டேட்டா வகைப்படுத்தல் நீங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை ஒரு வாரம் பயன்படுத்தினாலே, அதில் தரப்பட்டுள்ள டேட்டா பிரித்து வகைப்படுத்தும் வசதியினை அறிந்திருப்பீர்கள். இந்த வசதியைப் பயன்படுத்தி, எண்களைக் கூடுதல் மதிப்பிலிருந்து குறைவான மதிப்பிற்கும், குறைவான மதிப்பிலிருந்து கூடுதல் மதிப்பிற்கும், டெக்ஸ்ட்டை அகரவரிசைப்படியும் மற்றும் நேர் மாறாகவும் வகைப்படுத்தி பட்டியல் அமைக்கலாம். ஆங்கிலத்தில் மேலாகக் கூடுதல் மதிப்பு வழி எனில் அது A-Z ஆகும். எண் மதிப்பு எனில் 0-9 ஆகும். மாற்று வழியில் அமைத்தால் (Z to A, 9-0 ) வரிசை நேர் மாறாக மாற்றி அமைக்கப்படும்.
இதில் எந்த வகை வேண்டும் என்பதற்கு நாம் Ascending அல்லது Descending ரேடியோ பட்டன்களை, Sort டயலாக் பாக்ஸில் தேர்ந்தெடுத்தால் போதும். எக்ஸெல் 2007, Order எனப்படும் கீழ்விரி மெனுவில் இது தரப்பட்டிருக்கும். கேபிடல் மற்றும் சிறிய எழுத்துக்களையும் (uppercase மற்றும் lowercase letters) இந்த வரிசைப்படுத்தலில், எடுத்துச் செயல்படுத்தும்படி எக்ஸெல் செயலிக்கு நாம் கட்டளை இடலாம். அப்படி கட்டளை அமைக்காத பட்சத்தில், இவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்ளப்பட்டு வகைப்படுத்தப்படும். எழுத்து வகையிலும் கவனம் செலுத்தி, டெக்ஸ்ட்டை வகைப்படுத்த வேண்டும் என்றால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. முதலில், எந்த செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தி, வகைப்படுத்த வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், டேட்டா (Data) டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து, Sort டூலில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் செயலி, இப்போது Sort டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. இந்த டயலாக் பாக்ஸில் காட்டப்பட்டுள்ள கட்டளைகளைப் பயன்படுத்தி, தகவல்கள் எந்த வகையில் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Options பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது Sort Options டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
1. இங்கு கிடைக்கும் Case Sensitive என்னும் செக் பாக்ஸினைப் பயன்படுத்தி, எக்ஸெல் எந்த வகையில், தகவல்களைப் பிரித்து வகைப்படுத்த வேண்டும் என்பதனை வரையறை செய்திடவும். இந்த செக் பாக்ஸினைத் தேர்ந்தெடுத்தால், வகைப்படுத்தும் போது, டெக்ஸ்ட்டில் உள்ள சிறிய, பெரிய எழுத்து வகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இல்லை எனில், இந்த வேறுபாடு குறித்து எக்ஸெல் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது.
2. அடுத்து ஓகே கிளிக் செய்து, Sort Options டயலாக் பாக்ஸை மூடவும்.
3. தொடர்ந்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் முடிவு செய்தபடி, தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்படும்.
ஒர்க் ஷீட்களில் ஹெடர் மற்றும் புட்டர் எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக இருந்தால், அந்த வேலை சற்று நேரம் எடுக்கும் செயலாக அமையும். இதனை எப்படிச் சந்திப்பது எனப் பார்க்கலாம்.
இது ஒன்றும் கடினமான வேலை அல்ல. அனைத்து ஒர்க் ஷீட்களையும் ஒரு குழுவாக எண்ணி செயல்பட்டால், இது மிகவும் எளிதாக அமையும்.
1. முதலில் எந்த ஒர்க் ஷீட்களில் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பது என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.
2. அந்த வரிசையில் உள்ள முதல் ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், கடைசி ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கும் வரை ஷிப்ட் கீயை அழுத்திப் பிடிக்கவும். இப்போது பல ஒர்க்ஷீட்கள் தேர்ந்தெடுக்கப்படும். இதனை உணர்த்திக் காட்ட, எக்ஸெல் புரோகிராம், Group என்ற சொல்லை தன் டைட்டில் பாரில் காட்டும்.
4. இனி, நீங்கள் விரும்பியபடி, ஹெடர் அல்லது புட்டரை அமைக்கவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ஒர்க் ஷீட்கள் அனைத்தும் அதே போல் அமைக்கப்படுவதனைக் காணலாம்.