மெஸ்ஸிங்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
00:00

அற்புதமான மனோசக்தி ஆற்றலைக் கொண்டிருந்தவர் 'உல்ப் மெஸ்ஸிங்' மனோதத்துவ நிபுணர்; டெலிபதியில் கில்லாடி.
போலந்து நாட்டின் தலைநகர் வார்சா அருகே உள்ள சிற்றூரான, 'கோரா கல்வாரியா' என்ற இடத்தில் 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி யூத இனத்தில் பிறந்தார்.
அப்போது, போலந்து நாடு, ரஷ்ய மன்னரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பின்னர், தனது 75ம் வயதில், அதாவது 1974ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8ம் தேதி இவர் மரணமடைந்தார்.
பிறர் மனதில் என்ன நினைக்கின்றனர் என்பதைக் கிரகித்துக் சொல்லும் சக்தி இவருக்கு அதிகம். அது மட்டுமல்லாமல், தான் நினைப்பதை பிறர் மூலமாக எளிதாகச் சாதித்து விடும் வசிய சக்தியும் இவரிடம் அதிகம்.
கூடு விட்டு கூடு பாய்தல், தீராத நோய்களைக் குணமாக்கிவிடுதல், நீரின் மேல் நடத்தல் போன்ற பல்வேறு எண்ணற்ற அசாத்திய சாதனைகளைச் செய்து காட்டியவர் மெஸ்ஸிங்.
மூன்று நாட்கள் தொடர்ந்து சமாதி நிலையில் இருக்கும் சக்தி, இவருக்கு இயல்பாகவே இருந்தது. மிகப் பெரிய மெழுகு பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், அங்குள்ள பொம்மைகளோடு பொம்மையாய் அசையாமல் சிலையைப் போல கண்ணாடிப் பெட்டிக்குள் மூன்று நாட்கள் இருந்து காட்டினார்.
இவரது இந்த ஆற்றலைக் கண்டு ரஷ்ய தேசமே வியந்தது.
மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் இருந்தார். அவரிடம் எண்ணற்ற நகைகள் இருந்த போதிலும், மிகவும் விலை மதிப்பிட முடியாத வைர மோதிரம் ஒன்றும் இருந்தது. அது பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த மோதிரம். அந்த மோதிரம் திடீரென்று காணாமல் போயிற்று.
அந்த செல்வந்தர் தனது அரண்மனை போன்ற வீடு முழுவதும், 'இண்டு இடுக்கு' விடாமல் அலசிப் பார்த்து விட்டார்.
எங்கேயும் மோதிரத்தைக் காணவில்லை. அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால், திருடியது யார் என்று அவரால் ஊகிக்க முடியவில்லை. இருந்தாலும் தமது குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக கருதப்படும் அந்த வைர மோதிரத்தை மீட்டு விட வேண்டும் என்று நினைத்தார். அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்துத் தந்தால் அவருக்கு இரண்டரை லட்சம் ரூபிள் தருவதாக அறிவித்தார்.
இந்த சன்மானத்தைப் பெறுவதற்காக யார் யாரோ வந்து, என்னென்னவோ முயற்சிகளைச் செய்து பார்த்தனர். ஆனால், யாராலும் மோதிரத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இதனால் செல்வந்தர் மிகவும் தளர்ந்து போய் விட்டார். மோதிரம் கிடைக்காமலேயே போய்விடுமோ என்று அஞ்சினார்.
இதுபோன்ற ஒரு தருணத்தில் மோதிரம் காணாமல் போன விவரமும், அதற்கான சன்மானத்தை செல்வந்தர் அறிவித்திருப்பதும் மெஸ்ஸிங்கிற்குத் தெரியவந்தது.
ஒருநாள்-
அந்தச் செல்வந்தர் வீட்டிற்குச் சென்றார் மெஸ்ஸிங்.
