பெரிய அம்மை ஏற்பட்டு, கொப்புளங்கள் பெரிதானால், குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். முகத்தில் தழும்புகள் இருந்தால், அழகையே மாற்றி ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இழந்த அழகை திரும்பவும் பெற முடியும். இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.
இந்த கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாக பூசி உலர விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்தால், வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.
எலுமிச்சை வைத்தியம்: ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வந்தால், அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.
கருமை நீங்க: அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீக்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சம் பழம் சாறு எடுத்து, ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலர விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சென்று மாறும்.
முகப்பருவை போக்க பப்பாளி பால் சிறிதளவு சேகரித்து, அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். கால் மணி நேரத்துக்குப் பின், முகப்பரு இருக்குமிடத்தில் பூசி ஊற வைத்து பின் கழுவ வேண்டும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.