கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

கேள்வி: நான் இன்னும் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். விரைவில் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற இருக்கிறேன். இப்போது விண்7 சிஸ்டத்துடன் பயன்படுத்தி வரும் சில புரோகிராம்களுக்கு அப்டேட் உள்ளது என்றும், அதனை அப்டேட் செய்து கொள்ளுமாறும் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அப்டேட் புரோகிராம் அனைத்தும் விண்டோஸ் 10 சார்ந்தவை. நான் இவற்றை இப்போதே அப்டேட் செய்திட வேண்டுமா?
ஆர். சேது பாண்டியன், திருநெல்வேலி.
பதில்:
இப்போதே நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை அப்டேட் பைல்களைக் கொண்டு மேம்படுத்திக் கொள்ளலாம். அவை விண்டோஸ் 10 சார்ந்து இருந்தாலும், மேம்படுத்தப்பட்ட பின்னர், அவை விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் வழக்கம் போல் செயல்படும். தொடர்ந்து நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மேம்படுத்துகையில், அனைத்து புரோகிராம்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படும். எனவே, அப்கிரேட் செய்திடச் சொல்லி கிடைக்கும் தகவல்களை அலட்சியப்படுத்தாமல் மேற்கொள்ளவும்.

கேள்வி: விண்டோஸ் 10க்கு என் லேப்டாப் கம்ப்யூட்டரை மாற்றி, அதன் பல புதிய அம்சங்களை இயக்கிப் பயன்படுத்தி வருகிறேன். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குவதற்கும், இயக்கத்தை நிறுத்தவும், மற்றும் அது சார்ந்த ஹைபர்னேட், ஸ்லீப் போன்றவற்றை மேற்கொள்ள, மவுஸ் கொண்டு திரையில் தேடிச் செல்லாமல், கீ போர்டிலேயே மேற்கொள்ள இயலுமா? நான் ஹெல்ப் பக்கத்தில் பலமுறை தேடியும் எந்த வழியும் தெரியவில்லை. நீங்கள் அவசியம் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதனைக் கேட்கிறேன்.
என். ஹென்றி டேனியல், புதுக்கோட்டை.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு அதனை முழுமையாக அறிய முயற்சிப்பதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு விண்டோஸ் 10 சிஸ்டத்தினை 'ஆப்', 'ரீஸ்டார்ட்' 'ஹைபர்னேட்' மற்றும் 'ஸ்லீப்' ஆகியவற்றிற்கான ஷார்ட் கட் கீகள் தேவை, இல்லையா? நீங்கள் கேட்டுக் கொண்ட வழிகளை இதோ தருகிறேன்.
1. விண்டோஸ் கீ + எக்ஸ் (Windows key + X) கீகளை அழுத்தி, அதன் பின்னர், 'யு' (U) கீயை அடுத்தடுத்து இருமுறை அழுத்தினால், சிஸ்டம் இயங்குவது நிறுத்தப்படும்.
2. மேலே சொன்ன கீகளை Windows key + X அழுத்தி, அதன் பின்னர், ஒருமுறை 'யு' (U) அழுத்தி, அடுத்து R அழுத்தவும். சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆகும்.
3. மேலே சொன்ன கீகளை Windows key + X அழுத்தி, அதன் பின்னர், ஒருமுறை 'யு' (U) அழுத்தி, அடுத்து H அழுத்தவும். சிஸ்டம் ஹைபர்னேட் (Hybernate) ஆகும்.
4. மேலே சொன்ன கீகளை Windows key + X அழுத்தி, அதன் பின்னர், ஒருமுறை 'யு' (U) அழுத்தி, அடுத்து S அழுத்தவும். சிஸ்டம் உறங்கச் (Sleep) செல்லும்.

