கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2015
00:00

கேள்வி: சென்ற வாரம் என் கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொண்டேன். என் யாஹூ மின் அஞ்சல்களுக்கான தொடர்பு முகவரிகளை, இந்த சிஸ்டத்தில் காணவில்லை. எனவே, எனக்கு வரும் மின் அஞ்சல்களை, மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திட முடியவில்லை. இன்னொரு லேப்டாப் கம்ப்யூட்டருக்குச் சென்று, அதில் காண்டாக்ட் முகவரிகளைத் தேடி, பார்வேர்ட் செய்திட வேண்டியுள்ளது. விண்டோஸ் 10, நான் அடிக்கடி பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ளதால், அதில் உள்ள விண்டோஸ் 10 சிஸ்டத்தினை முழுமையாகப் பயன்படுத்த எண்ணுகிறேன். யாஹூ மெயிலைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறேன். என்னுடைய காண்டாக்ட் முகவரிகளை எப்படி இதில் பெற முடியும்?
எஸ்.கே.சிரஞ்சீவி, கோவை.
பதில்:
நீங்கள் யாஹூ தளத்தினை வெப்மெயில் மூலம், அதன் சர்வரில் சென்று பயன்படுத்துகிறீர்களா அல்லது ஏதேனும் ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் பயன்படுத்துகிறீர்களா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் பிரவுசர் வழியாக, உங்கள் யாஹூ மெயிலை அணுகுகிறீர்கள் என்றால், விண்டோஸ் 10 சிஸ்டம், அதனை ஒரு துளியளவு கூட மாற்றுவதற்கான வாய்ப்பில்லை. ஆனால், அவுட்லுக் அல்லது விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்தினால், அந்த புரோகிராம், இன்னும் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும். அதுவும் விண்டோஸ் 10 அப்கிரேட் செய்ததனால், பாதிக்கப்பட்டிருக்காது. ஆனால், நீங்கள், விண்டோஸ் 10 மெயில் அப்ளிகேஷனுக்கு மாறி இருந்தால், பிரச்னை ஏற்பட்டிருக்கும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், நீங்கள் உங்கள் காண்டாக்ட் முகவரிகளை People App என்பதில் இணைக்க வேண்டியதிருக்கும். ஆனால், இந்த People App அப்ளிகேஷன், யாஹூ தொடர்புகளை ஏற்றுக் கொள்ளாது. எனவே, விண்டோஸ் லைவ் மெயில் (Windows Live Mail) அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அல்லது, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைப் புதியதாகத் தொடங்கி, உங்கள் யாஹூ மெயில் அனைத்தையும், அந்த அக்கவுண்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். பின்னர், இதிலிருந்து உங்கள் காண்டாக்ட்களை இயக்கலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களின் பெயரை, வேர்ட் புரோகிராமில் இருந்தவாறே பெயர் மாற்ற முடியுமா? மற்ற புரோகிராம்களில் இருக்கும் இந்த வசதி வேர்டில் இருப்பது போல் தெரியவில்லையே? இதைப் பற்றிய குறிப்புடன் பதில் தரவும்.
எஸ். ராஜலஷ்மி, திருப்பூர்.
பதில்:
வேர்ட் புரோகிராமின் உள்ளாக, டாகுமெண்ட் அல்லது பைல்களின் பெயரை மாற்ற வழி இல்லை. வேறு சில புரோகிராம்களில் இந்த வசதி உள்ளது உண்மைதான். டாகுமெண்ட் திறந்திருக்கையில், அதனை இன்னொரு பெயரில் சேவ் செய்திடலாம். ஆனால், ஒரே பைல் இரு பெயர்களில் இருக்கும். வேர்ட் புரோகிராம் திறந்திருக்கும்போது, டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றின் பெயரை மாற்றும் வசதி உள்ளது. கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. எந்த டாகுமெண்ட்டின் பெயரை மாற்ற வேண்டுமோ, அது வேர்டில் திறந்த நிலையில் இருக்கக் கூடாது. திறந்திருந்தால் மூடவும். இப்போது பைல் Open டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் Open என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010 எனில், ரிப்பனில் File டேப் அழுத்தி, கிடைக்கும் விண்டோவில் Open என்பதில் கிளிக் செய்திடவும்.
2. வேர்ட் 2013 மற்றும் வேர்ட் 2016ல், ரிப்பனில், பைல் டேப் அழுத்தி, Open என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Browse என்பதில் கிளிக் செய்திடவும்.)
