கூகுள் பாதுகாப்பு சோதனை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கூகுள் பாதுகாப்பு சோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
00:00

கூகுள் தரும் செயலிகளைப் (Google Docs, Gmail, and Google search போன்றவை)பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது. கூகுள் இப்போது அனைத்து செயலிகளுக்குமாக, ஒரே ஒரு அக்கவுண்ட் கணக்கினையும் ஏற்றுக் கொள்கிறது. அண்மையில், ”கூகுள் அக்கவுண்ட்டினை நீங்கள் அமைத்துள்ள வழிகள் பாதுகாப்பானதா?” எனச் சோதித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி, தங்களுடைய கூகுள் கணக்கு அமைப்பினைச் சோதனை செய்து, கூகுள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து நிறைவு செய்தவர்களுக்கு, அவர்களின் கூகுள் ட்ரைவ் இடம், 2 ஜி.பி. கூடுதலாக இணைக்கப்பட்டது. இதை ஒரு பரிசாகவே தந்தது. பிப்ரவரி 18 வரை, இந்த சோதனையை மேற்கொண்டவர்களுக்கே இது தரப்பட்டது. இதன் மூலம் நாம், கூகுள் நிறுவனத்திடம், நம் சொந்த தகவல்கள் எவற்றையும் தரப்போவதில்லை. நம்மை வேறு எந்த கட்டண சேவைக்கும் கூகுள் நம்மை இழுப்பதில்லை. எல்லாமே, 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடங்களுக்குள்ளாக முடிந்துவிடுகிறது. தற்போது பரிசாக 2 ஜி.பி. வழங்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த பாதுகாப்பு ஏற்பாடு சோதனையை மேற்கொள்வது நல்லதுதான். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் நுழையவும். அடுத்து, உங்கள் அக்கவுண்ட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை மீட்டு எடுக்கும் “Recovery” செயல்பாட்டிற்கு நீங்கள் தந்துள்ள தகவல்கள் காட்டப்பட்டு 'அவை சரிதானா? அல்லது வேறு புதிய தகவல் உண்டா?” என்று கேட்கப்படும். உங்கள் அக்கவுண்ட் மீட்டெடுக்க, நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணைத் தரவில்லை என்றால், உங்கள் தொலைபேசி எண் ஒன்றைத் தரச்சொல்லிக் கேட்கும். இந்த தொலைபேசிக்கு, கூகுள் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை அனுப்பும்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கூகுள் ஏற்கனவே, இரு நிலை பாதுகாப்பு என்ற அடிப்படையில், தொலைபேசி எண்ணைக் கேட்டிருக்கும். ஒவ்வொருமுறை நீங்கள் கூகுள் அக்கவுண்ட்டிற்குச் செல்கையில், அந்த தொலைபேசிக்கு ஒரு பாஸ்வேர்ட் எண் அனுப்பப்படும். அதனைச் சரியாக உள்ளீடு செய்தாலே, உங்களால் உங்கள் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்த முடியும். ஆனால், இப்போது அத்தகைய பாதுகாப்பு அமைத்திட கூகுள் தகவல்களைக் கேட்கவில்லை. உங்களுடைய அக்கவுண்ட், ஹேக்கர்களால் கடத்தப்பட்டிருந்தால், அதனை மீட்டு தரும் முயற்சியில், பயன்படுத்தக் கூடிய தொலைபேசி எண்ணைக் கேட்கிறது.
அத்துடன், உங்களுடைய இரண்டாவது மின் அஞ்சல் அக்கவுண்ட் ஒன்றினைத் தருமாறும் கூகுள் கேட்கும். இது கூகுள் அக்கவுண்ட்டாகவோ அல்லது வேறு ஒரு மின் அஞ்சல் செயலி சார்ந்த அக்கவுண்ட்டாகவோ இருக்கலாம்.
அடுத்தபடியாக, உங்களுடைய கூகுள் அக்கவுண்ட் சார்ந்து நீங்கள் பயன்படுத்தக் கூடிய பிற டிஜிட்டல் சாதனங்கள் குறித்து கூகுள் தகவல்களைக் கேட்கும். நீங்கள் அறியாத சாதனம் ஒன்றைக் குறிப்பிட்டாலோ அல்லது நீங்கள் குறிப்பிடும் சாதனம், தற்போது, நீங்கள் செல்லாத ஓரிடத்திலிருந்து இயக்கப்பட்டாலோ, கூகுள், உங்கள் பாதுகாப்பான நிலையை, இருமுறை சோதனை செய்து பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தும். அதற்கான வழிகளையும் தரும்.
