நரி மந்திரி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2016
00:00

புரிகை என்ற நாட்டிற்கு பவுரிகன் என்பவன் அரசனாக இருந்தான்.மிகவும் கொடுமைக்காரனாக இருந்ததால், மரணத்துக்குப் பின் மறுபிறவியில் நரியாகப் பிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தெய்வத்தின் அருளால் தன்னுடைய முற்பிறவியை அறிந்து கொண்டது நரி. சென்ற பிறவியில் தான் மன்னனாக இருந்தபோது செய்த தவறுகளை எண்ணி வருந்தியது.
இப்பிறவியில் மீண்டும் அத்தவறுகள் நேர்ந்திடா வண்ணம் நல்ல குணங்களையும், செயல்களையும் செய்து நற்கதி அடைய விரும்பியது.
அதனால் நரிவுரு வெடுத்து வந்திருந் தாலும் மாமிசம் உண்ணுவதை தவிர்த்தது. காய்கனி களைக் கூட மரங்களி லிருந்து தானாக உதிர்ந்து கீழே கிடப்பதை மட்டுமே உண்டு பசி யாறியது. அத்துடன் நரி கூட்டத்துடன் சேர்ந்து காட்டில் வாழாமல், தனியாக சுடுகாட்டில் வசிக்க ஆரம்பித்தது.
இப்படி நரிகளுக்குரிய எந்த குணமும் இல்லாமல் விரதமிருந்த அந்த நரியை, மற்ற நரிகளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. மாமிச மும் உண்ணாமல், பிற உயிர்களுக்கு கெடுதல் விளைவிக்காமலும் வாழும் அந்நரி மீது மற்ற நரிகளுக்கு பொறாமை ஏற்பட்டது.
இதனால் அந்நரியை எப்படியாவது தங்கள் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று பிற நரிகள் திட்டம் தீட்டின.
அதனிடம் சென்று, ''நீ மயானத்தில் வசிப்பதால் மட்டும் தூய்மையானவனாக வாழ்ந்துவிட முடியாது. மாமிசத்தை புசிப்பது என்பது நரிகளுக்குரிய இயற்கையான குணம். அதை மீறினால் உனக்கு புண்ணிய பலன் கிட்டுமா? ஆகையால் இப்படி தனித்து வாழ்வதை விடுத்து, எங்களோடு காட்டிற்கு வந்து எங்களைப் போலவே வாழப் பழகு. அதுதான் உனக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது!'' என்றன.
''நான் மயானத்தில் வாழ்ந்தாலும் என்னுடைய புத்தி எந்த நிலையில் இருக்கிறது என்பதைத்தான் முக்கியமாகக் கருதுகிறேன். நான் மாமிசம் உண்பது இல்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரிந்தால் போதும். இடத்தைக் கொண்டு தர்மமும், அதர்மமும் நிர்ணயிக்கப்படுவதில்லை.
''ஒரு ஆசிரமத்தில் கொலை நடந்து விட்டால் ஆசிரமம் என்ற ஒரே காரணத்துக் காக கொலை, கொலை இல்லை என்றாகி விடாது. அதே போல், ஆசிரமம் இல்லாத ஓரிடத்தில் நிகழும் நல்ல செயல், கெட்ட செயலாகி விடாது.
''மனிதனுடைய குணத்தை நிர்ணயிக்க பிறப்பு முக்கியமல்ல. நல்ல குணத்தினால் தான் குலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், உங்களைப் போல் வயிற்றை மட்டுமே நிரப்புவதுதான் குறிக்கோள் என்று என்னால் வாழ முடியவில்லை. நான் நற்கதியை நாடவே விரும்பு கிறேன். ஆகை யால், என்னை உங்களோடு சேர வற்புறுத்தாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்,'' என்றது நரி.
சிறிது காலம் சென்றது_
நரியின் நற்குணங்களை கேள்விப்பட்ட அக்காட்டிற்கு அரசனாக விளங்கிய புலி ஒன்று அந்த நல்ல நரியை தன்னுடைய அமைச்சராக்கத் தீர்மானித்தது. நல்லவர்கள் அமைச்சரானால் தன்னுடைய ஆட்சியும் செம்மையாக இருக்கும் என்று விரும்பியது புலி.
