கேள்வி-பதில்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் விண் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களைக் கட்டாயம் விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொள்ள வேண்டுமா? இது போன்ற அறிவிப்பு தரும் பாப் அப் செய்திகள் வருகின்றன. எனக்கு விண்டோஸ் 7 மிகவும் பிடித்துள்ளது. கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டுமா? என்பது குறித்து அறிவுரை கூறவும்.
ஜெ. உமா ராணி, கோவை.
பதில்:
சில மாதங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கம்ப்யூட்டர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்ற செய்தி தரப்படுகிறது. அது மட்டுமின்றி, தற்சமயம், விண் 10, 20 கோடிக்கும் மேலான கம்ப்யூட்டர்களில் இயங்குவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. உங்களுடைய விண் 7 கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் பகுதியில், “Get Windows 10” ஐகான் இருந்தால், அந்த கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 இயங்கும். ஜுலை 29 வரை, இலவசமாக விண் 10 சிஸ்டத்தினைப் பதிந்து கொள்ளலாம். உங்களுடைய அப்டேட் செட்டிங்ஸ் அமைப்பின் அடிப்படையில், ஒரு நாள் விண்டோஸ் 10 உங்களுடைய கம்ப்யூட்டரில் பதியப்படும் வாய்ப்புகள் உள்ளன. முன்பு நம் விருப்ப மேம்படுத்தலாக இது தெரிவிக்கப்பட்டது. தற்போது இது 'பரிந்துரைக்கப்படும் இயக்க முறைமையாக' அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10க்கு மாறினாலும், அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஒரு மாத கால அவகாசத்தில், மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
இருப்பினும், நீங்கள் விரும்பும் வகையில், விண்டோஸ் 10 தானாக கம்ப்யூட்டரில் பதியப்படாமல் இருக்க, உங்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் அமைப்பினை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கும் மைக்ரோசாப்ட் இணைய தளத்திலும், பிற இணைய தளங்களிலும் உதவிக் குறிப்புகள் கிடைக்கின்றன.

கேள்வி: என் அலுவலகக் கம்ப்யூட்டரில் எப்போது பிரிண்ட் எடுத்தாலும், அதன் இறுதிப் பக்கத்தில், டாகுமெண்ட்டை உருவாக்கியவரின் பெயர் மற்றும் டாகுமெண்ட்கள் குறித்த தேவையற்ற தகவல்களும் அச்சாகின்றன. இது ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தும்போதுதான் ஏற்படுகிறது. சிக்கல் எங்குள்ளது? என்று தெரியவில்லை. உதவிக் குறிப்பு தரவும்.
எஸ். ஆறுமுகசாமி, செங்கல்பட்டு.
பதில்:
வேர்டின் பொதுத் தன்மை இது. வேர்ட் எப்போதும் நம் டாகுமெண்ட்களுடன், சில கூடுதல் தகவல்களைத் தன்னிடத்தே சேர்த்து வைத்துக் கொள்கிறது. எத்தனை சொற்கள், யார் தயாரித்தது, என்று திருத்தப்பட்டது போன்ற தகவல்களைப் பதிந்து கொள்கிறது. நீங்கள் குறிப்பிடும் கம்ப்யூட்டரில் இயங்கும் வேர்ட் புரோகிராமில், இதனையும் அச்சடிக்கும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் தான், இவை அச்சாகின்றன. பொதுவாக இவை அச்சடிக்கப்பட மாட்டாது. கீழே காட்டியுள்ளபடி செட்டிங்ஸ் அமைப்பினை மாற்றவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, அதன் பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனில், பைல் டேப் தேர்ந்தெடுத்து, பின்னர், Options என்பதைக் கிளிக் செய்திடவும்.
2. தொடர்ந்து டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Display என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Print Document Properties என்ற செக்பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, எந்த டாகுமெண்ட் அச்சடித்தாலும், இறுதியாக, அந்த டாகுமெண்ட் குறித்த மேலதிகத் தகவல்களும் தனிப் பக்கமாக அச்சடிக்கப்படும். இது தேவை இல்லை எனக் கருதினால், இங்கு சுட்டிக் காட்டியபடி சென்று, குறிப்பிட்ட செக் பாக்ஸில், டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

கேள்வி: இணைய தளம் ஒன்றுக்கு ஷார்ட் கட் உருவாக்கி, பிரவுசரைக் கூடத் திறக்காமல் அதற்கு செல்ல இயலுமா? நான் ஒரு அலுவலகம் சென்ற போது, அங்குள்ள டிக்கட் வழங்கும் கம்ப்யூட்டரில் இதனைப் பார்த்தேன். அனைத்து கம்ப்யூட்டர்களிலும், இது போன்று அமைக்க முடியுமா?