எடுத்துக் காட்டாக, நீங்கள் முதன் முதலாக, வட மாநிலம் ஒன்றுக்கோ அல்லது அமெரிக்கா போன்ற நாட்டிற்கோ சென்று, அந்த இடத்தில் இருந்து, ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, “இது என்ன புதிய இடமாக உள்ளது. இதன் உரிமையாளர்தானா இதனைப் பயன்படுத்துவது?” என்று கேள்விகள் கேட்டு, கூகுள் உறுதிப்படுத்திக் கொள்ளும்.
அடுத்தபடியாக, கூகுள் உங்களிடம், பாதுகாப்பற்ற செயலிகளைப் பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் விலகி இருக்க விரும்புகிறீர்களா? என்று கேட்கும். இது, கூகுள், இணையத்தினை முழுமையான பாதுகாப்பு பெற்றதாக இருப்பதனை உறுதி செய்திடும் பணியில் மேற்கொள்ளும் முயற்சியாகும்.
அண்மையில் கூட, கூகுள் தன்னுடைய குரோம் இணைய பிரவுசர், HTTPS என்ற முன்னொட்டு இல்லாத முகவரிகளைக் கொண்ட இணைய தளங்களை “பாதுகாப்பற்றவை” எனக் குறித்து வைக்கும். இப்போது கூட, இணைய பாதுகாப்பு வரையறைகளை மேற்கொள்ளாத செயலிகளைத் தடுத்து வைக்கும் செயல்பாட்டு விருப்பத்தினை நம்மிடம் அளிக்கிறது. கூகுள் பாதுகாப்பற்ற வழிமுறைகளைக் கையாளும் செயலிகள் எனக் கீழ்க்கண்ட செயலிகளைக் குறிப்பிடுகிறது. அவை:
1. உங்கள் ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தில், ஐ.ஓ.எஸ்.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அதற்கு முந்தைய சிஸ்டத்தில் இயங்கும் மெயில் அப்ளிகேஷன்கள்.
2. விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போனில் இயங்கும் மெயில் செயலிகள்.
3. மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் மொஸில்லாவின் தண்டர்பேர்ட் ஆகிய அஞ்சல் செயலிகள்.
கூகுள் தரும் சேவைகளில், மேலே சொல்லப்பட்ட செயலிகளை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், அது நீங்களாக, முட்டாள்தனமாக வரவழைத்துக் கொள்ளும் துன்பமாகும் என கூகுள் சொல்கிறது.
இறுதியாக, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட செயலிகள், இணைய தளங்கள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றை, மீண்டும் ஒருமுறை தீவிரமாகச் சோதனை செய்து பார்க்கச் சொல்கிறது. அவை என்னவென உங்களால் அறிய முடியாவிட்டாலோ அல்லது தற்போது நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தாலோ, அவற்றை கூகுள் அக்கவுண்ட்டின் இணைப்பிலிருந்து நீக்கச் சொல்லி கூகுள் கேட்டுக் கொள்கிறது. பல இடங்களில், நாம் ஜிமெயில் அஞ்சல் முகவரியினையே நம் யூசர் பெயராகப் பயன்படுத்துவோம். அந்த செயலிகள், சரியானவை அல்ல என்று கூகுள் பட்டியலில் இருந்தால், தொடர்ந்து கூகுள் அக்கவுண்ட் சார்ந்த எதனையும் அதனுடன் தொடர்பு படுத்தக் கூடாது என கூகுள் அறிவுறுத்துகிறது.
இந்த சோதனை மேலே சொல்லப்பட்டதுடன் முடிவடைகிறது. நீங்கள் பிப்ரவரி 18க்கு முன்னர், இதனை மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு இலவசமாக, உங்கள் ட்ரைவ் அக்கவுண்ட்டில் 2 ஜி.பி. இடம் கிடைத்திருக்கும்.
அதனால் என்ன? பாதுகாப்பு சோதனையை இப்போதும் மேற்கொண்டு, நம் பயன்பாட்டைப் பாதுகாத்துக் கொள்வது நல்லதுதானே!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X