அதனால் அந்நரியிடம் போய் ஒரு வேண்டுகோளை வைத்தது.
''உன்னுடைய நற்குணங்களை அறிந்து உன்னை நாடி வந்திருக்கிறேன். நானோ கோபக்காரன்; உன்னைப் போன்ற கருணை, தூய்மை, நேர்மை, அன்பு உள்ளம் கொண்டவர்கள் எனக்கு அமைச்சராக இருந் தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எனவே, என் வேண்டுகோளை நீ மறுக்காமல் ஏற்க வேண்டும்,'' என்ற கோரிக்கையை வைத்தது புலி.
சரியான அமைச்சர்கள் இல்லாத அரசனால் தூய்மையான ஒழுங்கான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அதே போல், நல்ல குணமில்லாத ஒரு தீயவன் அமைச்சராக இருந்தாலும், அவ்வாட்சியை அரசனால் சிறப்பாக நடத்த முடியாது.
''நீ என்னை அமைச்சராக்க விரும்பியதே நல்லாட்சி நடத்த வேண்டும் என்ற உன்னுடைய விருப்பத்தினை எடுத்துக் காட்டுகிறது.
''ஆனால், நான் சுகபோகங்களில் நாட்ட மில்லாதவன். உன்னுடைய செல்வத்தைக் கண்டும், பதவியைக் கண்டும் எனக்கு மயக்கமோ, ஆசையோ ஏற்படவில்லை. அதுமில்லாமல் எனக்கும் உன்னுடன் ஏற்கனவே பணிபுரியும் மற்றவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இதனால், மனவேறுபாடு உண்டாகும். என் மீது கோபம் கொண்டு உன்னிடத்தில் பலவிதமான புகார்களை தெரிவிப்பர். நான் என் விருப்பம் போல் மயானத்தில் சுற்றித் திரிந்து வாழ்பவன். நான் பிறருக்கு பணிவிடை செய்யும் அனுபவத்தைப் பெறவில்லை. எனவே, அமைச்சராகும் தகுதி எனக்கில்லை. அத்துடன் நான் உதிர்ந்த கனிகளையும், ஓடும் நதி நீரையும் பருகி வாழ்பவன். இங்கு எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது. உன்னுடன் வந்தால் அதை நான் இழப்பேன்,'' என்றது.
இப்படி நரி எவ்வளவோ வற்புறுத்தி தன் நிலைமையை எடுத்துக் கூறியும், புலி விடுவதாக இல்லை. அதுவும் விடாமல் மறுபடியும் வற்புறுத்தியது. கடைசியில் நரி, புலியில் வற்புறுத்தலை ஏற்றது.
அத்துடன், ''அரசனே! நான் உன்னிடம் அமைச்சராக இருக்கும் வரை நீ என் மீதுள்ள நம்பிக்கையை ஒரு போதும் இழந்துவிடக் கூடாது. உன்னுடைய மற்ற மந்திரிகளின் சொல் கேட்டு என் மீது குற்றம் சுமத்துவதோ, வீணாக சந்தேகப்படுவதோ கூடாது. நான் உங்களிடம் சொல்ல நினைக்கும் ஆலோசனை களை தனிமையில்தான் கூறுவேன். பலர் முன்னிலையில் கூற மாட்டேன்.
''உங்கள் குடும்பத்தினர் விஷயத்தில் என்னிடம் கருத்து கேட்கக் கூடாது. அது நல்லதல்ல. நான் கூறும் சில ஆலோசனை களைக் கேட்டு மற்றவர்களை நீங்கள் துன்புறுத்தக் கூடாது. நான் கூறும் கருத்தின் உண்மையை ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.யாரையும் அழிக்க முற்படக் கூடாது. இதற்கு நீங்கள் சம்மதமெனில், நானும் உங்களிடம் அமைச்சராகப் பணி புரிகிறேன்,'' என்று நீண்ட பட்டியலை வாசித்தது நரி.
புலி எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரி வித்தது. அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது நரி.
