பொன்னுத்தாயி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2016
00:00

''கீரெ... கீரெ... அரக்கீர... சிறுகீரெ... பொன்னாங்கண்ணிக்கீர...''
தலையில் கூடையும், இடுப்பில் மூட்டையுமாக மெல்ல நடந்து வரும் பொன்னுத்தாயிக் கிழவியின் குரல், அந்த தெருவின் கடைசி வரை கணீரென்று ஒலித்தது. பல வீட்டு இல்லத்தரசிகள் வாசலுக்கு வந்து தயாராக நின்றனர்.
''ஏம்மா... சிறு கீரை கட்டு எவ்வளவு?''
''10 ரூபா...''
''அய்யோடா... என்னது கீரையப் போய் இந்த விலை விக்கிறே...''
''என்னம்மா... அவ்வளவு எளக்காரமாப் பேசற... ரெண்டு கட்டு வாங்கி கடைஞ்சேன்னா, குடும்பம் மொத்தத்துக்கும் ஆவும். 20 ரூபாயில, எந்தக் காயி வாங்கி, என்ன செய்வே?''
கேட்டவளுக்கு, சரியான பதில் கொடுத்தாள் பொன்னுத்தாயி.
என்ன கேள்வி கேட்டாலும், கடைசியில் கீரை வாங்காமல் போக மாட்டார்கள். அந்த ஏரியாவில், வேற யாராவது கீரை கொண்டு வந்து கூவிக் கூவி விற்றாலும், ஒரு கட்டு கூட விற்காது. கிழவியின் கீரை மண்ணும், களையுமின்றி, 'தளதள'வென்று இருக்கும். கடைகளில் வாங்கும் கீரையில், கட்டுக்கு பாதி தேறினாலே அதிகம்; ஆனால், பொன்னுத்தாயின் கீரையில் முழுக்கட்டுமே சுத்தம். இது, இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட, பல ஆண்டுகளாக அத்தெருவாசிகளின் அனுபவம்.
தெருவுக்கு புதிதாக குடிவந்தவர்கள், விஷயம் தெரியாமல், கிழவியிடம் பேரம் பேசுவதுண்டு. அதிலும் சில, 'ரிட்டையர்டு' ஆசாமிகள், அவ்வளவு சீக்கிரம் கீரைக் கட்டை வாங்கி, காசு கொடுக்க மாட்டார்கள்.
ஒருநாள் ஒரு ரிட்டையர்டு ஆபீசர், 'ஏய் கிழவி... கடையிலயே, எட்டு ரூபாய்க்கு தான் குடுக்கிறான்; நீ விலைய கூடச் சொல்றியே... ஒரு பொருளை அதிக விலை வச்சு விக்கறது, சட்டப்படி குத்தம் தெரியுமா...' என்றார்.
'எந்தக் கடையில, எந்தச் சாமானை, நியாய விலையில விக்குறான்... உங்க சட்டத்த அங்க பேசறீங்களா... கேட்ட விலைய குடுத்துட்டு, வாங்கிட்டு தான வர்றீங்க...' என்றாள் பொன்னுத்தாயி.
'ஓகோ... அப்ப நீ என்ன விலை சொன்னாலும், அந்த காசை கொடுத்து கீரைய வாங்கிக்கணும்... அப்படித்தானே?'
தன் இயலாமையை கிழவி குத்திக் காட்டியதில், ஆத்திரமாகக் கேட்டார் அதிகாரி.
இடுப்பிலிருந்த மூட்டையை கீழே வைத்து, மெல்ல தலையிலிருந்த கூடையை இறக்கி வைத்து, அந்த ஆபீசரைப் பார்த்து, 'எந்தக் கீரை வேணுமோ எவ்வளவு கட்டு வேணுமோ எடுத்துக்கங்க...' என்றாள் பொன்னுத்தாயி.
'அப்படி வா வழிக்கு...' தான் மிரட்டியதில், கிழவி பயந்து விட்டாள் என நினைத்து உற்சாகமான ஆபீசர், இரண்டு கட்டு வாங்கலாமென்றிருந்தவர், நான்கு கட்டுகளை எடுத்தார்.
இரண்டு, 10 ரூபாய் நோட்டுகளை நீட்டியபடியே, 'ஒரு கட்டு அஞ்சு ரூபான்னு, நாலுகட்டு எடுத்துக்கிட்டேன்...' என்றார்.
பணத்தை வாங்காமல், அவருடைய முகத்தையே பார்த்த கிழவி, 'வேணாங்க சாமி...' என்றாள்.