எஸ். புவனா, திண்டுக்கல்.
பதில்
: இந்தக் கம்ப்யூட்டர் தான் என்றில்லாமல், கம்ப்யூட்டர் ஒன்றில் ஒரு வழி இயக்கப்படுகிறது என்றால், அதனை அனைத்து கம்ப்யூட்டர்களிலும் மேற்கொள்ளலாம். இணையதளத்திற்கு நேராகச் செல்ல, எளிதாக ஷார்ட் கட் கீ அமைக்கலாம். அந்த ஐகானில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட கம்ப்யூட்டரில், மாறா நிலையில் இயங்கும் பிரவுசர் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட இணையதளம் காட்டப்படும். பின்னர், மற்றவற்றையும், அதே பிரவுசர் மூலம் பார்க்கலாம். இதற்குக் கீழ்க்குறித்துள்ள முறையில் செயல்படவும்.
இந்த செயல்முறையினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் செயல்படுத்தலாம். இதனை மேற்கொள்கையில், உங்கள் பிரவுசர் விண்டோ மற்றும் டெஸ்க்டாப் தெரியும்படி அமைக்க வேண்டும்.
உங்களுடைய பிரவுசரின் முகவரி கட்டத்தில் முகவரியை அடுத்து ஒரு சிறிய ஐகான் தரப்பட்டிருக்கும். இது சில பிரவுசர்களில் வேறு இடத்தில் இருக்கலாம். குறிப்பிட்ட தளம் சென்ற பின்னர், அந்த ஐகானில் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டெஸ்க்டாப் திரையில் விட்டுவிடவும். உடனே, அதற்கான ஷார்ட்கட் ஐகான் உருவாக்கப்படும். அடுத்த முறை, இதில் டபுள் கிளிக் செய்தால், உங்களின் மாறா நிலையில் உள்ள பிரவுசர் திறக்கப்பட்டு, இந்த இணைய தளம் கிடைக்கும்.

கேள்வி: பேஸ்புக் தளத்தில், நான் அப்லோட் செய்த மற்றும் நண்பர்கள் பதிவிட்ட வீடியோ பட பைல்களை எப்படி என் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடலாம்? பல வேளைகளில், இணைய தளங்களில் இருந்து படங்களை, அதற்கான வழிகள் அவற்றைத் தந்தவர்கள் கொடுத்திருந்தால், அப்படியே அப்லோட் செய்கிறேன். இவற்றை எல்லாம், என் கம்ப்யூட்டரின் போல்டருக்குள் கொண்டு வர என்ன செய்திட வேண்டும்?
என். சீதாராமன், பள்ளத்தூர்.
பதில்
: நாம் அதிகம் விரும்பும் பேஸ்புக்கில் பதிவாகியுள்ள வீடியோக்களைத் தரவிறக்கம் செய்திட முடியவில்லை என்பது நம்மை வருத்தமடையச் செய்திடும் நிகழ்வு தான். கீழே தந்துள்ள வழிகளில் முயற்சி செய்திடவும். நீங்கள் முன்பு அப்லோட் செய்து பதிவு செய்த வீடியோ எனில், முகநூல் தளத்தில், உங்கள் பக்கத்திற்குச் செல்லவும் அங்கு Photos / Albums என்ற பகுதியில் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் அப்லோட் செய்த விடியோ இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன், வீடியோவின் கீழாக உள்ள Options என்னும் லிங்க்கினை கிளிக் செய்திடவும். இங்கு Download HD மற்றும் Download SD என்ற இரு ஆப்ஷன்ஸ் தரப்படும். உங்கள் விடியோவின் தரம் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்கிறீர்களோ, அதற்கேற்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அந்த விடியோ எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டு, நீங்கள் போல்டரைத் தேர்ந்தெடுத்தவுடன், அதில் சேவ் செய்யப்படும்.