நரி வருவதற்கு முன் பல மிருகங்களும், சில நரிகளும் தங்கள் விருப்பம் போல் திருட்டுத்தனம் செய்து வந்தன. அவைகள் புதிய நரியின் பொறுப்புணர்வு, நிர்வாகத் திறமையின் கீழ் தங்களுடைய மோசடி செயல்களைத் தொடர முடியாமல் தவித்தன.
தங்களைப் போலவே மன்னனை ஏமாற்றும் வழியை நரிக்கு எடுத்துக் கூறின. ஆனால், நரி அதைக் கேட்கவில்லை. மறுத்து விட்டது.
இந்த நரி ஒழிந்தால்தான் தங்களுக்கு நிம்மதி. இல்லையெனில், தங்கள் வேலை நடக்காது என்பதை உணர்ந்த மற்ற மோசடி விலங்குகள், அரசன் மனதில் நரியைப் பற்றி கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்துவது என்று தீர்மானித்தன.
அதன்படியே புலிக்காக பிரத்யேகமாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மாமிசத்தை எடுத்துப் போய் அமைச்சரான நரியின் வீட்டில் போட்டன.
மிருகங்களின் இந்த செயல் நரிக்கு புரிந்து விட்டது. அத்துடன் அதற்கு அமைச்சர் பதவி யும் ஏனோ பிடிக்காமல் போய் விட்டது. அதோடு அரசர் சொன்னபடி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா என்றுணர இந்த சம்பவத்தின் மூலம் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டது.
அதனால் மிருகங்கள் செய்த தவறை மன்னரான புலியிடம் போய் கூறாமலேயே இருந்து விட்டது நரி. உணவு வேளை வந்தது.
தனக்காக வைக்கப்பட்டிருந்த மாமிசங்கள் காணாமல் போய்விட்டன என்ற தகவல் அரசனுக்கு எட்டியது.
''என்னுடைய உணவையே எடுத்துப் போகும் தைரியம் யாருக்கு வந்தது?'' என்று கோபத்துடன் வினவியது புலி.
அதற்கு மற்ற விலங்குகள், ''புதிய அமைச்சர் நரிதான் அதை எடுத்துப் போனார்,'' என்று பதில் கூறின.
புலிக்கு பயங்கர கோபம் வந்தது. இருந் தாலும்... நரியா இப்படி செய்தது? என்ற சந்தேகம் எழுந்தது.
உடனே மற்ற விலங்குகள், ''நீங்கள்தான் அந்த நரி மாமிசம் சாப்பிடுவதில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அது ஒரு கபட வேடதாரி. மற்றவர்களிடம் நல்ல பேர் வாங்க அது அப்படி நடிக்கிறது. இதை நாங்கள் முன்பே உங்களிடம் கூறி இருக்க வேண்டும். அப்படிக் கூறியிருந்தால் நீங்களும் அதை அமைச்சராக நியமித் திருக்க மாட்டீர்கள்...'' என்று தூபம் போட்டு புலியின் கோபத்தை மேலும் தூண்டி விட்டன.
அத்துடன், ''நாங்கள் கூறுவது உண்மையா? பொய்யா? என்பதை நீங்களே அதன் வீட்டருகே சென்று சோதனை செய்து பாருங்கள்,'' என்றன.
புலிக்கு கோபம் வந்தது. உடனே எல்லாரையும் அனுப்பி நரியின் வீட்டருகே மாமிசங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து வரச் சொன்னது. அவ்விலங்குகள் நரியின் வீட்டருகே தாங்கள் கொண்டு போய் போட்ட மாமிசத்தைக் திரும்ப எடுத்து வந்து புலியிடம் காட்டின.
புலிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் வந்தது. நின்று நிதானிக்கவோ, யோசித்து முடிவெடுக்கவோ அது முயற்சி செய்யவே இல்லை. தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து நரியைக் கொன்று விட தீர்மானித்தது. ஆனால், புலியின் அம்மாவிற்கு மட்டும் தன் மகன் தவறு செய்கிறான் என்பது புரிந்தது. இதனால் தன் மகனை அழைத்து அறிவுரைகளைக் கூறியது.