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பைல்களின் பட்டியல் கிடைக்கும். எந்த பைலின் பெயர் மாற்றப்பட வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் ஒரு காண்டெக்ஸ்ட் மெனுவினைக் காட்டும்.
4. இந்த மெனுவில் Rename என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது பைலின் பெயர் ஹைலைட் செய்யப்பட்டு பைலின் பெயரை மாற்றிட உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்படும். அதில் நீங்கள் தர விரும்பும் புதிய பெயரை டைப் செய்திடவும். அடுத்து எண்டர் அழுத்தவும்.
5. அடுத்து டயலாக் பாக்ஸை மூடவும்.

கேள்வி: மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கடைசியானது என்று அறிவித்துள்ளதாகப் படித்தேன். அப்படியானால், இனி, விண்டோஸ் இடத்தில் இன்னொரு வகை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருமா?
ஆ. ஜெயசுதா, திருப்பூர்.
பதில்:
நன்றாகக் கவனித்துப் படியுங்கள். விண்டோஸ் 10 பதிகை, விண்டோஸ் இயக்க முறைமையின் இறுதிப் பதிப்பு என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மைதான். விண்டோஸ் பதிப்பு 11க்குப் பதிலாக, இந்த விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குத் தொடர்ந்து அப்டேட் அல்லது அப்கிரேட் கிடைத்துக் கொண்டே இருக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சிஸ்டத்தைக் கைவிடப் போவதாக எங்கும் சொல்லவில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, மைக்ரோசாப்ட், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பினை வெளியிடுவது வழக்கம். வாடிக்கையாளர்கள், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பெற, உரிமத்திற்கான கட்டணம் செலுத்தியாக வேண்டும். சில வேளைகளில், இந்த மாற்றமும் மிகவும் சிரமம் தரும் செயலாக இருக்கும். மேலும், புதிய அம்சங்களை, வசதிகளைப் பெற, வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டப்படி, அப்டேட் பைல்கள், தொடர்ந்து விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே, விண்டோஸ் 10 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இறுதி விண்டோஸ் சிஸ்டம் என்று எடுத்துக் கொள்வது தவறான கோணமாகும்.

கேள்வி: நான் புதிய ப்ளாஷ் ட்ரைவ் ஒன்று வாங்கி, பார்மட் செய்து பார்த்தேன். Used Space, free space என வந்தது. புதிய ட்ரைவில் இது எப்படி இருக்கும்? என சந்தேகித்து, மீண்டும் ரீ பார்மட் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் பார்த்ததில், அதே பதில் கிடைத்தது. புத்தம் புதிய ட்ரைவில் இது போல Used Space எப்படி வரும்? தவறு எங்கே உள்ளது?
எஸ். பூரணி கலா, திண்டுக்கல்.
பதில்:
இது வழக்கமான ஒன்றுதான். “காலியாக” அமைக்கப்படும் NTFS பைல் சிஸ்டத்தில், உள்ளாக சில பைல்கள் அமைக்கப்படும். அவை master file table (“$MFT”), பைல் சிஸ்டம் ரெகவரி மேற்கொள்ள log file மற்றும் ட்ரைவ் இடம் பற்றிக் கூறும் (“$Volume”), எனப் பல பைல்கள் இடம் பெறும். இதில் பெரிய பைலானது, (“$Bitmap”) என்னும் பைல் தான். இது பயன்படுத்தப்பட்ட இடம், காலியாக உள்ள இடம் ஆகியவற்றைக் கணித்து வைத்து, உங்களுக்குக் கூறும். இவை எடுத்துக் கொள்ளும் இடமே நமக்கு Used Space ஆகக் காட்டப்படுகிறது. பைல் சிஸ்டம் உருவாக்கப்படுகையில், மேலே சொன்ன பைல்களுக்கான இடம் ஒதுக்கப்படுகிறது.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களில் பட்டியல் அமைக்கையில், வழக்கமாக ஒரே வகையான எண்களே அமைகின்றன. இவற்றிற்குப் பதிலாக, நமக்குப் பிடித்த எண்கள் அல்லது எழுத்து வகைகள் மற்றும் இவற்றின் வடிவமைப்புகளை மாற்றி அமைப்பதற்கான செட்டிங்ஸ் வழிகளைப் பற்றி விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ஜெபமணி, மதுரை.