''உங்கள் வீட்டில் வைர மோதிரம் காணாமல் போனதாகக் கேள்விப் பட்டேனே?'' என்று கேட்டார்.
''ஆமாம். அது எங்கள் பரம்பரைச் சொத்து. அதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபிள் தருவதாக அறிவித்தும், இதுவரை அதனை யாராலும் கண்டு பிடித்துத் தரமுடியவில்லை,'' என்று சோர்வாகக் கூறினார் செல்வந்தர்.
இதனைக் கேட்ட மெஸ்ஸிங் பதிலேதும் கூறாமல் அவரது வீட்டிற்குள் நுழைந்தார். அவரது கரு விழிகள் பம்பரமாக வீடு முழுவதும் சுற்றிச் சுழன்றது.
ஒவ்வொரு அறையாகச் சென்றவர் செல்வந்தரின் குழந்தை அறை அருகே வந்ததும் ஒரு நிமிடம் நின்றார். கண்களை ஒரு கணம் மூடி யோசித்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த அறைக்குள் திடுமெனப் பிரவேசித்தார்.
அவரது கண்கள் அந்த அறையைத் தீர்க்கமாக நோட்டமிட்டது. அங்குள்ள அலமாரியில் குழந்தைகள் விளையாடும் பொம்மை ஒன்று இருந்தது. அதனை எடுத்தார். அந்த பொம்மைக்குள் கையை விட்டு நெருடினார்.
காணாமல் போன மோதிரம் அங்கிருந்தது.
அதனை எடுத்து செல்வந்தரிடம் கொடுத்தார்.
''உங்கள் குழந்தை விளையாட்டு தனமாக மோதிரத்தை இந்தப் பொம்மைக்குள் திணித்து வைத்திருக்கிறது. அவ்வளவே,'' என்றார்.
இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த செல்வந்தர். ஓடோடிச் சென்று தான் ஏற்கெனவே அறிவித்தது போல சன்மானத் தொகையை எடுத்து வந்து மெஸ்ஸிங்கிடம் அளித்தார். ஆனால், அந்தப் பணத்தை வாங்க மறுத்த மெஸ்ஸிங், 'இந்தச் சன்மானத்திற்காக இதனை நான் செய்யவில்லை,' என்று கூறிவிட்டார்.
அப்போது ரஷ்யாவில் ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
'கோமல்' என்ற நகரில், மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு இடையே மேடையில் ஆச்சரியகரமான காட்சிகளை நடத்திக் கொண்டிருந்தார் மெஸ்ஸிங். அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த ராணுவத்தினர், மேடையில் ஏறி, காட்சிகள் முடிந்ததாக அவர்களாகவே திடுமென அறிவித்தனர்.
பின்னர், மெஸ்ஸிங்கைத் தங்களோடு அழைத்துச் சென்று நேராக ஸ்டாலின் முன்னால் நிறுத்தினர்.
''மிகப்பெரும் வல்லமை சக்தி உனக்கிருப்பதாக கூறுகின்றனர். அப்படியானால் மாஸ்கோ வங்கியில் இருந்து நாளை, வேகமாக ஒரு லட்சம் ரூபிளை எடுத்து வந்து என்னிடம் காட்டு,'' என்று சவால்விட்டார் ஸ்டாலின்.
அதனை அப்படியே ஏற்றுக் கொண்டார் மெஸ்ஸிங்.
மறுநாள்-
வங்கிக்குச் சென்ற மெஸ்ஸிங், ஒரு நோட்டில் இருந்து கிழிக்கப்பட்ட தாள் ஒன்றை வங்கி காஷியரிடம் காண்பித்தார். அதிபர் ஸ்டாலின் வாங்கி வரச் சொன்ன ஒரு லட்சம் ரூபிளைப் பற்றித் தெரிவித்தார். அந்தத் தாளை வாங்கி நன்றாக உற்றுப் பார்த்த காஷியர், அமைதியாக பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டதும் வங்கி காஷியரிடம் தான் அவரிடம் காண்பித்தது வெற்றுத்தாள் என்பதைக் காட்டினார்.