''மகனே! நன்றாக யோசித்துப் பார். நீயாக வற்புறுத்திக் கொடுத்தும் பல பரிசுப் பொருட்களை நரி வேண்டாம் என்று மறுத்து விட்டது.
''உனக்கு தெரியாமலேயே எந்தவித தவறுமே செய்யாமல் அந்நரி அமைச்சர் என்ற முறையில் எல்லா வசதிகளையும், பொருட்களையும் பெற முடியும். அப்படி இருக்க, உன்னிடம் கெட்டப் பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து நீ உண்பதற்காக வைத்திருக்கும் மாமிசத்தை அது திருட்டுத் தனமாக எடுத்துப் போய் இருந்தால் நீ கண்டு பிடித்து விடுவாய் என்று அதற்குத் தெரியாதா? உன்னிடம் கெட்டப் பெயர் வாங்க வேண்டும் என்று அது விரும்புமா?'' என்று பல கேள்விகள் மூலம் தன் மகனை சிந்திக்க வைத்த தாய்ப்புலி, மேலும் அரசனான தன் மகனுக்கு அறிவுரை கூறத் தொடங்கியது.
''பணி செய்யும் இடத்தில் பொறாமைக் கொண்ட தீயவர்கள், நல்லவர்கள் மீது குற்றம் சுமத்துவர். தங்களை விட உயர்ந்து விடக் கூடாது என்று அதற்கான காரியங்களில் இறங்குவர்.
''சில சமயம் ஆகாயத்தை பார்த்தால் மேகங்கள் ஒரு உருவத்தை, வடிவத்தைப் போல் தோற்றம் அளிக்கும். ஆனால், உண்மையில் அது மேகத் தின் வடிவம் அல்ல. அது வெறும் தோற்றமே. மின்மினிப்பூச்சிகளைப் பார்த்தால் ஒரு நெருப்பு பொறி பறப்பது போல் தோன்றும். ஆனால், அது நெருப்பல்ல. இப்படி நம் கண்ணுக்குத் தெரியும் உண்மைகள் வேறாக இருக்கும். ஆகையால் நீ அவசரப்பட்டு முடி வெடுத்து அந்த நரியைக் கொன்று விடாதே. ஆராய்ந்து முடிவெடு. பொறுப்புடனும், பொறுமையுடனும் நடந்து கொள்,'' என்றது.
அதே நேரத்தில், பொறாமை கொண்ட விலங்குகள் மாமிசத்தை நரி வீட்டில் கொண்டு போய் போட்ட விவரத்தை, அக்கூட்டத்தி லிருந்த நரி ஒன்று தாய்ப்புலியிடம் போட்டு உடைத்தது.
உண்மையை உணர்ந்த அரசன், நரியிடம் போய் மன்னிப்புக்கோரினான். ஆனால், நரியோ தன்னைத் தவறாக நினைத்த காரணத்துக்காக உயிரை விடத் தீர்மானித்தது. அரசன் கண்ணீர் விட்டு அழுது மன்னிப்புக் கேட்டும் நரி அந்த வேண்டுதலை நிராகரித்தது.
''சிலருக்கு திடீரென்று பதவியைக் கொடுப்ப தும், பின் பறிப்பதுமாக இருந்தால் அரசனுக்கு அறிவு குறைவு என்றுதான் அர்த்தம். நீங்கள் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். இதை மாற்றிக் கொள்ளுங்கள்.
''தீயவர் யார்? நல்லவர் யார்? நல்லவர்போல் வேடம் போடுபவர் யார்? என்பதை நன்றாக சோதித்து ஒரு அரசன் முடிவு எடுக்க வேண்டும். மற்றவர் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பி நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அது உங்களுக்கும், அரசுக்கும் கெட்ட பெயரையே கொடுக்கும்,'' என்று அறிவுரை கூறிய நரி, புலி அரசன் எவ்வளவோ மன்றாடி, கெஞ்சிக் கேட்டும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் தன்னைத் தவறாக நினைத்த அரசனின் செயலுக்காக வருந்தி உயிரை விட்டது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X