பரபரப்பாக இருக்கும் சர்க்கரை நோய் சிறப்பு மையம் அது. தங்களது, இரண்டு மாத பச்சிளங் குழந்தையுடன் காத்திருந்தனர், லதா - ஆனந்த முகர்ஜி தம்பதி. சொந்த மாநிலம் வங்கதேசம். பிறந்து சில வாரங்களிலேயே குழந்தைக்கு, சர்க்கரை நோய் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். பச்சிளங் குழந்தைக்கு, தினமும் இன்சுலின் ஊசி போட்டே ஆக வேண்டிய நிலை. 'சென்னையில், நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் நிறைய உள்ளன. அங்கு சென்றால் ஏதாவது தீர்வு கிடைக்கும்' என்று, உறவினர்கள் சொல்ல, இங்கு
குழந்தையை எடுத்து வந்திருந்தனர்.இந்த ஒரு குழந்தை இல்லை; இந்த மையத்தில், தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை பெறுகின்றனர்.இவர்களுக்கு இன்சுலின் ஊசி போடுவதற்கு பதிலாக மரபணு பரிசோதனை செய்து,
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருந்தை வாய் வழியாகத் தருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பிரச்னை வருவதற்கான காரணம், ஒரு குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாற்றம். மரபணு பரிசோதனை செய்து, இதை உறுதி செய்துவிட்டால், வாய் வழியாகவே மருந்து கொடுக்கலாம். இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், குழந்தைக்கு வந்திருப்பது, 'டைப் - 1' சர்க்கரை நோய் என்று தவறாக நினைத்து, பெரும்பாலான நேரங்களில் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்தும், வாழ்நாள் முழுவதும் தேவை தான். ஆனாலும், தினமும் இருவேளை சமயங்களில் நான்கு முறைகூட இன்சுலின் ஊசி குத்துவதில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. இதுபோன்ற ஒரு சிகிச்சை முறை இருப்பதே, பெரும்பாலான மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்களுக்கே தெரியவில்லை என்பது தான், இதில் வருத்தமான விஷயம்.
மெட்ராஸ் டயாபடீக் ரிசர்ச் பவுண்டேஷன்,
044 - 4396 8888