நீங்கள் அப்லோட் செய்த விடியோ பைல்களைத் தரவிறக்கம் செய்வது போல, உங்கள் நண்பர்கள் பதிவு செய்த விடியோக்களை தரவிறக்கம் செய்திட முடியாது. இருப்பினும், வேறு எந்த புரோகிராமின் துணை இல்லாமல், தரவிறக்கம் செய்திட ஒரு வழி உள்ளது. பேஸ்புக் திறந்து, நீங்கள் தரவிறக்கம் செய்திட விரும்பும் விடியோவினைக் காணவும். இதனை இயக்கவும். இப்போது பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் அதற்கான இணையதளப் பக்க முகவரி கிடைக்கும். இந்த முகவரியைக் கீழ்க்கண்டபடி மாற்றவும். "www" என்று இருப்பதை, "m" என மாற்றவும். முகவரியின் தொடக்கம், https://m.facebook.com/...... என்பது போல மாற்றம் அடையும். இந்த மாற்றம் ஏற்பட்டவுடன், எண்டர் பட்டன் அழுத்தினால், இந்தப் பக்கத்தில் மொபைல் பதிப்பிற்கான பக்கம் காட்டப்படும்.
மொபைல் பதிப்பிற்கான பக்கம் திறக்கப்பட்டவுடன், விடியோவினை இயக்கவும். இயக்கபடுகையில், அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் ஆப்ஷன் மெனுவில் Save video அல்லது Save target அல்லது Save link என்று கிடைக்கும். இதில் கிளிக் செய்து, பின்னர் சேவ் செய்திட வேண்டிய போல்டரைத் தேர்ந்தெடுத்தால், விடியோ சேவ் ஆகும்.

கேள்வி: நான் என் டாகுமெண்ட்களில் படங்களை அடிக்கடி பயன்படுத்துகிறேன். இவற்றை பேஸ்ட் செய்கையில், தனியாக இடம் எடுத்துக் கொள்கிறது. இவற்றை டெக்ஸ்ட்டின் பின்புலமாகப் பின்னணியில் இடம் பெற என்ன செய்திட வேண்டும்?
எஸ். சிக்கந்தர், புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. பலர் இந்த படங்களை எப்படி டாகுமெண்ட்டில் தாங்கள் விரும்பியபடி இணைப்பது என அறியாமல், படங்கள் ஒட்டும் ஆசையையே விட்டுவிடுகின்றனர். இங்கு சற்று விரிவாகக் காண்போம். இது நீங்கள் எந்த வகை இமேஜஸ் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் வேர்ட் தரும் Insert டேப்பில் உள்ள Shapes டூல் பயன்படுத்தி, இமேஜ் ஒன்றைத் தயார் செய்து, அதனை டாகுமெண்ட்டில் இணைக்க விரும்பினால், கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. குறிப்பிட்ட இமேஜ் (Shape) ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Format டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை பட்உறுதி செய்து கொள்ளவும்.
3. Arrange குரூப்பில், Send to Back டூல் அடுத்து உள்ள கீழ் விரி மெனுவில் கிளிக் செய்திடவும். இங்கு வேர்ட் பல ஆப்ஷன்களைக் காட்டும்.
4. இங்கு கிடைக்கும் துணை மெனுவில், Send Behind Text என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். உங்கள் இமேஜ் டெக்ஸ்ட்டுக்குப் பின்னால் இடம் பெறும்.
நீங்கள் வேறு வகை இமேஜ், எடுத்துக் காட்டாக, ஒரு கிராபிக்ஸ் பைல், அதற்கான வழிகள் வேறு வகையானவை.
1. குறிப்பிட்ட இமேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், Format டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
3. Arrange குரூப்பில், Text Wrapping டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட், எப்படி இமேஜை சுழற்றி வைத்திடலாம் என்பதற்கு பல ஆப்ஷன்கள் தரும். இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அதன் படி, இமேஜ் அமைக்கப்படும். இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எனில் Behind Text என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7. இதில், வேர்டில் டாகுமெண்ட் எடிட் செய்கையில், முழுத் திரையும் நம் பயன்பாட்டிற்கு, மெனு போன்றவை இல்லாமல் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
ஆர். வேணி மலர், திருப்பூர்.
பதில்:
வேர்ட் புரோகிராம் இதற்கு இரு வழிகளைக் கொண்டுள்ளது. மெனுவில் View கிளிக் செய்து, பின்னர் Document views என்பதில், Full Screen Reading என்பதில் கிளிக் செய்திட, முழு திரை கிடைக்கும். இதிலிருந்து வெளியேற எஸ்கேப் கீ அழுத்தினால் போதும். அல்லது முழுத்திரையின் வலது மேல் பக்கம் உள்ள Close என்பதில் கிளிக் செய்தால் போதும்.
கீ போர்ட் ஷார்ட் கட் வழி ஒன்று உண்டு. முதலில் Alt+V அழுத்தி, பின்னர் U அழுத்தவும்.
நீங்களாகவும், உங்களுக்கு வசதியான ஷார்ட் கட் கீ தொகுப்பினையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X