சுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும்.
முடக்கத்தான் இலைகளை எடுத்து, நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால், மூட்டு வலி குறையும். முடக்கத்தான் இலைகளை அரைத்து, மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால், வலி குறையும்.
வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும், 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி குறையும்.
வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி, மூட்டு வலியுள்ள இடத்தில் தடவி வந்தால், வலி குறையும். நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து, மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும். நொச்சி இலை சாறை, மிளகு தூள், நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி, ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும். கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி, மூட்டு வலி மற்றும் வாதவலி இருக்கும் இடங்களின் மீது கட்டி வந்தால் வலி குறையும். மூட்டு வலியால் அவதிப்படும் முதியோர், உரிய டாக்டரின் ஆலோசனை பெற்று, இம்மருத்துவத்தை பின்பற்றலாம்.