கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
00:00

கேள்வி: எழுத்துகள் கம்ப்யூட்டரிலும், அச்சிலும் எடுத்துக் கொள்ளும் இடத்தைப் பொருத்து இரு வகைப்படும் என்று ஒரு குறிப்பில் படித்தேன். இது உண்மையா? எண்களுக்கும் இது பொருந்துமா? எந்த வகை எழுத்தினை நாம் டாகுமெண்ட்களில் பயன்படுத்த வேண்டும்?
ஆ.சாரதா, புதுச்சேரி.
பதில்:
ஒரு கட்டுரை எழுதத் தேவையான கேள்விகளை கேட்டுள்ளீர்கள். சுருக்கமாக பதில் தருகிறேன். எழுத்துகள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இடத்தைப் பொறுத்து, proportional space மற்றும் monospace எழுத்துவகைகள் என அழைக்கப்படுகின்றன. proportional space எழுத்து வகைகள், படுக்கை வசத்தில் தங்களுக்குத் தேவையான இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் எழுத்துகளாகும். இதன்படி, "i" எழுத்து "w" எழுத்து எடுத்துக் கொள்ளும் இடத்தைக் காட்டிலும் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்ளும். Monospace எழுத்து வகைகள் அனைத்தும் ஒரே அளவிலான இடத்தையே எடுத்துக் கொள்ளும். தட்டச்சு இயந்திரத்தில் உள்ள எழுத்துகள் இந்த வகையைச் சார்ந்தவையே. நாம் டாகுமெண்ட்களில், எந்த வகை எழுத்தினையும் பயன்படுத்தலாம். இருப்பினும் Monospace எழுத்துவகைகள், டாகுமெண்ட்டிற்கு அழகு சேர்க்கும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எண்கள் அனைத்தும் Monospace வகையைச் சேர்ந்தவையே.

கேள்வி: என் புதிய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, படங்களை விண்டோஸ் 10 லேப்டாப் கம்ப்யூட்டருக்கு, அவற்றை எளிதாக எடிட் செய்வதற்காக மாற்ற முயன்றேன். விண்டோஸ் இயக்கம் மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கங்களை செட் செய்த போதும், யு.எஸ்.பி. வழி இணைத்த போது, எதுவும் நடைபெறவில்லை. எதில் பிரச்னை உள்ளது எனத் தெரியவில்லை. டிப்ஸ் தரவும்.
எஸ். அருமைநாயகம், தேனி.
பதில்:
முதலில், நீங்கள் போனில் உள்ள ஆண்ட்ராய்ட் இயக்கத்திற்கு, நீங்கள் போட்டோக்களை யு.எஸ்.பி. கேபிள் வழியாக மாற்ற இருப்பதனைத் தெளிவாக அமைக்க வேண்டும். போனை அதனுடைய யு.எஸ்.பி. கேபிள் வழியாக இணைக்கவும். இந்த கேபிள் சார்ஜ் செய்திடும் கேபிளாக இல்லாமல், டேட்டா பரிமாற்றத்திற்கான கேபிளாக இருக்க வேண்டும். போனின் ஸ்கிரீன் லாக் செய்யப்பட்டு இருக்கக் கூடாது. இருந்தால், போனை இயக்க நிலைக்குக் கொண்டு வரவும். ஆண்ட்ராய்ட் 6.0 கொண்டுள்ள போனில், திரையை மேலிருந்து கீழாக ஸ்வைப் செய்திடவும். இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்களிலிருந்து கிடைக்கும் அறிவிப்புகள் காணப்படும். இந்த பட்டியலில், “USB for Charging” என்ற அறிவிப்பு இருக்கும். இதனைத் தட்டி, மேலும் சில ஆப்ஷன்ஸ் இருப்பதைக் காணவும்.
இங்கு கிடைக்கும் “Use USB For” என்ற பாக்ஸில், “Photo transfer (PTP)” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், போனை ஒரு டிஜிட்டல் கேமரா போல இயக்கலாம். (PTP என்பது Picture Transfer Protocol என்பதன் சுருக்கமாகும்) மியூசிக், விடியோ போன்ற மீடியா பைல்களை மாற்ற Media Transfer Protocol, MTP என்ற வழிமுறை உள்ளது.
இவ்வளவு செட் செய்தும் படங்களை மாற்ற வழி கிடைக்கவில்லை என்றால், இன்னொரு கேபிள் பயன்படுத்திப் பார்க்கவும். அல்லது கம்ப்யூட்டரில், வேறு ஒரு யு.எஸ்.பி. போர்ட்டினைப் பயன்படுத்தவும்.
இன்னொரு வழியும் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு ஒரு பேக் அப் வழிமுறையினை Google Photos app என்ற அப்ளிகேஷன் தருகிறது. இதனைப் பயன்படுத்தி, உங்கள் போட்டோக்களை, ஆண்ட்ராய்ட் போனிலிருந்து இணையத்திற்கு கூகுள் தளத்திற்கு அனுப்பலாம். பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து https://photos.google.com என்ற தளம் சென்று, படங்களைத் தரவிறக்கம் செய்து, எடிட் செய்து கொள்ளலாம்.