'என்னது... காசு வேணாமா சரி சரி... ரெண்டு ரூபா சேர்த்து தரேன்; வாங்கிக்க...'
'காசே வேணாங்கறேன்... எதுக்கு சேர்த்து குடுக்கறே....' என்ற பொன்னுத்தாயை, அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார் ஆபீசர்.
'இதோ பாருங்கய்யா... இன்னிக்கு என் கீரைய சமைச்சு சாப்பிட்டு பாருங்க; நாளைக்கு கடையில வாங்கி சமைச்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறமா எனக்கு காசு குடுக்கணும்ன்னு தோணுச்சுன்னா, நான் கேட்ட காசக் குடுங்க; இல்ல நீங்களே வெச்சுக்கங்க. எம்புள்ளக்கி குடுத்ததா நெனச்சுட்டுப் போறேன்...' என, அவரின் பதிலுக்கு காத்திருக்காமல், மூட்டையையும், கூடையையும் தூக்கி கிளம்பி விட்டாள் பொன்னுதாய்.
'கீரெ... கீரெ... அரக்கீரெ... சிறுகீரெ... முளக்கீரே... பொன்னாங்கண்ணிக்கீரெ...' கொஞ்சம் கூட சுருதி பிசகாமல், உரக்கக் கூவியபடி தெருவில் நடக்க துவங்கிய பொன்னுத்தாயை, வியப்புடன் பார்த்தபடி நின்று விட்டார் ஆபீசர். இது போன ஆண்டு நடந்தது; இந்த ஆண்டு பொங்கலுக்கு, சின்னாளம்பட்டிப் புடவை எடுத்து, பொன்னுத்தாயிக்கு கொடுத்தார் அந்த ஆபீசர்; சந்தோஷமாக வாங்கி கொண்டாள்.
ஆனாலும், இன்றைக்கும் விலையில் கறார் தான்; குறைக்க மாட்டாள். ஒரு கட்டு கீரைகூட மிஞ்சாது; காலிக் கூடையுடன் தான் வீட்டுக்கு திரும்புவாள்.
தெருவாசிகள் பலருக்கு, பொன்னுத்தாயின் விஷயத்தில் ஆச்சரியம்! கிழவிக்கு குடும்பம் என்று யாருமே கிடையாது. முன்பெல்லாம் கேட்ட விலைக்கு கொடுத்து விட்டு போய் விடுவாள். கொஞ்ச நாட்களாக தான், இப்படி கறாராக இருக்கிறாள். இதை, பொன்னுத்தாயிடமே வாய்விட்டு கேட்டவர்களும் உண்டு.
'என்ன கிழவி... வயசாக வயசாக, உனக்கு காசு மேல ஆசை ஜாஸ்தியாகிட்டே போவுதே...'
'ஆமாமா... உங்ககிட்ட அநியாய விலைக்கு கீரைய வித்து, காசு சேத்து, மச்சுவீடு கட்டப் போறேன் போ...'கேட்டவள் வாயை மூடிக் கொண்டாள்.
காலையில், 5:00 மணிக்கு எழுந்தால், 6:00 மணிக்குள் ஊர் கடைசியில் உள்ள தோட்டத்துக்கு சென்று, கீரைகளை பிடுங்கி, வாய்க்கால் நீரில் அலசி ஆய்ந்து, அதை கட்டுகளாக்கி எடுத்து, 7:00 மணிக்குள்ளாகவே கூவத் துவங்கி விடுவாள். விற்று முடிந்து வீடு திரும்ப, 10:00 மணி ஆகிவிடும்.
அன்றைய வருமானத்தை எண்ணிப் பார்த்து, முந்தைய சேமிப்போடு சேர்த்து வைத்து, அந்த சிறிய ஓட்டு வீட்டில் பத்திரப்படுத்துவாள். அதன் பின் தான், சமைக்கவே ஆரம்பிப்பாள். இந்த நடைமுறை சில ஆண்டுகளாக தான். அவளுடைய வாடிக்கையாளர்கள் சிலர் கூறுவதைப் போல, காசு ஆசை வந்து, காசை சேர்த்துக் கொண்டுதானிருக்கிறாள்.
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் -
குழந்தைகள் விளையாடுவதை பார்த்த படியே, மெல்ல நடந்தாள் இல்லத் தலைவி சிஸ்டர் ஏஞ்சலினா. பின்னாலிருந்து, ''வணக்கம்மா...'' என்ற குரல் கேட்டு திரும்பினாள்.
