கடவுள் செயல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
00:00

ஒரு ஊரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரில் ஒரு பிச்சைக்காரன் பரம்பரை பிச்சைக் காரன்; இன்னொரு பிச்சைக்காரன் காலத்தின் கோலத்தால் பிச்சை தொழிலுக்கு வந்தவன். பரம்பரை பிச்சைக்காரனுக்கும், புதிதாக பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்தவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
பரம்பரை பிச்சைக்காரன் எப்போதும், யாரையாவது திட்டியபடியே இருப்பான். அவன் பிச்சை கேட்டுக் கொடுக்காதவர்களை திட்டி தீர்ப்பதுதான் அவன் வேலை. அதே சமயம், அவனுக்கு காசு கொடுப்பவர்களை, அவர்கள் பல நாட்கள் வரை அவன் வாழ்த்தும் வாழ்த்துரைகளை மறக்கா வண்ணம் புகழ்ந்து வாழ்த்துவான். காசு கொடுப்பவர்களை வாழ்த்துவதும், கொடுக்காதவர்களை திட்டுவதும், அவனால் மாற்றிக் கொள்ள முடியாத பழக்கம்.
காலத்தின் கோலத்தால் பிச்சைத் தொழிலுக்கு வந்தவன், ஒரு காலத்தில் பணக்காரனாக இருந்து பலரை வாழ வைத்தவன். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் அவனைச் சுற்றி இருந்த நண்பர்களும், சுற்றத்தாரும் ஏமாற்றி அவனிடம் இருந்த பணம் மற்றும் சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டதினால், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டான்.
அவன் எப்போதும் தன் சொத்துக்கள் பறிபோனதைப் பற்றி கவலைப்பட்டது கிடையாது. எல்லாமே கடவுளின் கட்டளைப்படிதான் நடப்பதாக நம்புவான். ஒரு நேரத்தில் கொடுத்த கடவுள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் மூலமாக எடுத்துக் கொண்டதை பற்றி கவலைப்பட்டது கிடையாது. அதே நேரத்தில்... இருந்ததெல்லாம் போய் விட்டதே என்று ஒரு போதும் கடவுளை திட்டியது கிடையாது.
இரண்டு பிச்சைக்காரர்களும் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் பழக்க வழக்கங்கள் எல்லாமே ஒருவருக்கொருவர் மாறுபட்டிருந்தது.
இரண்டு பிச்சைக்காரர்களும், பிச்சை கேட்டு வீதியில் செல்லும் போது, பரம்பரை பிச்சைக்காரன் யாராவது காசு போட்டால், அவர்களை புகழ்ந்து பேசுவான். காலத்தின் கோலத்தால் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்தவன் எப்போதும் கடவுளின் பெயரை உச்சரித்தவாறே சென்று கொண்டிருப்பான். அவனுக்கு காசு கொடுத்தவன், கொடுக்காதாவன் என்ற பாகுபாடே கிடையாது. கொடுக்காதவனையும் ஆசிர்வதிப்பான்; கொடுத்தவர்களை வாழ்த்துவான்.
இரண்டு பிச்சைக்காரர்களும் தினமும் பணக்காரர்களும், பிரபுக்களும் நிறைந்த வீதி வழியே பிச்சை எடுத்தபடி செல்வர். அவர்கள் செல்லும் வழியில் இருந்த ஒரு பணக்காரன் அவர்களுக்கு தினமும் பிச்சை போடுவான். பரம்பரை பிச்சைக்காரன், பணக்காரனை எப்போதும் புகழ்ந்து பேசியபடியே செல்வான். ஆனால், காலத்தின் கோலத்தால் பிச்சை எடுப்பவனோ, 'எல்லாம் கடவுள் செயல், கடவுள் ஒரு போதும் கைவிடமாட்டார்' என்று கூறியபடியே செல்வான்.
தினமும் பிச்சை போடும் பணக்காரனுக்கு தன்னை தினமும் புகழ்ந்து பேசும் பரம்பரை பிச்சைக்காரனை மிகவும் பிடிக்கும். ஆனால் தன்னை புகழ்ந்து பேசாமல், கடவுளையே புகழ்ந்து பேசும் பிச்சைக்காரனைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. 'நான் பிச்சை போடுகிறேன், என்னை புகழ்ந்து பேசாமல், கடவுளை புகழ்ந்து பேசும் பிச்சைக்காரனுக்கு கடவுள் என்ன செய்துவிடப் போகிறார்' என்று மனதுக்குள் எப்போதும் கருவிக் கொண்டிருப்பான்.
ஒருநாள் பணக்காரன், 'கடவுளை நம்பி உள்ள பிச்சைக்காரன், தன்னை புகழ்ந்து பேசும் பரம்பரை பிச்சைக்காரனை பார்த்து பொறாமைப் படும்படி செய்ய வேண்டும்' என்று எண்ணினான்.
