உங்கள் கம்ப்யூட்டரில் அதி நவீன சிப் ப்ராசசர்களைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால், கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 ஆகக் கட்டாயம் இடம் பெற வேண்டும். பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை, பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குமாறு அமைத்துள்ளன. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு ஏற்றபடி இவற்றைப் பெரும் பொருட் செலவில், மாற்ற முன்வருவதில்லை. எனவே, பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை, நவீனப் படுத்துகின்றனர். புதிய கட்டமைப்பில் கிடைக்கும் ப்ராசசர்களை அமைக்கப்பட்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இனிமேல், இந்த முயற்சி ஈடேறாது என மைக்ரோசாப்ட் வரையறை செய்துள்ளது. நவீன சிப் செட்களில், விண்டோஸ் 10 மட்டுமே இயங்க முடியும் என அறிவித்துள்ளது. இண்டெல், ஏ.எம்.டி. மற்றும் குவால்காம் நிறுவனங்கள் தயாரிக்கும் ”ஸ்கைலேக்” (Skylake) ப்ராசசர்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இண்டெல் நிறுவனத்தின் ஸ்கைலேக், ஏ.எம்.டி. நிறுவனத்தின் பிரிஸ்டல் ரிட்ஜ் (Bristol Ridge) குவால்காம் நிறுவனத்தின் 8996 சிப்கள், விண்டோஸ் 10 சிஸ்டங்கள் மட்டுமே இயங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வெளிவந்துள்ளன. சிப் தயாரிக்கும் இந்த நிறுவனங்களும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களுக்கு சப்போர்ட் வழங்குவதனை நிறுத்திவிட்டன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து சப்போர்ட் பெறும், விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கூட, இந்த புதிய ப்ராசசர்களில் இயங்காது என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.