சாண்டோ சின்னப்பா தேவர்! (33) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சாண்டோ சின்னப்பா தேவர்! (33)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மார்
2016
00:00

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —

'அண்ணே இதை பாத்தீங்களா.... நம்ம இந்தி படத்தை பத்தி, 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' பத்திரிகையில, 'பிட் நியூஸ்' வந்திருக்கு...' என்றார் கதாசிரியர் ஒருவர்.
'மாரா... என்ன போட்டிருக்கான்னு படியேன்...' என்றார் தேவர்.
'அது ஒண்ணுமில்லண்ணே... கேலி செஞ்சுருக்காங்க...' என்ற மாராவின் குரலில் உற்சாகமில்லை.
ஆனால், குதூகலம் குறையாமல், 'இதோ பாரப்பா... கிண்டலோ, பாராட்டோ பிரபல ஆங்கில பத்திரிகையில, நம்மள பத்தியும், ரெண்டு வரி வருதே... அது பெரிசில்லயா... இதுலிருந்து நம்மளயும் அவங்க கவனிக்கறாங்கன்னு தானே அர்த்தம்...' என்றார் தேவர்.
உடனே, அருகில் இருந்த மற்றொரு கதாசிரியர், 'அண்ணே... சசிகபூர் - ஹேமமாலினி ஜோடி கூட, ஒரு ஒட்டகச்சிவிங்கியை நடிக்க வைக்கப் போறோம்ன்னு எழுதியிருக்கு...' என்றார்.
'அட... நல்ல யோசனையா இருக்கே... ஒட்டகச்சிவிங்கியை நடிக்க வைக்க முடியுமான்னு, ஹூசேன் பாயை கேட்டுட்டு வா; அந்த செய்திய நிஜமாக்கிடுவோம். நம் படத்துல, நடிக்க வர பொண்ணுங்க எல்லாமே, அஞ்சடிக்குள்ள அடங்கிடுதுங்க. வடமாநில இந்திக்காரப் பொண்ணுங்கல்லாம், உசரமாவே இருப்பாங்க. பம்பாய் போய் தேடினா, புதுமுகமாகவே கதாநாயகிய புடிச்சிட்டு வரலாம். ஒட்டகச்சிவிங்கியோட நடித்த முதல் நடிகைன்னு பேரு வாங்கலாம்...' என்றார் தேவர் ஜாலியாக!
'அண்ணே... விஷயம் அது இல்ல; அவங்க, கதாநாயகன் அமிதாப்ப, 'ஒட்டகச்சிவிங்கி'ன்னு நையாண்டி செஞ்சிருக்காங்க...' என விளக்கினார் மாரா.
இதைக் கேட்டதும் தேவருக்கு சட்டென்று கோபம் வந்து, 'ஏன்யா அறிவிருக்கா உங்களுக்கெல்லாம்... இதெல்லாம் ஒரு செய்தின்னு என் காதுல போட்டுக்கிட்டு... போங்கப்பா போய் வேலயப் பாருங்க. புஸ்தகம் படிக்காதீங்கன்னு சொன்னா கேக்குறிங்களா...' என்றார்.
கடந்த, 1978ல், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில், தேவர் பிலிம்ஸ் மூச்சுத் திணறியது. தொடர்ந்து வெற்றி கிடைத்தாலும், அதைத் தக்க வைத்துக் கொள்ள ஓட்டம் அவசியம். ஊட்டியில், 40 நாட்கள் அவுட்டோர் ஷூட்டிங் ஏற்பாடாகியது.
ரஜினி - ஸ்ரீபிரியா நடிக்க, தாய் மீது சத்தியம், முரளி மோகன் - ஸ்ரீதேவி ஜோடியுடன், கொண்ட ராமுடு, அமிதாப் பச்சன், தேவர் பிலிம்ஸ் முதன் முதலில் இணையும், தோ அவுர் தோ பான்ச் ஆகிய மூன்று மொழிப் படங்களின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெறவிருந்தன.
ஏற்கனவே, ஊட்டிக்குச் சென்று விட்டனர் யூனிட் ஆட்கள். நடிகர்களை அழைத்துக் கொண்டு தேவர் புறப்பட வேண்டும். ஆனால், தேவருக்கு மனசு சரியில்லை. காரணம், அவர் ஆசை ஆசையாக வளர்த்த, 'ஹீரா' என்கிற சிங்கக்குட்டி எதிர்பாராமல் இறந்து போனதை, அவரால் தாங்க முடியவில்லை. அவர் கையாலேயே பாலூட்டி வளர்ந்த ஜீவன்!
அன்று சனிக்கிழமை; தேவர் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடுகள் நடந்தன. குளிக்கப் போகும் நேரத்தில், தன் பாசத்துக்குரிய வேலையாள் முருகன் வந்து நிற்க, 'முருகா... என்னடா இங்கே... தண்ணியில சந்தனத் தைலம் கலக்கறதப் பாக்க வந்தியா...' என்றார் தேவர்.
'அது இல்லண்ணே... உங்களப் பாக்க எம்.ஆர்.,ராதா வந்துருக்காரு...' என்றதும், தேவருக்கு ஒரே ஆச்சர்யம்! அவருக்கும், ராதாவுக்குமான நெருக்கம் குறைந்து, பல ஆண்டுகளாகி விட்டன.
'என்ன விஷயமாக வந்திருப்பார்...' என யோசித்தபடியே, 'முருகா... அவரு பெரிய மனுஷன்; மரியாதையா கவனிச்சுக்க. நான் குளிச்சுட்டு வர்றக்குள்ள காபி, கூல்டிரிங்க்ஸ் ஏதாவது கொண்டு போய்க் கொடு...' என்றார் தேவர்.
