கருவில் உள்ள குழந்தை முதல், எந்த வயதினோ ரையும் மனப் பிரச்னைகள் பாதிக்கலாம் என்பதால், ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும், அதை எப்படி கையாள வேண்டும் என்ற ஆலோசனை தருகிறார், மனநல சிறப்பு மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், பிறந்தது முதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மனப் பிரச்னைகளைப் பார்க்கலாம். பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல, கருவில் உள்ள குழந்தைக்கும், மன அழுத்தம் வரும். '5 வயது குழந்தைகளுக்கு அப்படி என்ன பிரச்னை இருக்கப் போகிறது, ஸ்ட்ரெஸ் ஆவதற்கு?' என்று கேட்கலாம். பிரச்னைகள் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில்லை.
குழந்தை கருவில் இருக்கும்போது, அம்மாவின் மனநிலை எதிர்மறையாக இருந்தால், அந்த உணர்வுகள் குழந்தையை பாதிக்கும். அதனால் தான் குழந்தை பிறந்தவுடன் வெளிக் காரணிகளுடன் சேர்ந்து, கருவில் குழந்தை இருந்தபோது அம்மாவின் உணர்வுகளால் ஏற்பட்ட பாதிப்பும் சேர்ந்து கொள்ளும். குழந்தை வளர வளர அதனுடன் சேர்ந்து, மனநிலையும் வளரும். 'என் குழந்தை சூட்டிகையாக இல்லை' என்பதும், 'ஒரே உணவையே திரும்ப திரும்ப கேட்கிறது' என்பதே அம்மாக்களின் புகார். குழந்தையின் முதல் உணர்வு பசி.
இந்த தேவையை தீர்ப்பது அம்மா. அதனால் பாதுகாப்பையும், அரவணைப்பையும் அம்மாவிடம் தான் குழந்தை எதிர்பார்க்கும். 3 வயது வரை பெரும்பாலும், அது குழந்தைகளுக்கு கிடைத்து விடுகிறது. அதன்பின் பள்ளியில் சேரும்போது, புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று வரும் போது, ஏற்கனவே இருந்த மனப்பிரச்னைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். இதை, 'செப்பரேஷன் ஆங்சைட்டி' என்று கூறுவோம். குழந்தை மனப் பதற்றத்தோடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? எல்லாக் குழந்தைகளும் விரல் சப்பும்
என்றாலும், மனப்பதற்றம் இருக்கும் குழந்தைகளிடம் நீண்ட நாட்களுக்கு, அந்த பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கத்தை அவ்வளவு எளிதில் விடாது. வேலைக்குப் போகும் பெண்கள் என்றால், குறிப்பிட்ட நேரத்தில் அம்மா தன்னை விட்டுவிட்டு போய்விடுவாள் என்பதை தெரிந்து, சாப்பிட அடம்பிடிக்கும். தான் சாப்பிடாமல் இருந்தால், அம்மா தன் கூடவே இருப்பாள் என்று நினைத்து, சாப்பிட அடம்பிடிக்கும். சில குழந்தைகள் பயம் வந்தவுடன், அவர்களையே அறியாமல் சிறுநீர் கழித்து விடுவர். இன்னும், சில குழந்தைகள், ஒரே காரியத்தை திரும்ப திரும்பச் செய்யும் குழந்தையும் உண்டு. இதற்கு, 'ஆடிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்' என்று பெயர். எப்படியிருந்தாலும் அம்மாவின் அன்பும், அரவணைப்பும் மட்டுமே, குழந்தையை மனப் பதற்றத்தில் இருந்த வெளியில் கெண்டு வர முடியும்.