இதைப் பார்த்த காஷியர் அப்படியே தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
அப்படியே அங்கிருந்து புறப்பட்டு ஸ்டாலினிடம் சென்று பணத்தைக் கொடுத்தார் மெஸ்ஸிங். அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும் அவருக்கு இன்னமும் நிபுணர் மீது முழு நம்பிக்கை வரவில்லை.
குறிப்பிட்ட நாள் ஒன்றில் க்ரெம்ளின் மாளிகைக்குள், நுழைவுச் சீட்டு எதுவும் இல்லாமல் வருமாறு கட்டளையிட்டார். அப்படிச் செய்தால் மட்டுமே அவரது திறமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் ஸ்டாலின்.
அதனையும் ஏற்றுக் கொண்டார் மெஸ்ஸிங்.
அதேபோல குறிப்பிட்ட நாளில் க்ரெம்ளின் மாளிகையை அடைந்தார். காவலுக்கு இருந்தவர்களிடம், ''நான் தான் 'பெரியா' உள்ளே போகலாமா?'' என்று கேட்டார்.
அவரது மனோவசியத்திற்கு மயங்கிய அந்தக் காவலர்கள் மரியாதையுடன் உள்ளே செல்ல அனுமதித்தனர். காரணம், ஸ்டாலினின் உண்மையான, மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் பெரியா ஒருவரே.
இவ்வாறு மனோவசிய சக்தியில் அற்புத ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்த மெஸ்ஸிங்கின் சக்திகளை அறிந்த பின்னரே, 'பாராசைக்காலஜி' என்னும் புதிய பிரிவு ஒன்றைத் தொடங்கினார் ஸ்டாலின்.
இதுபோன்ற அதீத நிபுணத்துவம் வாய்ந்த மெஸ்ஸிங், ஒருமுறை இந்தியா வந்திருந்தார். அப்போது மகாத்மா காந்தியைச் சந்தித்தார். இவரைப் பற்றி ஏற்கெனவே நிறைய தெரிந்து வைத்திருந்த காந்திஜி, அவரைச் சோதிக்க விரும்பினார். அதற்கு மெஸ்ஸிங்கும் சம்மதம் தெரிவித்தார்.
காந்தியின் சோதனை என்ன தெரியுமா?
தனது மனதிற்குள் ஒன்றை நினைத்து அதனைச் செயல்படுத்துமாறு மெஸ்ஸிங்கிற்கு உத்தரவிடுவார். அதனை மெஸ்ஸிங் செயல்படுத்த வேண்டும். சோதனைக்கான நேரம் தொடங்கியது. காந்திஜி தனது மனதிற்குள் நினைக்கத் தொடங்கினார். அதனைச் செயல்படுத்துமாறு கட்டளையும் இட்டார்.
காந்திஅடிகள், தனது மனதிற்குள் நினைத்தது மிகப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. அந்த அறையில் ஒரு மேஜையின்மீது புல்லாங்குழல் ஒன்றிருந்தது. அதனை எடுக்க வேண்டும் என்பதுதான் மெஸ்ஸிங்கிற்கு காந்திஜி மனதிற்குள்ளேயே இட்ட கட்டளை.
காந்தியின் மனம் நினைத்ததை அடுத்த நொடிப் பொழுதே செயலாக்கினார் மெஸ்ஸிங். விரைந்து சென்று அந்தப் புல்லாங்குழலை எடுத்ததோடு, அதனை அற்புதமாக இசைக்கவும் தொடங்கினார்.
வியந்துபோன காந்திஜி, மெஸ்ஸிங்கை பாராட்டினார்.
சிலருக்கு இந்த மனோவசிய சக்தி அபரிமிதமாக இருக்கிறது. அதை முறையாகப் பயன்படுத்துபவர்கள் புகழடைகின்றனர் அவ்வளவே!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X