பொன்னுத்தாயி நின்றிருந்தாள்.
''என்ன பொன்னுத்தாயி... சவுக்கியமா...''
''நல்லாயிருக்கேன்ம்மா...''
''உன் பேரனப் பாக்க வந்தியா... அதோ விளையாடிட்டுருக்கான் பாரு...''
சிஸ்டர் கை காட்டிய திசையில் பார்த்தாள் , பொன்னுத்தாயி. 'துறுதுறுவென்று மூன்று வயது சிறுவன் ஒருவன் ஓடிப் பிடித்து விளையாடியபடி இருந்தான்.
முகம் கனிந்து, கண்களில் நீர் நிறைய, ''என் பேரன்னா சொன்னீங்க...'' என, மெல்ல கேட்டாள், பொன்னுத்தாயி.
''ஏன் உன் பேரன்னு சொல்றதுல என்ன தப்பு?''
கிழவி ஏதும் பேசவில்லை. அமைதியாக குழந்தைகள் கூட்டத்தில், குதித்து ஓடும் சிறுவனையே பார்த்தாள்.
''பொன்னுத்தாயி...'' என்ற சிஸ்டரை திரும்பி பார்த்தாள்.
''என்ன யோசனை செய்றே?''
''ஒண்ணுமில்லம்மா...''
''மூணு வருஷத்துக்கு முன், விடியக்கால நேரத்துல, இந்தப் பையன, பச்சைக் குழந்தையா என் கையில கொண்டு வந்து கொடுத்தியே... அத நினைச்சுக்கிட்டயா?'' என்று கேட்டாள் சிஸ்டர்.
''ஆமாம்மா... அத நெனச்சா இன்னிக்குக் கூட என் நெஞ்சு பதறுது. பொறந்த பச்சக் குழந்தைய, தோட்டத்துல செடிகளுக்கு நடுவுல, மண்ணுல தூக்கிப் போட்டுட்டு போறதுக்கு, ஒரு பொம்பளையோட மனசு எப்படி துணிஞ்சதுன்னு நெனக்கறப்போ...''
''நடந்து போனதப் பத்தி இன்னும் எதுக்கு நினைச்சு வருத்தப்படறே... இது மாதிரி, ஆயிரம் அவலங்கள் இந்த உலகத்துல நடந்துட்டுதானிருக்கு. அத தடுக்கிற சக்தி நமக்கேது... ஆனா, இந்தக் குழந்தை உன் கண்ணுல பட்டுச்சு பாத்தியா... அதுதான் கர்த்தரோட கருணை. இவன் அதிர்ஷ்டக்காரப் பையன்; அதான், உன் கைக்கு கிடைச்சு, உன் மூலம், இந்த இல்லத்துக்கு வந்திருக்கான். இவனோட எதிர்காலம், நிச்சயம் நல்லபடியாக இருக்கும்; வருத்தப்படாத...'' என்றாள் சிஸ்டர்.
முந்தானையால் கண்களையும், முகத்தையும் துடைத்தாள் பொன்னுத் தாயி. பின், சிஸ்டரின் முகத்தை தயக்கத்துடன் பார்த்து, ''அம்மா... நா இப்ப குடுக்கறத வேணாம்ன்னு சொல்லக் கூடாது,'' என்றாள்.
வியப்புடன் கிழவியின் முகத்தை பார்த்து, ''என்ன பொன்னுத்தாயி... புதுசா என்னமோ சொல்றே...'' என்றாள் சிஸ்டர்.
ஏதும் பேசாமல், மடியில் சொருகியிருந்த துணிப்பையை எடுத்துப் பிரித்து, கட்டாக பணத்தை எடுத்தாள் பொன்னுத்தாயி. அந்தக் கட்டில், 10, 20, 50, 100 ரூபாய்கள் என அடுக்கி, ஒரே கட்டாக நூலினால் கட்டப்பட்டிருந்தது. அதை அப்படியே சிஸ்டரிடம் நீட்டினாள்.
வியப்புடன் பார்த்து, ''என்ன பொன்னுத்தாயி இது... எதுக்கு இவ்வளவு பணத்தக் குடுக்கற?''என்று கேட்டாள் சிஸ்டர்.
''இதுல, 10 ஆயிரம் ரூபா இருக்கும்மா...'' என்று கிழவி சொன்னதும், சிரித்தபடியே, ''அன்னிக்கி இந்தப் பையனுக்கு நல்ல படிப்பு குடுக்கணும்ன்னா கொஞ்சம் செலவாகும்ன்னு சொன்னனே... அத நினைச்சு இந்த பணத்தை தர்றியா?'' என்று கேட்டாள் சிஸ்டர்.
