“விருப்பமோ இல்லையோ” என்று தலைப்பில் கூறி அதிர்ச்சி தந்துவிட்டு, இறுதியில் நாம் கிளிக் செய்திடாமல், விண்டோஸ் 10 நம் கம்ப்யூட்டரில் இறங்காது என்று ஆறுதலாகவும் எழுதி உள்ளீர்கள். இருந்தாலும், விண்டோஸ் 10 நமக்கு நல்லது. அதனை கட்டாயமாக ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை பின்னாளில் ஏற்படும். அப்போது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது, தெளிவாகவும், பயனுள்ள அறிவுரையாகவும் உள்ளது. வழி காட்டிய கட்டுரை இது.
பேரா. எம். சிவசண்முகம். செங்கல்பட்டு.
விண்டோஸ் 10 இயக்கம் இருந்தால் தான், இனி வருங்காலத்தில் மைக்ரோசாப்ட் தரும் வசதிகளைப் பயன்படுத்த முடியும். எனவே, காலத்தின் ஆற்றுப் போக்கில் செல்வதுதான் சரி. புதிய கம்ப்யூட்டராவது வாங்கி விண்டோஸ் 10 பயன்படுத்துவதே நல்லது.
என். ஸ்ரீனிவாசன், ஹோசூர்.
ஏதோ ஒரு நாளில் என் ஜிமெயில் தளத்தினை, என் பிள்ளைகள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆண்டுக் கணக்கில் இதனையே பயன்படுத்தி வருகிறேன். உங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே, அதன் பின்னணியை, மனதிற்குப் பிடித்த, கண்ணுக்கு உறுத்தாத வண்ணத்தில் அமைத்தேன். என் பேரக் குழந்தைகள் உள்ள படத்தினையும் பயன்படுத்த அமைத்து விட்டேன். இது போல சின்ன சின்ன விஷயங்கள் பலவற்றை உங்களிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். மிக்க நன்றி.
என்.கே. சேஷாத்ரி நாதன், தஞ்சாவூர்.
ஆண்ட்ராய்ட் போன் குறித்த கட்டுரையில் எக்கச்சக்க தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் புதியது மட்டுமின்றி, அதிக பயன் தருவதாகவும் உள்ளன. மீண்டும் மீண்டும் படித்து பத்திரப்படுத்தி உள்ளேன். எழுதியவருக்கு பாராட்டும் நன்றியும். (குறிப்புகளுக்கேற்ற படங்கள் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்)
ஆர். வைத்தியநாத சர்மா, சென்னை.
வாட்ஸ் அப் மற்றும் ஜிமெயில் எல்லாம், இன்று நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட அங்கங்களாகும். இவை இல்லாமல் வாழும் மக்கள், தங்கள் வாழ்வில் முக்கிய பயன்களை அனுபவிக்காமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. எனவே, நூறு கோடி பயனாளர்களை எட்டியது, ஓர் இயற்கையான வளர்ச்சி ஆகும்.
மா. சுந்தர ஈஸ்வரன், திருப்பூர்.
இதுவரை கூகுள் தரும் எச்சரிக்கை எதனையும் நான் பெறவில்லை. இருப்பினும், கூகுள் உதவிடுகிறது என்பது நமக்கு பயமற்ற ஓர் உற்சாகத்தினைத் தருகிறது. இது போன்ற பாதுகாப்பினை அனைத்து பிரவுசர்களும் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
என். இப்தி காருதீன், வேலூர்.
கேள்வி பதில் பகுதியில் தரப்படும் கேள்விகளில் பெரும்பாலும் விண்டோஸ் 10க்கு மாற வேண்டியது குறித்து அஞ்சும் மனநிலையில் உள்ளவர்களின் கேள்விகளாகவே உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டில் இது ஒரு வளர்ச்சியே. மைக்ரோசாப்ட் இதனை இலவசமாகக் கொடுப்பதால் தான், எல்லாரும் அஞ்சுகின்றனர். இதனைப் போக்கும் வகையில், இன்னும் சில கட்டுரைகளை அளிக்கவும்.
பேரா. என். விமலா ராணி, கோவை.
ஹைபர்னேட் மற்றும் ஸ்லீப் நிலைகள் குறித்த வேறுபாடு மற்றும் விளக்கம் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையிலான பதிலாக உள்ளது. இப்போது நான் ஹைபர்னேட் தான் அதிகம் பயன்படுத்துகிறேன்.
எஸ். உமா மஹேஸ்வரி, தாம்பரம்.
திருட்டு நகல் (பைரசி சாப்ட்வேர்) பயன்படுத்துவோருக்கு நல்ல சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள். அடுத்தவரின் உழைப்பைத் திருடுபவர்கள் என அழுத்தத் திருத்தமாகக் கூறியுள்ளீர்கள். நம் வாசகர்களை நல்ல வழிக்குத் திருப்பும் உங்களின் “ஆசிரியர் போக்கு” எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
தே. காந்திமதி, செஞ்சி.