கேள்வி: நான் என் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். இந்த பிரவுசர் திடீரென முன்பு போல் இயங்கவில்லை. ஏதேனும் வைரஸ் அல்லது மால்வேர் கைப்பற்றி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனை எப்படி உறுதி செய்வது? ஆனால், மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இந்த சந்தேகத்தினை எப்படி போக்கலாம்?
என். மாலதி கண்ணன், சிவகங்கை.
பதில்: கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு விட்டது என்பது உறுதியாகிறது.
1. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர், நீங்கள் விரும்பாமலேயே, நீங்கள் அமைக்காத முகவரி உள்ள தளம் ஒன்றுக்குச் செல்கிறது.
2. மாறா நிலையில் நீங்கள் அமைத்த தேடல் சாதனம் மாற்றப்பட்டுள்ளது. புதிய சர்ச் இஞ்சினில், நீங்கள் எதனைத் தேடினாலும், அது புதியதாக, உருவாக்கப்பட்ட இஞ்சின் உள்ள இணைய தளத்திற்குச் செல்கிறது.
3. ஆண்ட்டி வைரஸ், ஆண்டி ஸ்பைவேர் அல்லது ஆண்ட்டி மால்வேர் தளங்களுக்கு நீங்கள் செல்கையில், நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்.
4. வெப் பிரவுசரைப் பயன்படுத்துகையில், பல்வேறு பாப் அப் விண்டோக்கள் கிடைக்கின்றன. அவற்றை உங்களால், மூட இயலவில்லை.
5. புதியதாக, நீங்கள் அமைக்காத பேவரிட் தள முகவரிகள் அல்லது புக்மார்க் அமைக்கப்படுகின்றன.
6. வெப் பிரவுசர் மிகவும் மெதுவாக இயங்குகிறது.
இதிலிருந்து தப்பிக்க சில வழிகளைக் கையாளலாம். ஆனால், இந்த வழிகள் நூறு சதவீதம் உங்களைப் பாதுகாக்கும் என உறுதி அளிக்க முடியாது.
1. விண்டோஸ் சிஸ்டத்திற்கென அளிக்கப்படும் பேட்ச் பைல்களை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.
2. புதிய சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், வேறு ஏதேனும் தேவைப்படாத சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படுகிறதா என விழிப்பாய் இருக்கவும்.
3. தெரியாத சாப்ட்வேர் தொகுப்பினை, தேவைப்படாத சாப்ட்வேர் தொகுப்பினை, நான்கு பேர் நல்லது என்று சொல்கிறார்கள் என்பதற்காக, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டாம்.
4. எந்த ப்ளக் இன் புரோகிராமினையும், உங்களுக்கு அது தேவை எனச் சரியாக உறுதி செய்யப்படும் முன் இன்ஸ்டால் செய்திட வேண்டாம்.
5. ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து, அவ்வப்போது அதனை அப்டேட் செய்திடவும்.
6. அதே போல, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் அப்டேட் செய்திடவும்.
7. வெப் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்புகளை எப்போதும் உயர்நிலை பாதுகாப்பு நிலையிலேயே அமைத்து வைக்கவும்.
8. தேவையற்ற அல்லது இனம் அறியாத இணைய தளங்களை அணுகுவதைத் தவிர்க்கவும்.
9. மேலே தரப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படலாம்; உங்கள் பிரவுசர் கைப்பற்றப்படலாம். எனவே, நம் இணையப் பயன்பாட்டினை விழிப்போடு மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி: நான் விண்டோஸ் 7 என்னுடைய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வருகிறேன். இதன் டாஸ்க் பாரில் “Get Windows 10” என்ற ஐகான் உள்ளது. இந்த கம்ப்யூட்டரில் நான் இணையம் பயன்படுத்துவதே இல்லை. எனக்கு விண்டோஸ் 7 போதும். விண்டோஸ் 10 குறித்த எந்த செய்தியும் எனக்கு வேண்டாம். இதற்கு நான் என்ன செய்திட வேண்டும்? சிலர், எப்படியும் விண் 10 என் கம்ப்யூட்டரில் வந்துவிடும் என்று சொல்கின்றனர். உண்மையா?
ஆர். ஜெயசீலி தன்ராஜ், கோவை.
பதில்: உங்கள் விருப்பம் இல்லாமல், நீங்கள் சரி என்று கிளிக் செய்திடாமல், உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் tபதியப்பட மாட்டாது. டாஸ்க் பாரில் உள்ள ஐகானை நீக்க வேண்டுமா? அது அங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அதனை நீக்கிவிடலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் இரண்டு ஆப்ஷனில், Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கிடைக்கும் சிறிய விண்டோவில், Taskbar என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து “Customize” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும். இதில் GWX, the Get Windows 10 என்பதைத் தேடிப் பெறவும். இதன் மெனுவில் “Hide icon and notifications” என்ற ஆப்ஷன் தரப்படும். இதனைத் தேர்ந்தெடுத்தால், Get Windows 10 ஐகான் மறைக்கப்படும்.