காத்திருந்த எம்.ஆர்.ராதா, அவருடைய உதவியாளர் கஜபதியிடம், 'தேவர் விடியறதுக்குள்ள குளிச்சுடுவாருல்ல. இப்பத்தான் எண்ணெய் தேய்க்குறார்ன்னு சொல்றான் இவன்...' என்றார் கேலியாக!
தேவரிடம் நிறைய மரியாதை வைத்திருந்தார் எம்.ஆர்.ராதா. தன் உதவியாளர் கஜபதியிடம், தேவர் எப்பொழுது கால்ஷீட் கேட்டாலும், உடனே கொடுக்கச் சொல்வார். அதேபோன்று, ராதாவுக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பணம் தருவார் தேவர். ஜூபிடரில், தேவர் அடியாளாக நடிக்கும் போதே, கஜபதியும், தேவருக்கு பழக்கம்.
நல்ல இடத்து சம்பந்தம் படம் தான், ராதாவுக்கு சினிமாவில் புதுவாழ்வு பெற்றுத் தந்தது. தேவர் அதைப் பார்த்துவிட்டு, தன், கொங்கு நாட்டுத் தங்கம் படத்தில் நடிக்க அழைத்தார். அன்று முதல், தேவர் பிலிம்சில் ராதாவும் ஐக்கியமாகி விட்டார்.
கஜபதி வற்புறுத்தினார் என்பதற்காக, தாயைக் காத்த தனயன் படத்தில், ராதாவின் வாரிசாக, வாசுவை அறிமுகம் செய்தார் தேவர். சமையல்காரர் வேடம்; ஒரே ஒருநாள் ஷூட்டிங்! வாசுவை ஆசிர்வதித்து, 1,000 ரூபாயை வழங்கினார் தேவர். இதைக் கண்டு, மனசு கேட்கவில்லை கஜபதிக்கு!
'அண்ணே...ராதா அண்ணன் பையனுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தீங்களே... என்னமோ மாதிரி இருக்குண்ணே...' என்றார்.
தேவருக்கு பக்கென்றது! 1962ல், 1,000 ரூபாய் மிகப்பெரிய தொகை தான். இருப்பினும், 'ராதா அண்ணன் ஏதாவது வருத்தப்பட்டாரா?' என்று கேட்டார் தேவர்.
'அவரு எதுவும் சொல்லல; எனக்குதான் கஷ்டமாக இருந்துச்சு...' என்ற கஜபதியின் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள்! அடுத்த விநாடியே, 10 ஆயிரம் ரூபாயை எடுத்து, கஜபதியிடம் கொடுத்து, 'வாசு நல்லா வருவான்; கவலைப்படாதே கஜபதி...' என்றார் தேவர்.
எம்.ஜி.ஆர்., படங்கள் தவிர, தமிழ் சினிமாவில் அப்போது வெளியான அத்தனைப் படங்களிலும் வாசு, 'பிசி!'
இதையெல்லாம் நினைத்தபடியே வெந்நீர் தொட்டியில் கிடந்த தேவர், கடைசி சொம்பு நீரைத் தலையில் கவிழ்த்தார். நீண்ட நேரம் ராதாவைக் காக்க வைத்த பரிதவிப்போடு, ஹாலுக்கு வந்தவர்,
எம்.ஆர்.ராதாவைப் பார்த்து, பணிவோடு இருகரம் கூப்பினார்.
'சினிமா ஷூட்டிங்குல கூட, நீ, என்னை இவ்வளவு நேரம் காக்க வெச்சதில்ல. வயசுல மூத்தவர்; காக்க வைக்கக்கூடாதுன்னு எம் மேல மரியாதை வெச்சு உடனே, 'ஷாட்' எடுத்து முடிச்சுருவ. 'டச்' விட்டுப் போச்சு...' ராதா அவருக்கே உரித்தான ஸ்டைலில் பேசினார்.
கஜபதி ஆரம்பித்தார்...
'அண்ணே... அன்னிக்கே போன்ல சொன்னேனே... ராதா அண்ணன் மகளுக்கு கல்யாணம்; அதை உங்க தலைமையில நடத்த விரும்புறாருன்னு! இப்ப கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்திருக்கோம்...' என்றார்.
தேவருக்கு ஊட்டி அவுட்டோர் ஷூட்டிங் ஞாபகம் வந்தது. அவரே தலைமை என்கிற போது மறுப்பது மரியாதை அல்ல.
'நான் உயிரோடு இருந்தா, எங்கே இருந்தாலும் கல்யாணத்துக்கு வந்துடுவேன்...' என்றார் தேவர்.
'நீங்க வந்தாலும், வரலன்னாலும் உங்க தலைமையில தான் என் பெண்ணுக்கு கல்யாணம்...' என்றார் எம்.ஆர்.ராதா.
கஜபதிக்கு, அவர்களது உரையாடல், அபசகுனமாகவே பட்டது.
கார் வரைக்கும், வந்து வழியனுப்பினார் தேவர்.
'ஏம்பா கஜபதி... மங்களகரமான விஷயம் கல்யாணம்; அதைச் சொல்லி பத்திரிகை கொடுக்கப் போகும் போது, தேவரு எண்ணெய் தேச்சுக்கிட்டு இருக்காருன்னு சொன்னாங்களே... சரி இல்லயே...' என்றார் எம்.ஆர்.ராதா.
அதற்கு எந்த பதிலும் கூறாமல், 'அடுத்து யார் வீட்டுக்குண்ணே போகணும், காலேஜ் ரோடு போயி ஜெய்சங்கருக்கு பத்திரிகை கொடுத்துருவமா...' என்று பேச்சை மாற்றினார் கஜபதி.
தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

பா. தீனதயாளன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X