டேன். தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.
எஸ். ராமஜெயம், புதுச்சேரி.
சீனாவில் தயாராகி இங்கு விற்பனை செய்யப்படும் போன்கள் குறித்து எழுதும் நீங்கள், அவற்றிற்கான வாடிக்கையாளர் சேவை, போன்களின் உழைக்கும் நிலை, காலம் ஆகியவை குறித்தும் எழுதி எங்களுக்கு வழி காட்டவும்.
ஆர். சரண்ராஜ், நாகூர்.
இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டில், இனி அடுத்த கட்டம் 4ஜி ஆகத்தான் இருக்கும். டேட்டா பரிமாற்றம், டேட்டா செயல்படுத்தல், நிதி மேலாண்மை என அனைத்தும் இனி 4ஜி வழியாகவே இருக்கும். விரைவில் இதில் இந்தியா, பன்னாட்டளவில், முன்னிலை இடம் பெற்றிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தான், பல பன்னாட்டு நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு இங்கு இந்த தகவல் தொடர்பு பிரிவில் முதலீடு செய்து வருகின்றன. இந்திய நிறுவனங்கள் இதனை உணர்ந்து, கவனத்தைத் திருப்பினால், நிச்சயம் முன்னுக்கு வரலாம்.
பேரா. ஆர். கே. பத்ரிநாதன், கோவை.