இன்னும் தீவிரமாக, விண்டோஸ் 10 குறித்த தகவலை நீக்க வேண்டும் என்றால், 'Run' விண்டோவில், Windows Update இயக்கவும். இதில் “View update history” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்பட்டவைஅனைத்தும் காட்டப்படும். இந்த பட்டியலில், KB3035583 என்பதனைத் தேடிக் கண்டறியவும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், uninstall or change என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் உங்களிடம், “Are you sure?” எனக் கேட்கும். “Yes” என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான். இனி விண்டோஸ் 10 குறித்த எந்த தகவலும், அறிவிக்கையும் உங்களுக்கு வராது. மீண்டும் விண்டோஸ் 10 வேண்டும் என ஆசைப்பட்டால், முதலில் இந்த அப்டேட் பைலை, இன்ஸ்டால் செய்த பின்னரே, அந்த செயல்பாட்டினைத் முடியும்.
கேள்வி: அண்மையில் நான் வாங்கிய லேப்ட ாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8.1 பதியப்பட்டுத் தரப்பட்டது. இதில் நான் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாமல், சபாரி பிரவுசரை இயக்க முடியுமா? அல்லது ஆப்பிள் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் தான் வாங்க வேண்டுமா? சபாரி பிரவுசர் வேண்டும்; ஆனால், விண்டோஸ் சிஸ்டம் வேண்டாம் என்பதே என் முடிவு. தயவு செய்து உதவிடவும்.
டி. எஸ். மஹேந்திரன், திருப்பூர்.
பதில்: கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாமல், பிரவுசரை இயக்க முடியாது. எனவே, விண்டோஸ் சிஸ்டம் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ளதால், அதில் தான் இயக்க முடியும். விண்டோஸ் 10 கட்டாயப்படுத்தப்படுவதனால், அது பிடிக்கவில்லை என்று உங்கள் கடிதத்தில் எழுதி உள்ளீர்கள். அப்படியானால், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து அதில் சபாரி பிரவுசரை இயக்கலாம். அதில் பயர்பாக்ஸ் பிரவுசரையும் இயக்கலாம். விண்டோஸ் புரோகிராம்களை இயக்குவது அதில் சிரமமாகலாம். ஆனால், ஆப்பிள் கம்ப்யூட்டரை இதற்கென வாங்குவது அநாவசியச் செலவு. விண்டோஸ் 8.1 இருப்பதால், விண்டோஸ் 10 உங்களுக்கு இலவச அப்டேட் ஆகக் கிடைக்கும். அதனைப் பெற்றுப் பயன்படுத்திப் பார்த்து, பின்னர் ஒரு முடிவிற்கு வருமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். வர்த்தகரீதியாக, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1-0 சிஸ்டத்தினைப் பதிந்து இயக்குமாறு கேட்கிறது. அதற்காக, அதனை வெறுத்து ஒதுக்க வேண்டாம்.
இணையம் பார்ப்பது, இமெயில் பார்ப்பது மட்டுமே உங்கள் நோக்கம் எனில், ஏதேனும் ஓர் ஆண்ட்ராய்ட் டேப்ளட், விண்டோஸ் டேப்ளட் அல்லது ஐ பேட் வாங்கலாம்.
கேள்வி: என்னிடம் ஸ்மார்ட் டி.வி. ஒன்று உள்ளது. இதில் வை பி இணைப்பு மூலம், இணையத்தைப் பார்க்க முடிகிறது. நல்ல அனுபவமாகவும் உள்ளது. இப்போது, நான் இன்னும் வேகமாக இணைப்பு தரும் ஒரு சர்வீஸ் புரவைடரிடம், இணைய இணைப்பு வாங்க உள்ளேன். இதனால், டி.வி. இணைய இணைப்பு கிடைப்பது பாதிக்குமா?
ஆர். ஜெயலட்சுமி, சென்னை.
பதில்: இணைய இணைப்பு தரும் நிறுவனம் குறித்து, ஒரு ஸ்மார்ட் டிவிக்கு கவலை இல்லை. இணைய இணைப்பிற்கான வை பி சிக்னல் அதற்குக் கிடைக்க வேண்டும். புதிய நிறுவனத்திடம் இணைப்பு வாங்கிய பின்னர், உங்களுடைய ரெளட்டருக்கான பாஸ்வேர்ட் போன்றவற்றை டி.வி. இணைய இணைப்பு பிரிவில் தரவேண்டியதிருக்கும். முதலில், உங்கள் இணைய இணைப்பு பிரிவின் பெயரை, டி.வி. தானாக அறிந்து அதற்கான பாஸ்வேர்டைக் கேட்கும். ஒருமுறை கொடுத்துவிட்டால், பின்னர் தானாக அது இணைந்து செயல்படும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வந்ததனால், புதிய சிக்கல் ஒன்றும் இருக்காது.
