உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் பரிபூரண ஓய்வு. எட்டு மணி நேர உழைப்பும், எட்டு மணி நேர உறக்கமும், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எட்டு மணி நேரம் உறங்குபவரின் அறிவாற்றல், நினைவாற்றல் அதிகரிப்பதாகவும், அதற்கு குறைவாக உறங்குவோருக்கு, இவை குறைவதாகவும் தெரியவந்துள்ளது.
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், நன்றாக உறங்குபவர்களின் எண்ணிக்கையை விட, சரியாக உறங்காதவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்; காரணம், வேலைப்பளு, கவலை, பிரச்னை, மன அழுத்தம். மாத்திரை சாப்பிட்டு, தூக்கத்தை வரவழைக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; ஒரு முறை உட்கொண்டால், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட்டு தான் தூங்கியாக வேண்டும் என்ற நிலை ஏற்படும்; இதில் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம்.
உண்பது, உழைப்பது, உறங்குவதை முறைப்படுத்தி கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம். தினமும் இரவு, 8:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், ஒரு குறிப்பட்ட நேரத்தை உறங்குவதற்கான நேரமாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதிகாலையில்
எழுவது போல் சிறந்த புத்துணர்ச்சி வேறெதுவும் இல்லை. தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடப்பது, ஓடுவது அல்லது பளு தூக்குவது என, ஏதாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
தரமான தலையணை, மெத்தையை பயன்படுத்துவது, நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும். படுக்கை, நமக்கு பிடித்த மன நிலைக்கு ஏற்றது போல இருக்க வேண்டும். அமைதியாகவும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சம் குறைவாகவும் இருக்க வேண்டும். படுக்கைக்கு போகும் முன், இளஞ்சூட்டில் பால் குடிப்பது நல்லது. பாலில் உள்ள கால்சியம், மன அழுத்தத்தை குறைக்க உதவி செய்வதுடன், நரம்புகளை உறுதியடைய செய்கிறது. பாலில் பாதம், முந்திரி கலந்தும் குடிக்கலாம். பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்வுக்குள், உறக்கத்துக்கும் உதவும். பாதாமில் உள்ள புரதம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஒரு டம்ளர் செர்ரி ஜூஸ் அருந்தி விட்டு தூங்க சென்றாலே, தூக்கம் தானாக வரும்.
இரவில், பழங்களை குறைவாக சாப்பிட்டால், வாயு தொல்லையை குறைக்கலாம். மைதா மாவில் தயாரித்த உணவு, மாமிச உணவுகள், இரவில் ஏற்றதல்ல. தூங்குவதற்கு, ஒரு மணி நேரத்துக்கு முன், சாப்பிடுவது நல்லது.இரவு நேரத்தில், சற்று வெதுவெதுப்பான நீரில்
குளிப்பது சாலச் சிறந்தது. இதமான காற்று, மெல்லிய இசை தூக்கத்தை வரவழைக்கும் ஒரு யுக்தி. மற்றொரு முக்கியமான விஷயம், தூக்கம் வராதவர்களுக்கு கைகொடுப்பது, புத்தகங்கள்.
விரும்பும் புத்தகங்களை ஆழமாக படிக்கும் போது, கை விட்டுப் போன தூக்கம் கூட, இமைகளை இமைக்கச் செய்யும். சரியான தூக்கம் இருந்தால் மட்டுமே, அடுத்த நாள், பணிபுரிய தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். இல்லையென்றால், அலுவலகத்திலோ, பள்ளியிலோ சென்று தூங்க வேண்டியது தான்.