விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் மக்களுக்கு வெளியிட்டு, சென்ற வாரம், ஆறு மாத காலம் கடந்துவிட்டது. சென்ற ஜூலை 2015ல், இது வெளியானது. பலத்த ஆரவார விளம்பரங்களுடன் இது மக்களுக்குத் தரப்பட்டது. மக்களுக்கு அதிகமாக தயக்கங்கள் தொடக்கத்தில் இருந்தன. இருப்பினும் சிறிது சிறிதாக முன்னேறி, இந்த சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. இந்த இயக்க முறைமை, 20 கோடிக்கும் மேலான சாதனங்களில் இயங்குவதாக சென்ற ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. StatCounter என்னும் அமைப்பு வெளியிட்ட அறிவிக்கையின்படி, சென்ற ஜனவரியில், விண்டோஸ் 10 சிஸ்டம், உலக அளவில் இயங்கும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், 13.57% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில், விண்டோஸ் 7க்கு அடுத்தபடியாக, அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது உள்ளது. விண்டோஸ் 8.1 பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையை இது பின்னுக்குத் தள்ளிவிட்டது. விண் 8.1, தற்போது 11.66% கம்ப்யூட்டர்களில் உள்ளது. மேக் ஓ.எஸ்.எக்ஸ், என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தற்போது 9.03% கம்ப்யூட்டர்களில் மட்டுமே உள்ளது.
விண்டோஸ் 7 தற்போது 40.63% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10க்குக் கொடுக்கும் அழுத்தத்தினால், விண் 7 சிஸ்டத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. விண் 10 வெளியாகி, நான்கு மாதங்கள் கழித்து, நவம்பரில் முதல் அப்டேட் பைல் வெளியிடப்பட்டது. இதில் பல இயக்கச் செயல்முறைகள் சரி செய்யப்பட்டன. குறிப்பாக, அப்டேட் செய்வதனைப் பயனாளர் வசமே விட்டு விடும் வகையில் திருத்தங்கள் தரப்பட்டன.
எவை எப்படி இருந்தாலும், பயனாளர்கள் இதில் கண்டு அனுபவித்துவரும் உணர்வே மிக முக்கியம். அதனைப் பொறுத்த வரை, விண் 10 பல புதிய பிரிவுகளில், வாடிக்கையாளர்களின் மனதை நிறைவு செய்துள்ளது என்றே கூற வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.
பயனர் அனுபவம்: விண் 10க்கு முன் வந்த விண் 8 சிஸ்டத்துடன் பயனாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினைக் காட்டிலும், விண்டோஸ் 10 நல்ல சிறப்பான அனுபவத்தினையே தந்து வருகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தொடு திரை உணர் அனுபவத்தினை விண்டோஸ் 8 கொண்டு வந்தது, பலரை கம்ப்யூட்டர் பயிற்சி மாணவர்களாக மாற்றியது. விண்டோஸ் 10ல், ஸ்டார்ட் மெனு முழுமையாக மீண்டும் தரப்பட்டது, ஒரு முக்கியமான அனுபவமாகப் பயனாளர்கள் உணர்ந்தனர். விண் 10 பயன்படுத்துவதில், விண் 8ல் காணாத ஒரு மென்மையினை மக்கள் உணர்ந்தனர். இப்போதும் கூட, விண்டோஸ் 7 லிருந்து, விண்டோஸ் 10க்கு மாறியவர்களுக்குச் சிறிய அளவில் பயிற்சி தேவைப்படுகிறது. ஆனால், இந்த அனுபவம், எந்த ஒரு சிஸ்டம் மாற்றத்திலும் பயனாளர்கள் மேற்கொள்ள வேண்டிய அனுபவமாகவே உள்ளது. இருப்பினும், விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், எப்படியும் தாம் விண்டோஸ் 10க்கு இன்னும் ஆறு மாதத்தில் மாறிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து இப்போதே மாறிக் கொண்டுள்ளனர். விண்டோஸ் எக்ஸ்பியுடன் இறுதி வரையும், அதற்குப் பின்னரும் தொடர்ந்து இருந்து, அனுபவித்ததைப் போல இருக்க வேண்டாம் என உணர்ந்துள்ளனர்.
