மகிழினி....பெயருக்கு ஏற்றார் போல், தன்குரலால் பலரையும் மகிழ்வித்தவர். கும்கி படம் எப்படி மறக்க முடியாதோ... அதில் வரும் சொயிங்...சொயிங்... பாடலையும் மறக்க முடியாது. அந்தகாந்தக் குரலுக்கு சொந்தக்காரரான மகிழினிக்கும், கிராமியத்திற்கும் ரொம்பவே தொடர்பு. இன்று சினிமா பாடகராக மட்டுமே நமக்கு தெரியும் மகிழினி மணிமாறனின் பின்புலங்கள் மிகவும் கடினமானவை. மகாலிங்கபுரம் சரணாலயா பள்ளியின் நாட்டுபுறக் கலை ஆசிரியரும், கணவருமான மணிமாறனுடன் இணைந்து இவர் நடத்தும் புத்தர்கலைக்குழு, நாட்டுப்புற கலைகளின் தொட்டிலாக திகழ்கிறது.
தமிழரின் பாரம்பரிய இசையான பறைக்கு உயிர்கொடுத்துக் கொண்டிருக்கும் மகிழினியை பொங்கல் மலருக்காக சந்தித்தோம்...
''பறவைகள்கூடும் வேடந்தாங்கலில் நான் பிறந்து வளர்ந்தேன். குழந்தையா இருக்கும் போதே அம்மாவுடன் வயலுக்குச்செல்வேன் அங்கே பெண்கள் பாடிக்கொண்டே விவசாய பணிகளில் ஈடுபட்டிருப்பர். அவர்களோடு சேர்ந்து நானும் பாடுவேன். எனக்கான பாடல் ஞானம் பிறந்தது அப்படிதான். திடீரென எங்கப்பா இறந்துட்டாரு.குடும்பத்த காப்பத்த வேண்டிய பொறுப்பு மூத்தப்பொண்ணான என் மேல வந்தது. நானும் வேலை தேடி சென்னை வந்தேன். இங்க வேலை பாக்கும்போது தான் மணிமாறனோட அறிமுகம் கிடச்சது. ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்,'' என்றவரை தொடர்ந்தார் மணிமாறன்,
''சென்னை கானா கலைஞனான நான், தெருக்கூத்து குடும்பத்தைச் சேர்ந்தவன். யாராவது இறந்து விட்டால் எங்கள் வீட்டில் அனைவரும் கூடி, விடிய விடிய கானா கச்சேரி நடத்துவோம். இரவெல்லாம் பாடிக் கொண்டே இருப்போம். விடிந்ததும் பறையிசை அடிப்பதை கேட்டு கேட்டு எனக்குள் பறை மேல் ஈர்ப்புவந்தது. பல்கலை வித்தகர் அழகர்சாமி வாத்தியாரிடம் பறை கற்றேன். பின்அவரே தவில் கற்றுக் கொடுத்தார். திருமணத்திற்கு பின் புத்தர் கலைக்குழுவைத்துவங்கி, நாட்டுப்புற கலைகள் மூலமாக மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்த
துவங்கினோம்.
பறை இறப்பிற்கான இசை என்பதை உடைக்க நினைத்தோம். உண்மையில் இது இறப்புக்கான இசை அல்ல; மதுஅருந்தி இதை இசைக்க கூடாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் தான் பறை பயிற்சிக்கு அனுமதிப்போம். கோயம்பேட்டில் மூடை தூக்கும் தொழிலாளி முதல் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி வரை எங்களிடம் பறை பயின்றுள்ளனர். சென்னை மற்றும் வேடந்தாங்கலில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். தனியார் நிகழ்ச்சிகளை தவிர,அரசு பள்ளிகளில் இலவசமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்,'' என மணிமாறன் முடிக்க, மீண்டும் தொடர்ந்தார் மகிழினி....
''திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு சென்று பாடல்கள் மூலம், குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கிறேன். அந்தகுழந்தைகளின் ஆசிர்வாதம் தான், எனக்கு கும்கி படத்தில் கிடைத்த வாய்ப்பு. தெலுங்கிலும் அந்த பாடலுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. நான் இதுவரை கேட்காத மொழி தெலுங்கு. அதிலும் என்னை பாட வைத்த இசையமைப்பாளர் இமானுக்கு நன்றிசொல்ல வார்த்தை இல்லை. அவர் தந்தஊக்கம் தான் என்னை அங்கேகொண்டு சென்றது,'' என கூறி முடித்தார் மகிழினி.ஊருக்கு உபதேசம் என்றில்லாமல், தங்கள் இரு குழந்தைகளையும் பாரம்பரிய இசைக்கு இழுத்துச் செல்லும் இந்த தம்பதிகள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் தங்களுக்கான அடையாளம் தமிழ் தான் என்பதில், உறுதியாய்இருக்கிறார்கள். அதனால் தான் மகிழ்வாய் இருக்கிறது மகிழினி குடும்பம்.
இவர்களை வாழ்த்த 77087 76653 ல் பேசலாம்.
ஆஷி