சாதாரண மனிதர்கள் தங்கள் பூர்வ புண்ணிய பலத்தால் பணக்காரர்கள் ஆனவுடன், பழைய நிலைமையை மறக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களைச் சுற்றி எப்போதும் நான்கு பேர் இருக்க வேண்டும் என்று எண்ணும் அவர்கள், சுற்றி உள்ள நான்கு பேரும் தங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பரம்பரை பிச்சைக்காரனுக்கு தினமும் பிச்சை போடும் பணக்காரன், திடீர் என்று பணக்காரனானவன். அதனால் தான் அவன், தன்னை புகழ்ந்து பேசுபவர்களை காணும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு எப்போதும் தன்னை வாழ்த்தும் பரம்பரை பிச்சைக்காரனை, கொஞ்ச காலத்துக்கு பிச்சை எடுக்காமல் இருக்க செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் நினைத்தது ஒன்று. ஆனால், நடந்தது ஒன்று.
ஒருநாள் பரம்பரை பிச்சைக்காரனும் எப்போதும் கடவுள் பெயரையே உச்சரித்தபடி செல்லும் பிச்சைக்காரனும், வழக்கமாக செல்லும் பணக்காரன் மாளிகை வழியே சென்றனர். பிச்சைக்காரர்கள் செல்வதை வீட்டின் உள்ளே இருந்து பார்த்து விட்ட பணக்காரன், உடனே வெளியே ஓடிவந்தான். வந்தவன் கையில் இரண்டு ஆப்பங்கள் இருந்தன. அதில் ஒரு ஆப்பம் சற்று உப்பலாகவும், அழுக்காகவும் இருந்தது. மற்றொரு ஆப்பம் வெள்ளையாகவும், பார்க்க அழகாகவும் இருந்தது.
பணக்காரன் உப்பலாகவும், அழுக்காகவும் இருந்த ஆப்பத்தை பரம்பரை பிச்சைக்காரனுக்கும், வெள்ளையாக இருந்த ஆப்பத்தை கடவுள் பெயரையே சொல்லிக் கொண்டு செல்லும் பிச்சைக்காரனுக்கும் கொடுத்தான். பரம்பரை பிச்சைக்காரன் பணக்காரனை அவன் மகிழும் வண்ணம் புகழ்ந்தான். அவனுடன் இருந்த மற்றொரு பிச்சைக்காரன், எனக்கு கிடைத்த இந்த பிச்சை கடவுள் அருளால் கிடைத்தது என்று கூறிபயடி மவுனமாக பணக்காரன் வீட்டை விட்டு சென்று கொண்டிருந்தான்.
கடவுள் அருளால் கிடைத்தது என்று கூறிய பிச்சைக்காரனைப் பார்த்த பணக்காரன் தனக்குள் சிரித்தவாறே, நான் அளித்த அழுக்கான, மற்றும் உப்பலான ஆப்பத்தால், பரம்பரை பிச்சைக்காரன், நாளையிலிருந்து பிச்சை எடுக்கும் தொழிலையே விட்டு விடப் போகிறான் என்று எண்ணியபடி வீட்டின் உள்ளே சென்றான்.
பரம்பரை பிச்சைக்காரனும், அவனுடன் பிச்சைக்கு செல்லும் கடவுளை நம்பும் பிச்சைக்காரனும் தங்களுக்கு கிடைத்த உணவை உண்ண வழக்கமாக கூடும் மண்டபத்துக்கு வந்தனர்.
பரம்பரை பிச்சைக்காரன் தன்னிடம், பணக்காரன் கொடுத்த உப்பலாகவும், அழுக்காகவும் இருந்த ஆப்பத்தை சாப்பிடப் பிடிக்காமல், கடவுள் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனுக்கு கொடுத்துவிட்டு, அவனிடம் இருந்த வெள்ளையான ஆப்பத்தை வாங்கிக் கொண்டான்.
அழுக்காக இருந்த ஆப்பத்தை வாங்கிக் கொண்ட பிச்சைக்காரன், ''எல்லாமே கடவுள் செயல்!'' என்று கூறியபடி பரம்பரை பிச்சைக்காரனைப் பார்த்து, ''நண்பனே, எனக்கு அவசரமாக ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டும்,'' என்று கூறியவாறே சென்று விட்டான்.
ஆற்றங்கரையில் தன் வேலையை முடித்துக் கொண்ட கடவுளை நம்பும் பிச்சைக்காரன், தன்னிடம் இருந்த அழுக்கான ஆப்பத்தை உண்பதற்காக, ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரநிழலில் அமர்ந்தான். அழுக்கான ஆப்பத்தை உண்ண அதை பிட்ட போது அதில் இருந்து பொற்காசுகள் விழுந்தன. எல்லாம் கடவுள் செயல் என்று கூறியபடி பொற்காசுகளை எடுத்து, தான் அணிந்திருந்த வேட்டியில் முடிந்துக் கொண்டு அழுக்கான ஆப்பத்தில் இருந்த அழுக்கையெல்லாம் தட்டிவிட்டு ஆப்பத்தை சாப்பிட்டு முடித்தவுடன், ஆற்றுநீரை அருந்தி விட்டு நின்றான்.