விண்டோஸ் 10 சிஸ்டம் தரும் அப்டேட் செயல்பாட்டினை, பெரும்பாலான பயனாளர்கள் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். எந்த அப்டேட் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற உரிமையைப் பயனாளர்களிடமே விட்டுவிட வேண்டும் எனப் பயனாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு மாதத்தில், தேவைப்பட்டால், பன்னிரண்டுக்கும் மேலான நாட்களில் அப்டேட்கள் வழங்கப்படும் சாத்தியம் இருப்பதால், பயனாளர்கள் பக்கம், இதற்கான விருப்பத்தினை வழங்குவது சிஸ்டம் இயக்கத்திற்கு உகந்தது அல்ல என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. ஆனால், பயனாளர்களிடம் அதற்கான சுதந்திரம் வழங்கப்படும்போது, பலர், மொத்தமாக எந்த அப்டேட் பைல்களும் வேண்டாம் என்ற முடிவை எடுக்கின்றனர். இது எதிர்கால கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு நல்லதல்ல என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது. முதலில் சற்று சிக்கலாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் அப்டேட் பைல்களைத் தாமாக, கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ள விடுவதே நல்லது என்று வலியுறுத்தி வருகிறது.
பாதுகாப்பும் தனி நபர் சுதந்திரமும்: ஒரு சில பயனாளர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இன்னும் பாதுகாப்பிற்கான அப்டேட் பைல்கள் தரப்படுவதனைச் சுட்டி காட்டி, விண்டோஸ் 10 சிஸ்டம் எப்படி அதிகப் பாதுகாப்புள்ளதாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்த ஒப்பீடு சரியல்ல.
மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தின் செயல் கட்டமைப்பிற்கென, மிக அதிக அளவில் முதலீடு செய்து, அதன் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் இணைந்து தரப்பட்டுள்ள hypervisor பல பாதுகாப்பு வழிகளை அமைத்து, ஹேக்கர்களை நெருங்க விடாமல் செய்கிறது. அதே போல, இதில் தரப்பட்டுள்ள Secure Boot மற்றும் device encryption ஆகிய பாதுகாப்பு முறைமைகள், இந்த சிஸ்டத்தின் இயக்கத்திற்குக் கூடுதல் பாதுகாப்பினை வழங்குகின்றன. இதில் தரப்படும் UEFI firmware மற்றும் Trusted Platform Module ஆகிய பாதுகாப்பு கவசங்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தால் அறியப்படாதவை ஆகும். சொல்லப் போனால், விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொண்ட பின்னால், மீண்டும் விண்டோஸ் 7க்கு மாறிக் கொண்டால், அது பாதுகாப்பற்ற தன்மையையே கம்ப்யூட்டருக்குத் தரும். புதியதாக வந்துள்ள வைரஸ்களை எதிர்த்து இயங்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.
மேலும், இந்த நேரத்தில், விண்டோஸ் 10ல் உள்ள Windows Hello பாதுகாப்பு வழியினை இங்கு கூறியாக வேண்டும். இது இரண்டடுக்கு பாதுகாப்பினை (two-factor authentication) விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு தருகிறது.
இதே போல, தனிநபர் சுதந்திரத்தில், விண்டோஸ் 10 தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டும், அவசரத்தில் எழுப்பப்பட்டதேயாகும்.
