குட்டிப் பையன்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
குட்டிப் பையன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மார்
2016
00:00

முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் வயதான முதியவரும், அவருடைய மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே, ஒவ்வொரு நாளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தனர்.
ஒருநாள்-
அவர்களின் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அதன் உயரம் ஒரு அங்குலம்
மட்டுமே இருந்தது. அவர்கள் அக்குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்தனர். அவனுக்கு 'மைக்கேல்' என்று பெயரிட்டனர்.
அக்குழந்தை சிறுவனாக மாறினான். ஆனாலும், வளர்ச்சி அடையாமல் அதே அளவிலேயே இருந்தான். அதனால் அவனைச் சுற்றியிருந்த சிறுவர்கள் அனைவரும், 'ஒரு அங்குலப் பையன்... ஒரு அங்குலப் பையன்...' என்றே அழைத்தனர்.
அதனைக் கேட்ட அவனது தாய் கோபமடைவாள். அவள் அச்சிறுவர்களையெல்லாம் திட்டுவாள். அவ்வாறு கூப்பிட வேண்டாமெனக் கூறுவாள்.
ஆனால், ஒரு அங்குலப் பையன் உள்ளத்தால் வளர்ந்தான். உடலால் உயரமடையவில்லை. ஆனாலும், வலுவானவனாகவும், புத்திசாலியாகவும் மாறினான்.
ஒருநாள்-
அவன் தனது பெற்றோர்களிடம், ஒரு ஊசி, ஒரு வைக்கோல் துண்டு, ஒரு மரக்கிண்ணம், உணவு உண்ணப் பயன்படும் ஒரு குச்சி ஆகியவற்றைத் தருமாறு கேட்டான்.
''இவைகளைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்டாள் தாய்.
''ஊசியினைக் கத்தியாகவும், வைக்கோல் துண்டினை எழுதுகோலாகவும், மரக்கிண்ணத்தைப் படகாகவும், உணவு உண்ணப் பயன்படுத்தும் குச்சியினைத் துடுப்பாகவும் பயன்படுத்துவேன்,'' என்று கூறினான்.
''அப்படியா... அவைகளைப் பயன்படுத்தி என்ன செய்யப் போகிறாய்?'' என்று அவன் தந்தை ஆவலுடன் கேட்டார்.
''நான் சிறந்த போர் வீரனாக மாற வேண்டுமென ஆசைப்படுகிறேன். அதற்காகத் தலைநகரத்திற்குச் செல்லப் போகிறேன்,'' என்றான்.
அடுத்த நாள் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவன் தலைநகரம் நோக்கிப் பயணமானான். அவன் நடந்து செல்லும் வழியில் ஒரு எறும்பினைச் சந்தித்தான். அதனிடம், ''எறும்பே... எறும்பே... ஆறு எங்குள்ளது தெரியுமா?'' என்று கேட்டான்.
''அருகில் உள்ள வயல் வெளியின் பக்கத்திலுள்ள பள்ளத்தாக்கினைக் கடந்தால் ஆறு வரும்,'' என்றது.
அவ்வழியே நடந்த மைக்கேல் ஆற்றினை அடைந்தான். மரக்கிண்ணத்தைப் படகு போல் வைத்தான். அதில் ஏறி அமர்ந்து கொண்டான். ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடியது. அதில் மரக் கிண்ணத்திலான படகு வேகமாகச் சென்றது.
வழியில் மீன் ஒன்று பாய்ந்து வந்தது. அது அவனைத் தின்பதற்கு வாயைத் திறந்து பாய்ந்தது. மைக்கேல் தனது துடுப்பினால் அடித்து விரட்டினான்.
அதன்பின், அலைகளின் போக்கில் படகினை வேகமாகச் செலுத்தினான். அப்போது கடுமையான காற்றும், மழையும் அடித்தது. அதனையும் சாமர்த்தியமாக சமாளித்து பயணித்தான். கடினமான நீண்ட பயணத்திற்குப்பின் அவன் தலைநகரை அடைந்தான்.
அங்கு மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் அவன் பெருமையுடன் நடந்து சென்றான். இறுதியில் மிகப் பெரிய அரண்மனையை அடைந்தான். அதுதான், பணி செய்ய வேண்டிய இடமென அவன் முடிவு செய்து கொண்டான்.