அப்போது ஆற்றுக்கு வடக்கு பக்கத்தில் இருந்து பயத்துடன் வேகமாக ஓடிவரும் ஜனங்களை பார்த்து, பிச்சைக்காரன் ஏன் அவர்கள் இப்படி ஓடி வருகிறார்கள் என்று கேட்கவும், அவர்களில் ஒருவன், பிச்சைக்காரன் கையை பிடித்து இழுத்தவாறே, ''ஒரு சிறுத்தை புலி இந்த பக்கம் வேகமாக வருகிறது. வா சீக்கிரமாக ஆற்றைக் கடந்து மறுகரைக்கு சென்றுவிடலாம்,'' என்று இழுத்துச்சென்று நின்றுக் கொண்டிருந்த படகில் பீதியோடு நிறைந்திருந்த ஜனங்களோடு ஏறினான். பிறகு, படகோட்டியை வேகமாக மறுகரைக்கு போகச் சொன்னான்.
மண்டபத்தில் அமர்ந்திருந்த பரம்பரை பிச்சைக்காரன், ஆற்றுப் பக்கம் சென்ற பிச்சைக்காரனுக்காக காத்திருந்தான். நீண்ட நேரமாக அவன் வராததால் பரம்பரை பிச்சைக்காரன் தன்னிடம் இருந்த ஆப்பத்தை சாப்பிட்டு விட்டு, மண்டபத்திலேயே படுத்து தூங்கிவிட்டான். அவன் கண்விழித்து பார்த்தபோது இருட்டிவிட்டது. தன்னுடன் எப்போதும் சேர்ந்திருக்கும் தன் நண்பன், இல்லாததால் மிகவும் வருத்தப்பட்டு இரவு முழுவதும் தனியாக மண்டபத்திலேயே படுத்துவிட்டான்.
காலையில் எழுந்து தனியாக பிச்சை எடுக்க புறப்பட்ட பரம்பரை பிச்சைக்காரன், வழக்கமாக செல்லும் பணக்காரன் வசிக்கும் வீதி வழியாக சென்றான். பிச்சைக்காரனைப் பார்த்த பணக்காரன் வீட்டிற்கு வெளியே வந்து, அவனைப் பார்த்து, ''நேற்று, உனக்கு கொடுத்த ஆப்பத்தை என்ன செய்தாய்?'' என்று கேட்டான்.
பிச்சைக்காரனும், பணக்காரனை பார்த்து, ''ஐயா! நேற்று நீங்கள் எனக்கு கொடுத்த ஆப்பம் சற்று அழுக்காகவும், உப்பலாகவும் இருந்ததால் அதை என்னுடன் கடவுள் பெயரையே சொல்லிக் கொண்டு வரும் என் நண்பனுக்கு கொடுத்து விட்டேன்,'' என்றான்.
பரம்பரை பிச்சைக்காரன் சொன்னதைக் கேட்ட பணக்காரன், தான் நினைத்தபடி நடக்காமல், கடவுளின் ஆணைப்படி நடந்ததை எண்ணி, 'எல்லாமே இறைவன் செயல்' என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
படகில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறிய கடவுள் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன், தான் எங்கே செல்கிறோம் என்பது தெரியாமல் படகில் நின்று கொண்டிருந்தான். அவன் சென்ற படகு ஆற்றின் மறுகரைக்கு செல்லும் வழியில், நேராக செல்லாமல் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த நீரின் வேகத்தால் வேறு வழியில் சென்று கொண்டிருந்தது. ஆற்று நீரின் வேகத்தோடு காற்றும் சேர்ந்து, படகை வெகு தூரத்துக்கு அப்பால் இருந்த ஒரு நாட்டின் கரைக்கு சென்று அங்கே மோதி நின்றது.
'எல்லாம் இறைவன் செயல்' என்று எண்ணியவாறு, கடவுள் பெயரை சொல்லிக் கொண்டே படகில் இருந்து இறங்கிய பிச்சைக்காரன் தான் இறங்கிய நகரத்துக்கு சென்றான். தன் நண்பன் தனக்கு கொடுத்த அழுக்கான ஆப்பத்தில் இருந்து கிடைத்த பொற்காசுகளை கொண்டு, வியாபாரத்தில் ஈடுபட்டு கிடைத்த பணத்தை கொண்டு, துன்பப்படுபவர்களுக்கு உதவியதோடு தானும் சுகமாக வாழ்ந்தான்.
துன்பத்திலும் பிறர் மனம் நோகாமல் நடந்து, சர்வ சதாகாலமும் இறைவனின் நாமத்தை, நம்பிக்கையோடு உச்சரித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரனை கடவுள் கைவிடவில்லை. அதே நேரத்தில் கடவுள் பெயரை உச்சரிக்காத பிச்சைக்காரனுக்கும், கடவுள் உணவளித்துக் கொண்டுதான் இருந்தார்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X