கேள்வி: நான் எப்போதும் என் ஜிமெயில் அஞ்சல் அக்கவுண்ட்டினையே பயன்படுத்துகிறேன். சென்ற வாரம் பொது இணைய மையத்தில், இதனைப் பயன்படுத்தும் போது, அதிலிருந்து லாக் ஆப் செய்திட மறந்துவிட்டேன். அதன் பின்னர், என் லேப்டாப் மூலம் பயன்படுத்தினேன். இதனால், ஏதேனும் பிரச்னை வருமா?
ரெ. பழனிச்சாமி, திண்டுக்கல்.
பதில்:
பிரச்னைகள் வரலாம். எப்போது? நீங்கள் 'லாக் ஆப்' செய்யாமல் வந்த உங்கள் ஜிமெயில் அஞ்சல் பக்கம் திறந்துதானே இருக்கும். எனவே, வேறு யார் வேண்டுமானாலும், அதில் உள்ள மெயில்களைப் படிக்கலாம். அதிலிருந்து பிரச்னைகளை உண்டாக்கும் அஞ்சல்களை மற்றவருக்கு அனுப்பலாம். பழி உங்கள் மீது வந்து சேரும். ஆனால், நீங்கள் உங்கள் லேப்டாப்பிலிருந்து, உங்கள் அஞ்சல் கணக்கினைத் திறந்து மீண்டும் மூடி விட்டதால், அதில் ஏதும் பிரச்னை வராது. இது போன்ற சூழ்நிலைகளை எண்ணிப் பார்த்து, கூகுள் ஒரு தீர்வினை வடிவமைத்துள்ளது. பொது மையமாக இல்லாமல், நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடம், கம்ப்யூட்டர் அல்லது உங்கள் சொந்த கம்ப்யூட்டர் வழியாக, ஜிமெயில் செல்லவும் அங்கு கீழாக Last account activity என்பதன் கீழாக உள்ள, Details என்பதில் கிளிக் செய்து திறக்கவும். அங்கு கிடைக்கும் பட்டியலில், நீங்கள் எந்த ஐ.பி. முகவரியில் இருந்தெல்லாம், ஜிமெயில் பார்த்தீர்கள் என்று காட்டப்படும். இதில் நீங்கள் பார்த்த பொது மைய ஐ.பி. முகவரியும் இருக்கும். இப்போது, நீங்கள், Sign Out all other session என்பதில் கிளிக் செய்திடவும். இது, அப்போது உள்ள ஐ.பி. முகவரி தவிர்த்து, மற்ற அனைத்தையும் Sign Off செய்துவிடும். கவலையில்லாமல் இருக்கலாம். உங்கள் பாஸ்வேர்டைத் திருடி, வேறு யாரேனும், வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரியில், உங்கள் ஜிமெயிலைத் திறந்து பார்த்தால், உங்களுக்கு எச்சரிக்கை அனுப்புவதற்கான செட்டிங்ஸ் அமைப்பதற்கும் இந்த இடத்தில் வசதி உண்டு. நீங்களே, வெளிநாடு செல்கையில், வேறு ஒரு சூழ்நிலையில், முற்றிலும் புதிய ஐ.பி. முகவரி மூலம், ஜிமெயில் பார்த்தால், உடனே உங்களுக்கு எச்சரிக்கை செய்தி வரும். அதனைச் சரியானது என நீங்கள் உறுதி அளித்தால் தான், மேற்கொண்டு தொடர முடியும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் பதிந்த பின்னர், அது நமக்குப் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தீர்கள். இதனை எப்படி மேற்கொள்வது என டிப்ஸ் தரவும். நான் பழைய சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள விரும்புகிறேன்.
என். சுகுமாறன், விருதுநகர்.
பதில்:
நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொண்டீர்கள் என்று குறிப்பிடவில்லை. மேலும் விண் 10க்கு மாற்றிக் கொண்ட பின்னர், எத்தனை நாட்கள் கடந்துள்ளன என்றும் குறிப்பிடவில்லை. இதோ, உங்கள் கேள்விக்கான பதில்: நீங்கள் விண்டோஸ் 7 / 8/8.1 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 10க்கு மாறி, 30 நாட்களுக்குள் இருந்தால், சர்ச் கட்டத்தில் Go back to my previous operating system என டைப் செய்து, கிடைக்கும் விடைகளில், “Settings.” என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுடைய முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, அதுவே ஒவ்வொரு படியாக வழி நடத்தி, அழைத்துச் சென்றுவிடும். சிறிது நேரம் பிடிக்கும். ஆனால், விண் 10 பதிந்து, 30 நாட்கள் கடந்திருந்தால், நீங்கள் பழைய சிஸ்டத்தினை 'Clean Install' என்ற முறையில் பதிய வேண்டியதிருக்கும். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முக்கிய பைல்கள் அனைத்திற்கும் பேக் அப் எடுத்து வைக்க வேண்டும். பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான டிஸ்க் மற்றும் ப்ராடக்ட் கீ ஆகியவையும், பழைய சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மற்ற சாப்ட்வேர் புரோகிராமிற்கான டிஸ்க்குகளும் உங்களிடம் இருக்க வேண்டும்.