அங்கு சென்று கதவைத் தட்டினான். வீரன் ஒருவன் கதவைத் திறந்தான். அவன் சுற்றும் தேடினான். யாரும் தென்படவில்லை.
''யாரங்கே? யார் கதவைத் தட்டியது?'' என்று அவ்வீரன் கோபத்துடன் பார்த்தான்.
''நான்தான் ஒரு அங்குலச் சிறுவன். உங்கள் காலடி அருகே பாருங்கள்,'' என்றான் மைக்கேல்.
அவ்வீரன் ஆச்சரியத்துடன் அவனை அரண்மனைக்குள் அனுமதித்தான். அரசர் அவனை அருகில் அழைத்து விசாரித்தார்.
அதற்கு மைக்கேல், ''மன்னவா... நான் உங்களிடம் ஒரு உதவி வேண்டி வந்துள்ளேன். நான் தங்களின் இந்த அரண்மனையில் பணியாற்ற வேண்டும். தாங்கள் அதற்கு வாய்ப்பளித்து உதவ வேண்டும்,'' என்று பணிவுடன் வேண்டினான்.
''எனது அரண்மனையில் எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருக்கின்றனர். ஆனால், உனது புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. எனவே, எனது மகளுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்கும் பணியினைத் தருகிறேன். அவளுக்கு மகிழ்வுடன் கற்றுக்கொடுக்கும் பணியினைச் செய்,'' என்று கூறினார் மன்னர்.
மன்னனின் மகள் பெரும் அழகியாக இருந்தாள். அவளும் மைக்கேலை அன்புடன் நேசித்தாள். அவனது கற்பிக்கும் திறனைக் கண்டு வியப்படைந்தாள்.
ஒருநாள்-
மன்னனின் மகள் கோவிலுக்குப் புறப்பட்டாள். அப்போது மைக்கேல் அவளுடன் சென்றான். கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு கொடூரமான அரக்கன் மன்னன் மகளை கடத்திக் கொண்டு தனது இருப்பிடம் செல்ல முயன்றான்.
அப்போது மைக்கேல், ''ஏய்... கொடிய அரக்கனே... அவளைத் தொடாதே! தொட்டால் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.
அதனைக் கேட்ட அரக்கன் கோபமாகச் சிரித்தான். அது அப்பகுதியே அதிர்வது போலிருந்தது.
''ஒரு அங்குலச் சிறுவனே! என்னை நீ என்ன செய்ய முடியும்? முதலில் உன்னைத் தின்று விடுகிறேன் பார்,'' என்றவாறே அவனைப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டான்.
உடனே அரக்கன் திணறினான். உள்ளே சென்ற மைக்கேல் தனது கையிலிருந்த ஊசியால் தொண்டையில் குத்தினான். அதன் வலி தாங்க முடியாமல் அரக்கன் கத்தினான். வாயைத் திறந்து வாந்தி எடுத்தான்.
அப்போது ரத்தத்துடன் கலந்து மைக்கேல் வெளியில் வந்தான். ஊசி குத்தியதால் ரத்தம் பீறிட்டது. வலி தாங்க முடியாமல் அரக்கன் மலையை நோக்கி ஓடினான்.
உடனே மன்னனின் மகள் நன்றியுடன் மைக்கேலை பார்த்தாள்.
''என்னை அரக்கனிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி,'' என்று கூறினாள்.
அப்போது அவர்களிருவரும் அரக்கன் விட்டுச் சென்ற மந்திர சுத்தியல் ஒன்றினைக் கண்டனர். அதனைக் கண்ட மன்னன் மகள், ''இது ஒரு மந்திர சுத்தியல். இதனைத் தரையில் அடித்து நாம் வேண்டுவதைக் கேட்டால், அப்படியே நடக்கும். உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டாள்.
''எனக்கு உயரம் வேண்டும். என்னை உயரமானவனாக மாற்ற முடியுமா? அதற்கு உதவி செய்யுங்கள்,'' என்று வேண்டினான் மைக்கேல்.
மன்னன் மகளும் மந்திர சுத்தியலைத் தரையில் தட்டி வேண்டினாள். மைக்கேல் அழகிய உயரமான சிறந்த வீரனாக மாறினாள்.
பின்னர் மைக்கேல், மன்னரின் மகளை மணந்தான். வீரமிகுந்த அவன், 'கியோட்டா'வின் மன்னனாகவும் மாறினான் என்றால் ஆச்சரியமாக இல்லை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X