பதில்:
வேர்ட் இதற்கான விரிவான அமைப்புகளைத் தருகிறது. நீங்கள் எண்களைத்
தர விரும்பும், அல்லது மாற்ற விரும்பும் டெக்ஸ்ட்டினை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஹோம் டேப்பில் உள்ள “Paragraph” பிரிவில் உள்ள “Numbering” பட்டனில் கிளிக் செய்யவும். இந்த “Numbering Library” பிரிவில் கிடைக்கும் கீழ்விரி மெனுவில் எண்களுக்கான சில படிவங்கள் கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே அந்த டாகுமெண்ட்டில், எண்களைப் பயன்படுத்தி இருந்தால், அந்த பார்மட் வகை Recently Used Number Formats” என்ற பிரிவில் காட்டப்படும். நீங்கள் விரும்பும் பார்மட், இந்த கீழ்விரி மெனுவில் இல்லை என்றால், “Define New Number Format” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Define New Number Format” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் பட்டியலில் இருந்து “Number style” ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இவை Arabic: 1, 2, 3, 4 , Uppercase Roman: I, II, III, IV, Lowercase Roman: i, ii, iii, iv, Uppercase Alphabetic: A, B, C, D, Lowercase Alphabetic: a, b, c, d, Ordinals: 1st, 2nd, 3rd, 4th, Word Numbers: One, Two, Three, Four, Word Ordinals: First, Second, Third, Fourth, மற்றும் Leading Zeros: 01, 02, 03, 04 என அமைந்திருக்கும். இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் “Number format” எடிட் பாக்ஸில், ஒவ்வொரு எண் அல்லது எழுத்தினை அடுத்து ஒரு புள்ளி மாறா நிலையில் தரப்பட்டிருக்கும். இந்த புள்ளியைக் கூட நீங்கள் (“:”), அல்லது (“)”) என மாற்றலாம். அங்கு தரப்பட்டுள்ள புள்ளியை நீக்கிவிட்டு, நீங்கள் விரும்பும் கேரக்டரை அமைத்து, ஓகே அழுத்தி வெளியேறலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், ஒரு பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட்டைச் சுற்றி, அதன் அச்சிடும் அளவினை அமைக்கும் கட்டத்தினை எப்படி அமைப்பது? அது அச்சில் வரக் கூடாது.
கா. மீனா குமார், புதுச்சேரி.
பதில்:
உங்கள் டாகுமெண்ட் Print Layout viewல் இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதற்கு View அழுத்தி, முதல் தேர்வாக உள்ள Print Layout தேர்ந்தெடுக்கவும். பின்னர் Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு உள்ள டேப்களில், View டேப் தேர்ந்தெடுக்கவும். இந்த பாக்ஸில் உள்ள பிரிவுகளில், Print and Web Lay out options என்ற பிரிவில் கவனிக்கவும். இங்கு Text Boundaries என்ற பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால், உங்கள் டாகுமெண்ட்டில் எந்த அளவிற்கு அச்சிடப்படும் என்பதனைக் காட்டும் டெக்ஸ்ட் அச்சு எல்லைக் கோடு, சிறு புள்ளிகளால் அமைக்கப்பட்டு காட்டப்படும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டேபிளில் அமைக்கப்படும் செல்களில் பார்டர் லைன் ஏற்படுத்துகிறோம். நான் பார்த்த ஒரு டாகுமெண்ட் டேபிளில், செல்களில் மட்டும் பார்டர் அமைக்காமல், அதன் உள் அமைந்த தகவலைச் சுற்றியும் பார்டர் அமைக்கப்பட்டிருந்தது. இதனை எப்படி அமைப்பது?
ஆர். ஜெயச் சந்திரன், மதுரை.
பதில்
: நல்ல கேள்வி. வேர்ட் டேபிளில் உள்ள செல்களைச் சுற்றி அமைக்கப்படும் பார்டர்களை எப்படி அமைக்கிறோம் என்பது பலருக்குத் தெரியும். நீங்கள் கேட்டிருக்கும், செல் உள்ளே உள்ள டேட்டாவினை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
1. எந்த செல்லில் உள்ள டேட்டாவினைச் சுற்றி பார்டர் அமைக்க விருப்பமோ, அதன் உள்ளாக கர்சரை நிறுத்தவும். (இதற்கு செல்லையோ, அல்லது உள்ளே உள்ள டெக்ஸ்ட்டையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.)
2. அடுத்து ரிப்பனில் Home டேப்பினை அழுத்தவும்.
3. இங்கு Paragraph குரூப்பில், Border tool அடுத்து உள்ள கீழ்விரி அம்புக் குறியில் அழுத்தவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders and Shading டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இதில் காட்டப்பட்டுள்ள டூலைப் பயன்படுத்தி, எந்த வகை பார்டரை அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Apply To மெனுவினைப் பயன்படுத்தி, Paragraph தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X