விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின்னரே, மற்ற ஆப்பரேட்டிங் (விண்டோஸ் 7 இல்லாமல்) சிஸ்டங்களைக் காட்டிலும் அதிகமான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.
நெட்மார்க்கட் ஷேர் (Net Market Share) என்னும் ஆய்வு அமைப்பு இந்த தகவலை அறிவித்துள்ளது. தற்போது, விண்டோஸ் 10 சிஸ்டம், மொத்த கம்ப்யூட்டர்களில், 12.82 சதவீத இடத்தைக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்தில், இது 11.85% ஆக இருந்து, பிப்ரவரியில் 12.82% ஆக உயர்ந்துள்ளது. டிசம்பரில் இது 9.96% ஆகும். தற்போது வரும் அனைத்து புதிய கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 10 சிஸ்டமே பதியப்பட்டுத் தரப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோர் 8.1%, விண்டோஸ் 8 இயங்கும் கம்ப்யூட்டர்கள் 2.43%, விண்டோஸ் 10 உள்ளவை 12.82%. ஆச்சரியப்படத்தக்க வகையில், விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் 11.24% இடத்தைக் கொண்டுள்ளது.
விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இன்னும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த கம்ப்யூட்டர்களில், இந்த சிஸ்டம் உள்ளவை 52.34%. எக்ஸ்பி -11.24%, விண்டோஸ் விஸ்டா இன்னும் 1.66% கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது. இன்னும் சிலர் விண்டோஸ் 98 சிஸ்டத்தினை விட்டுவிடாமல் வைத்து இயக்குகின்றனர். இவை இயங்கும் கம்ப்யூட்டர்கள் 0.01%.
போகிற போக்கினைப் பார்த்தால், விண்டோஸ் 10 சிஸ்டம் மிக அதிகமான கம்ப்யூட்டர்களில் இடம் பிடிக்க சில மாதங்கள் ஆகலாம். ஆனால், தற்போது விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்துதான் இடம் மாறுகின்றனர். ஏனென்றால் முந்தைய மாதத்தில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் 60% இடத்தைப் பிடித்திருந்தன.