திருவையாறு தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் வா.செ.செல்வம், தென்னை சாகுபடியாளர்கள் தென்னை வளர்ப்பில் முன்னேற்பாடாக இருக்க ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை அடைமழையாக மாறி, தென்னந்தோப்புகள் வெள்ளக் காடாகியுள்ளது. ஒரு வாரம் 10 நாட்களுக்கு மேல் தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்குமானால், தென்னை மர வேர்கள் அழுகி தென்னை சாக வாய்ப்புள்ளது. தென்னை அதிக தண்ணீரையும் தாங்காது. அதிக வறட்சியையும் தாங்காத சாதுவான பயிர் அரை அடி அகலம், அரை அடி ஆழமும் உள்ள ஒரு வாய்க்கால் இரு தென்னை வரிசைக்கு நடுவில் எடுத்து பள்ளமான பகுதி நோக்கி வெட்டி விட்டு உடனே தண்ணீர் வடிக்கவும்.
நட்ட தென்னம்பிள்ளைகளின் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்குமானால் குழிக்கு குழி ஒரு ஓரத்தில் அரை அடி ஆழம், அரை அடி அகலத்தில் ஒரு சிறிய வாய்க்கால் அமைத்து உபரி தண்ணீரை வடிக்கவும். மேல் மண் ஈரம் குறைந்து காய்ந்து தென்னம்பிள்ளை புது வேர் விட்டுத் தழைக்கும். வடிகால் வசதி இல்லாவிட்டால் தண்ணீர் மட்டத்திலிருந்து அரை அடி உயரத்தில் மண்மேடு அமைத்து நட்டபிள்ளையை எடுத்து நடவும். அது பிழைத்து விடும். தண்ணீருக்குள் தொடர்ந்து இருக்குமானால் அழுகி செத்து விடும். எடுத்து நட்ட பிள்ளை வேர் விட்டு தழைத்து வளரும்.
தண்ணீரில் மூழ்கிய தென்னம்பிள்ளைகளின் குருத்துப் பகுதியில் வண்டல் படிந்திருக்கும். இந்த வண்டலில் கலந்துள்ள பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்களினால் பூஞ்சாண வியாதிகள் தாக்கி குருத்து அழுகி தென்னம் பிள்ளைகள் சாக வாய்ப்புள்ளது. P.S.MIX பவுடர்
10- கிராம் எடுத்து 200 மி.லி. தண்ணீரில் கரைத்து நடுக்குருத்தில் ஊற்றவும். குருத்து பசுமை கொடுத்து வளரும்.
திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையம் தொலைபேசி எண். 04362 - 260 363-ல் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறலாம். இவ்வாறு தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் வா.செ.செல்வம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.