சிக்கலை ஆய்வு செய்து தீர்த்தல் (Troubleshooting): பல லட்சக்கணக்கான ஹார்ட்வேர் அமைப்புகளில் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்குகையில், பல வகையான பிரச்னைகள் சிஸ்டத்தில் ஏற்படும். இவை அனைத்தையும் தீர்க்கும் வகையில் ஆய்வினை மேற்கொண்டு தீர்வுகள் காண்பது அரிதான செயலாகும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது பெரிய பிரச்னையாக இருந்தது. ஒவ்வொரு பிரச்னைக்கும், சிஸ்டம் அமைப்பு தெரிந்த ஒருவரின் உதவி தேவைப்பட்டது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சிஸ்டம் ரீசெட் ஆப்ஷன் சற்று எளிமையான ஒன்றாக வழங்கப்பட்டது. சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு, அது முடங்கிப்போகும்போது, தானாகவே சிஸ்டம் ரீசெட் செய்யப்படும் வழிகள் தரப்பட்டுள்ளன. அதனையும் நம் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொண்டன. விண்டோஸ் 10ல், இது ஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் செயலாக மாற்றப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயக்கத்தில், மிகச் சிறந்த வசதியாக இதனைப் பல கம்ப்யூட்டர் வல்லுநர்கள் புகழ்ந்துள்ளனர்.
கார்டனா: முதலில், விண்டோஸ் 10 அறிமுகமாகும்போது, கார்டனா குறித்து விரிவாகக் கூறப்பட்டது. பலரும் இது ஒரு விளம்பர சர்க்கஸ் வேலை என்றுதான் எண்ணினார்கள். ஆனால், அதனைப் பயன்படுத்திப் பார்த்த போது, சின்னஞ் சிறு வேலைகளுக்குக் கூட, எடுத்துக்காட்டாக, கணக்கிடுதல் வேலைகளுக்குக் கூட, இது பயன்படுவது மிகவும் விந்தையாகவும், வசதியாகவும் உள்ளதைப் பலர் புரிந்து கொண்டனர்.
செயலிகள் (Applications): விண்டோஸ் 8க்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை எண்ணுகையில் இன்னும் சற்று கலக்கமாகத்தான் உள்ளது. எளிமையானவையாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப அவற்றை வளைக்கமுடியவில்லை என்பதால், பல அப்ளிகேஷன்களை யாரும் சீண்டவில்லை. ஆனால், இது விண்டோஸ் 10ல் முழுமையான மாற்றத்தைப் பெற்றது. இயக்கத்துடன் இணைத்துத் தரப்பட்ட அப்ளிகேஷன்கள் அனைத்தும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மிகச் சிறப்பாகவும், நம் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையிலும் உள்ளன. எடுத்துக் காட்டாகச் சொல்வதென்றால், Mail அப்ளிகேஷனைச் சொல்லலாம். இது மைக்ரோசாப்ட் சர்வருடன் மட்டுமின்றி, ஜிமெயில் சர்வருடனும் இணைந்து செயல்படுகிறது. அதே போல ஒரு செயல்பாட்டினை Music அப்ளிகேஷன் இயக்கத்திலும் பார்க்கலாம்.
எட்ஜ் பிரவுசர்: விண்டோஸ் ஒரு சேவையாக ("Windows as a Service") என்பதன் முழுமையான எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 10 உடன் வரும் எட்ஜ் பிரவுசர் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தந்த தலைவலிகள் எல்லாம் இதில் அறவே இல்லை. ஆனால், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்கான சப்போர்ட் இல்லை என்பது, பிரவுசர் ஒன்றை மிகத் திறமையாகக் கையாளத் திட்டமிடுபவர்களுக்குப் பிடிக்கவில்லை. குரோம் இந்த வகையில் வளைந்து கொடுத்து வருகிறது. அதனால் தான், பாஸ்வேர்ட் மேனேஜர், விளம்பரங்களைத் தடுப்பவை எனப்பல எக்ஸ்டன்ஷன்களை இணைத்து விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்த வசதி எட்ஜ் பிரவுசரில் இல்லை என்பது ஒரு குறையே.
காலப் போக்கில், குறைகள் அனைத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், களையப்படும் என்றே கொள்ளலாம். விண்டோஸ் இயக்கம் பயன்படுத்துபவர்களுக்கு, இதுவரை விண்டோஸ் 10 ஓர் இனிமையான, எளிமையான மற்றும் விரைவான செயல் ஆக்கத்தினையே தந்து வருகிறது என்று நிச்சயமாக உறுதியாகக் கூறலாம்.