கேள்வி: யாஹூ மெயில் தளத்தில் எனக்கு அக்கவுண்ட் உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில், நான் என் கிராமத்திற்குச் செல்ல இருக்கிறேன். தானாகப் பதில் அளிக்கும் Auto Response வசதியை எப்படி செட் செய்வது? விளக்கமாகக் கூறவும். இணையத்தில் தேடிப் பார்த்தேன். எல்லாரும் குழப்புகிறார்கள். நீங்கள் நிச்சயம் தெளிவாகக் கூறுவீர்கள். நன்றி.
எஸ். மாலதி, செங்கல்பட்டு.
பதில்: பொறுமையாகத் தேடி இருந்தால், இணையத்தில் இதற்கான வழிகளைப் பெற்றிருக்கலாம். அங்கு கூடுதல் விளக்கங்களுடன் கிடைத்திருக்கும். இதோ கீழே தந்துள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும். இவை, யாஹூ மெயில் சார்ந்த குறிப்புகள் மட்டுமே. மற்ற மின் அஞ்சல் கணக்குகளுக்கு அல்ல.
உங்கள் பிரவுசரில் www.mail.yahoo.com என்ற தளத்டில் நுழையவும். உங்களுடைய லாக் இன் பக்கம் காட்டப்படும். உங்களுடைய மெயில் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் தரவும். “Sign In” என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கு வந்திருக்கும் அனைத்து மெயில்களுடன், உங்களுடைய இன்பாக்ஸ் காட்டப்படும். மேலாக, வலது பக்க மூலையில் உள்ள சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் இன் பாக்ஸ் இருந்த இடத்தில், செட்டிங்ஸ் பக்கம் காட்டப்படும். இந்த செட்டிங்ஸ் டயலாக் பாக்ஸில், இடது புறமாக, பல ஆப்ஷன்ஸ் காட்டப்படும். இவற்றில், “Vacation Response” அல்லது “Holiday Response” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு முதலில், நீங்கள் விடுமுறையில் செல்லவிருக்கும் காலத்திற்கான தேதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், அந்த நாட்களுக்குக் காட்டப்பட வேண்டிய விடுமுறைக் கால தகவலினைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எப்போதும் பார்க்க வேண்டிய முக்கிய வேலை இருந்தால், ஓர் ஆண்டுக்குக் கூட இந்த காலத்தினை செட் செய்திடலாம். உங்கள் அஞ்சலைப் பெற்றேன். அப்புறமாகப் படித்துப் பார்த்து பதில் தருகிறேன் என்ற வகையில் கூட செய்தி அமைக்கலாம்.
கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இறுதிப் பதிப்பு எப்போதுதான் வரும்? தொடர்ந்து அதற்கான அடுத்தடுத்த பதிப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவே! நான் இறுதிப் பதிப்பு வந்த பின்னர், அதற்கு மாறிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இது சரியா?
ஆ. மயூரநாதன், கும்பகோணம்.
பதில்: 2015 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று, விண்டோஸ் 10 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட இந்த சிஸ்டத்திற்குத் தொடர்ந்து சில மேம்படுத்தலுக்கான கோப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போது சோதனை தொகுப்பு என்ற நிலையிலிருந்து மாறி, பொதுமக்களுக்கென ஒரு பதிப்பு வந்ததோ, அப்போதே அது இறுதித் தொகுப்பாகும். அதே போல, ஒவ்வொரு மேம்படுத்தலுக்கான கோப்பு வரும்போதும், அது இறுதித் தொகுப்பாக மாறுகிறது. ஆனாலும், நீங்கள் சந்தேகப்படுவது போல, “இறுதி” என்ற சொல்லை இந்தப் பதிப்புகளுக்குப் பயன்படுத்தலாமா என்பது கேள்விக்குறியே. அப்படிப் பார்த்தால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பும், “இறுதியான” பதிப்பாகாது. இதற்கு முன்னரும், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பதிப்பு கோப்புகள் தரப்பட்டன. விண்டோஸ் 8க்கு, புதியதாக விண்டோஸ் 8.1 வழங்கப்பட்டது.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் புதிய நிலை ஒன்றை எடுத்துள்ளது. இந்த சிஸ்டத்திற்கான புதிய, சிறிய அளவிலான மேம்படுத்தும் கோப்புகள் தொடர்ந்து வழங்குவதே அந்நிலையாகும்.
உங்களிடம் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 இருந்து, அதற்கான இலவசமாக, இப்போது நீங்கள் பெறும் மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 தொகுப்பும், கட்டணம் செலுத்திப் பெறும் விண்டோஸ் 10 தொகுப்பும் ஒன்றேதான். எனவே, இன்னும் காத்திருக்காமல், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். உங்களுக்கு ஒரு போனஸ் தகவல் தருகிறேன் ~ நீங்கள்
நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காக. அமெரிக்க அரசின் பாதுகாப்பு துறை, தான் பயன்படுத்தும் 40 லட்சம் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதித்து இயக்க முடிவெடுத்துள்ளது.