''இந்தப் பையன நல்லா படிக்க வைக்கணும்ன்னு எனக்கு ஆசை தான்; ஆனா, அவனுக்காக மட்டும் இந்தப் பணத்த குடுக்கல...''
''பின்ன...''
''இங்க இருக்கிற குழந்தைங்கள வளக்கறதுக்கு, உங்களுக்கு நிறையப் பேரு பணம் குடுக்கறாங்களே... அதுக்கு ஏதோ சொல்வீங்களே...''
''டொனேஷன்.''
''ஆ... அதாம்மா... இந்தப் பணத்த அப்படி நினைச்சு வாங்கிக்கங்க,'' என்றாள்.
பணத்தை வாங்காமல், பொன்னுத்தாயை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சிஸ்டர்.
''என்னம்மா அப்படிப் பாக்குறீங்க... இந்த வருஷம் பூரா கீர வித்து, நான் சேத்த பணம்மா இது...''
''பொன்னுத்தாயி... உன்னை எனக்கு பல வருஷமா தெரியும். எங்கயோ கிடந்து எடுத்து வந்த பையனுக்கு, இந்த வயசான காலத்துல, உன்னை நீ வருத்திக்கணுமா...'' என்றாள்.
''இல்லம்மா... இந்தப் பையனுக்குன்னு நா இந்தப் பணத்தைக் குடுக்கல. நீங்க என்ன பாத்ததும், பேரனப் பாக்க வந்தியான்னு கேட்டிங்க; நான், அவன மட்டும் பேரனா நினைக்கல; இங்க விளையாடற எல்லா குழந்தைகளும் எம்பேரன், பேத்திகளா தான் தெரியுது. இந்தப் பணத்த எல்லாருக்குமா தான் குடுக்கறேன்,'' என்றாள்.
பதில் பேச முடியாமல், கிழவியை பிரம்மிப்புடன் பார்த்தாள் சிஸ்டர்.
''இந்தப் பையனை, பச்சக் குழந்தையா விடியற்கால நேரத்துல, உங்க கையில குடுத்துட்டு போனப்புறம், இவன் நெனப்பாவே கொஞ்ச நாள் இருந்தேன். இவன நெனச்சு தான், ஆரம்பத்துல காசு சேர்த்தேன். ஆனா, இங்க அப்பப்ப வந்து பாத்துட்டு போனப்புறம், பெத்தவங்களே இல்லாத இந்த பிஞ்சுகளோட முகத்த பாக்க பாக்க, இந்த குழந்தைங்க எல்லாருமே எம்மனசுல நிறைஞ்சுட்டாங்க.
''இனிமே இந்த உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும், இந்த குழந்தைகளுக்காக உழைச்சா என்னன்னு தோணுச்சு. என்னோட அந்த ஓட்டு வீட்டக்கூட, எனக்கு அப்புறம் இந்த இல்லத்துக்கு எழுதி வெக்கலாம்ன்னு இருக்கேன்; அது எப்படின்னு, நீங்க தான் சொல்லணும்...'' என்று பொன்னுத்தாயி நிறுத்தியதும், கண்களில் நீர் நிறைய, கிழவியின் இரு கைகளையும், பணத்தோடு சேர்த்துப் பிடித்து, நெகிழ்ச்சியுடன், ''பொன்னுத்தாயீ...'' என்று கூறிய சிஸ்டரால் அதற்கு மேல் பேச முடியவில்லை!

ராகவன் தம்பி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-மார்ச்-201612:15:59 IST Report Abuse
Cheran Perumal ஏழைகளின் உள்ளம் எப்பவுமே பணம் நிறைந்தவர்களை விட ஈரம் மிகுந்தது.
Rate this:
Share this comment
Cancel
14-மார்ச்-201610:07:03 IST Report Abuse
சுந்தரமூர்த்தி கருனை இல்லத்திற்கு ஒரு கருணை உள்ளம் படித்து கண் கலங்கினேன் உதவ பணம் மட்டும் தேவை இல்லை நல்ல மனம் இருந்தால் போதும்
Rate this:
Share this comment
Cancel
Karutthu solbavan - A,இந்தியா
13-மார்ச்-201616:09:47 IST Report Abuse
Karutthu solbavan கருக்கான கதை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X