கேள்வி: பேஸ்புக் சமூக தளத்தில், இப்போதெல்லாம், ஒவ்வொரு நாளும், அதே நாளில் சென்ற சில ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட பதிவினைக் காட்டும் பழக்கம் உள்ளது.
சில வேளைகளில் இது எரிச்சலைத் தருகிறது. சில வேளைகளில், மிகவும் வருத்தமான பதிவு நினைவு படுத்தப்படுகிறது. இதனை நிறுத்தும்படி, அல்லது மறைக்கும்படி கேட்டுக் கொண்டும் ஒன்றும் நிகழவில்லை. வேறு செட்டிங்ஸ் வழியும் தெரியவில்லை. நீங்கள் தான் வழி காட்ட வேண்டும்.
ஆர். செளமியா லஷ்மி, சென்னை.
பதில்:
நம் பழைய நினைவுகளைக் கிளறித் தருவதனை பேஸ்புக் என்ன காரணத்திற்காக மேற்கொண்டு வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நமக்கு இது போன்ற பழைய நிகழ்வு அறிவிப்புகள் தரப்படுகின்றன. இதனை மொத்தமாக நிறுத்தவும் இயலவில்லை. ஆனால், குறைந்தது ஓராண்டுக்கு எனக்கு எதுவும் பழைய நிகழ்வுகளை நினைவு படுத்தும் பதிவுகள் வேண்டாம் என அமைக்க முடியும்.
இது போன்ற பழைய நிகழ்வுகளின் பதிவுகள் தரப்பட்டால், அதன் வலது மூலைக்குச் சென்று, அம்புக்குறி மீது கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Hide post” என்பதில் கிளிக் செய்திடலாம். உடனே பேஸ்புக் தான் வருத்தப்படுவதனைத் தெரிவிக்கும். அதன் பின்னர், உடனே, “On This Day Preferences”. என்ற பிரிவைப் பெற ஒரு லிங்க் தரப்படும்.
இங்கு தரப்படும் விருப்ப தேர்வுகளில், நீங்கள் யாருக்கெல்லாம் இந்த நிகழ்வு நினைவூட்டல் வேண்டாம் என விருப்பப் படுகிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கலாம். அல்லது, குறிப்பிட்ட இரு தேதிகளுக்கிடையே நடந்த நிகழ்வுகளைக் காட்ட வேண்டாம் என அமைக்கலாம். தேதிகளுக்கு அருகே இருக்கும் “edit” என்னும் லிங்க்கில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் “Select Dates” என்ற ஆப்ஷன் கிடைக்கும். தொடக்க நாள், முடிக்கும் நாள் என இரண்டையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் எதிர்கால தேதியையும் (எ.கா. 2003 முதல் 2017 வரை) தரலாம். தேர்ந்தெடுத்த பின்னர், “Done” என்பதைக் கிளிக் செய்திட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்ததனை நீக்க வேண்டும் எனில், அதன் அருகே தரப்பட்டிருக்கும் சிறிய “X” அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அனைத்தையும் முடித்த பின்னர், On This Day preferences பிரிவை விட்டு செல்ல, “Done” என்பதில் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.

கேள்வி: இந்தப் பிரச்னையை நான் சில வாரங்களாக எதிர் கொள்கிறேன். எக்ஸெல் ஒர்க் ஷீட் செல் ஒன்றில், பார்முலாவை அமைக்கையில், மவுஸின் ஸ்குரோல் வீல் செயல்பட மறுக்கிறது. வேறு வழியின்றி, ஸ்லைடிங் பாரினைப் பயன்படுத்தி வரிசைகளைத் தாண்டுகிறேன். மீண்டும் எக்ஸெல் புரோகிராமினை மூடித் திறந்து செயல்படுகையில், பார்முலா தவிர மற்ற நேரங்களில், மவுஸ் வீல் வேலை செய்கிறது. இதற்கான செட்டிங்ஸ் எங்குள்ளது?
என். தயானந்தன். தஞ்சாவூர்.
பதில்
: உங்கள் பிரச்னைக்கான அடிப்படை புரியவில்லை. இருப்பினும், எக்ஸெல் செயலியில், மவுஸ் வீல் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தும் செட்டிங்ஸ் அமைப்பினை செயல்படுத்துவது குறித்து கீழே தருகிறேன்.
1. Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். (எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, கீழாக வலது பக்கம் உள்ள Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010ல், ரிப்பனில் உள்ள பைல் டேப்பினை அழுத்தவும். பின் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் கிடைக்கும் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Editing Options என்ற பிரிவில், Zoom on Roll with Intellimouse என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, மவுஸ் ஸ்குரோல் வீல் தடைபடாது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - chennai,இந்தியா
23-ஜன-201610:49:05 IST Report Abuse
venkatesh what is major difference between imap and pop?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X