மொபைல் போனில் எடுக்கும் போட்டோக்களைப் பாதுகாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் பயன் தரும் 'கூகுள் போட்டோஸ்' குறித்த கட்டுரை மிக விரிவாகவும், தெளிவாகவும் இருந்தது. நம் போட்டோக்களைக் கொண்டு, கூகுள் போட்டோஸ் முக மாடல்களை அமைக்கும் அம்சம் மிகவும் வியப்புக்குரியது. அனைத்து தகவல்களையும் இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
என். சிவப்பிரகாசம், திருச்சி.
எடுக்கின்ற போட்டோக்களை என்னதான் எஸ்.டி. கார்ட் வைத்திருந்தாலும், க்ளவ்ட் பேக் அப்பில் வைத்துக் கொண்டு, அவற்றை நிர்வகிப்பது சிரமம் இல்லாமல் உள்ளது. இந்த செயல்பாட்டினை மிகவும் விளக்கமாகத் தெரியத்தந்தது உங்கள் கட்டுரை “ கூகுள் போட்டோஸ்”. எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுகளும் நன்றியும்.
பேரா. மா. ஹரிதாஸ், மதுரை.
கம்ப்யூட்டரைக் காட்டிலும், மொபைல் போனில் பயன்படுத்தப்படும் செயலிகள் தமிழில் இடைமுகத்துடன் செயல்படத் தொடங்கினால், நம் நிறுவனங்களும், தமிழில் தங்கள் வர்த்தக இணைய தளங்களை அமைப்பார்கள். இது கிராமப் புறங்களில் தற்போது ஸ்மார்ட் போனுக்கு மாறி வரும் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும். வர்த்தகம் மட்டுமின்றி, வாழ்க்கை வசதிகளிலும் பெரும் மாற்றம் ஏற்படும்.
ஆ. பாண்டியராஜன், வேலூர்.
விண்டோஸ் 7க்குப் பின்னர், விண்டோஸ் 10க்குப் பதிலாக, ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர் வாங்குவது நல்ல யோசனை தான் என்றாலும், அதில் புதிய யூசர் இண்டர்பேஸ் பழகி, அப்ளிகேஷன்களை இயக்க, நமக்குச் சில காலம் ஆகலாம். எனவே, விண்டோஸ் இயக்கத்தில் தொடர்ந்த நிலையிலேயே, ஆப்பிள் கம்ப்யூட்டர் குறித்து அறிந்து கொண்டு, ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாம். அல்லது விண்டோஸ் 10 உள்ள கம்ப்யூட்டரிலேயே நம் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
டாக்டர் எஸ். செந்தில்வேல், கோவை.
நம் முன்னேற்றத்திற்கான வாழ்க்கை தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, கணிப்பொறி செயல்பாட்டினை விரைவு படுத்தும் வகைகளில், இண்டெல் நிறுவனம் தன் ப்ராசசர்களை வடிவமைத்து வருகிறது. எனவே, முன்னேற்றம் தேவை எனில், நாம் புதிய ப்ராசசர் கொண்ட கம்ப்யூட்டர்களுக்கு மாறிக் கொள்வதே சரி. ஸ்கைலேக் அந்த வகையில் ஒரு புதிய மைல்கல் ஆகும்.
என். ஸ்ரீபிரகாஷ், ஹோசூர்.
கம்ப்யூட்டர் மலர் கேள்வி~பதில் பகுதியில் வெளியாகும் சில கேள்விகளைப் பார்க்கையில், விண்டோஸ் 10க்கு மாறுவதற்கு விருப்பம் இருந்தாலும், இன்னும் பலரின் நெஞ்சில் தயக்கம் இருப்பது தெளிவாகிறது. எனக்கும் கூட இது உண்டு. எனவே, அனைத்து வகை சந்தேகங்களையும் பட்டியலிட்டு, தெளிவாக்கும் கட்டுரை ஒன்றினை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கே. கீர்த்திகா, பொள்ளாச்சி.
”பாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்” கட்டுரையைப் படித்த பின்னரே, நிச்சயம் பலர், தங்கள் போன் பாதிக்கப்பட்டது தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. தயவு செய்து, மொபைல் போன்களுக்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் தனிக் கட்டுரை வெளியிடவும்.
என்.கே.கலியமூர்த்தி, தஞ்சாவூர்.
இலவச வை பி சேவை, இரயில் நிலையங்களில் மட்டுமின்றி, பொதுமக்கள் கூடும் அனைத்து பொது இடங்களிலும் கிடைத்தால், மக்கள் வாழ்வில் புதிய பரிமாணம் ஏற்படும். இவற்றைப் பயன்படுத்தி நம் வாழ்வில் பல புதிய வசதிகளையும், பயன்களையும் பெறலாம். இதனைத் தொடங்கி வைத்திடும் கூகுள் நிறுவனத்திற்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
சா. உலகநாதன், திருப்பூர்.