கேள்வி: பெர்சனல் கம்ப்யூட்டரில், எதேனும் ஒன்றை அழிக்கையில், அது எங்கு செல்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஐபேட் ஆகிய சாதனங்களில், கோப்பு ஒன்றினை அழிக்கையில் அது எங்கு செல்கிறது? என்று தெரியவில்லை. இது குறித்து ஏதேனும் டிப்ஸ் தர முடியுமா?
எஸ். கிறிஸ்டோபர் தேவதாஸ், பாளையங்கோட்டை.
பதில்:
நல்ல கேள்வி. பலர் இதே போல சந்தேகங்களைக் கொண்டிருந்தாலும், இந்த சாதனத்தில் இப்படித்தான் என்று எண்ணி, மேற்கொண்டு அறிவது குறித்து முயற்சி எடுப்பதில்லை. முதலில் 'அழிப்பது' என்பது, டிஜிட்டல் சாதனங்களில் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம். அழித்தவுடன், அந்த கோப்பு சார்ந்த டேட்டா, உங்கள் சாதனத்தின் ஹார்ட் ட்ரைவிலிருந்து எடுக்கப்படுவதில்லை. நீங்கள் அந்த கோப்பினை அணுகுவதற்கான தொடர்பு மட்டுமே நீக்கப்படுகிறது. அத்துடன் அந்த கோப்பு வைத்திருந்த இடத்தில், சிஸ்டம் வேறு பைல்களை எழுதிக் கொள்ளலாம் என்ற சிக்னல் தரப்படுகிறது.
பெர்சனல் கம்ப்யூட்டரில், 'ரீசைக்கிள் பின்' (Recycle Bin) என்ற ஒரு பைல் உள்ளது. மேக் கம்ப்யூட்டர்களில் இது Trash என அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில், அழிக்கப்பட்ட பைல்களை அணுகுவதற்கான லிங்க் எனப்படும் தொடர்பு குறியீடுகள் காக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் அழித்த பைல்களை மீண்டும் பெற விரும்பினால், இந்த தொடர்புகள் மீட்டெடுக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. ரீசைக்கிள் பின் அல்லது ட்ரேஷ் ஆகிய இடங்களிலிருந்து இந்த அழிக்கப்பட்ட பைல்களை நிரந்தரமாக அழிக்கையில் மட்டுமே, இந்த தொடர்புகள் நீக்கப்படுகின்றன.
மொபைல் சாதனங்கள் (ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபேட்) சிறிய அளவிலேயே ஸ்டோரேஜ் இடங்களைக் கொண்டிருப்பதால், அவற்றில் ரீசைக்கிள் பின் அல்லது ட்ரேஷ் ஆப்ஷன்கள் தரப்படுவதில்லை. எனவே, உங்கள் போனும், டேப்ளட் பி.சி.க்களும், நீங்கள் ஒன்றை அழிக்கும்போது, அவற்றை நீங்கள் அழிக்க முடிவு செய்ததை ஏற்றுக் கொண்டு, அதற்கான தொடர்பினை நீக்குகின்றன. நீங்கள் அப்ளிகேஷன்களை மொபைல் போனில் உள்ள Trashcan ஐகானுக்குக் கொண்டு செல்லலாம். ஆனால், அதன் மூலம் அவை அழிக்கப்படுவதில்லை. ஹோம் ஸ்கிரீனிலிருந்து மட்டுமே நீக்கப்படுகின்றன. இந்த அப்ளிகேஷனில் உள்ளாக ட்ரேஷ் கேன் ஐகானில் ஹிட் செய்கையில், குறிப்பிட்ட பைல் மட்டும் நீக்கப்படும். ஆனால், இதற்காக, ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் ஒரு ட்ரேஷ் தொட்டி இருப்பதில்லை. ட்ரேஷ் ஐகானுக்கு ஒரு பைலைக் கொண்டு செல்கையில், நீங்கள் அந்த பைலை அழிப்பதில்லை. ஒரு போல்டரிலிருந்து ட்ரேஷ் ஐகான் போல்டருக்குக் கொண்டு செல்கிறீர்கள். எனவே, இதிலிருந்து நீக்கப்படும் போது மட்டுமே, அவை நிரந்தரமாக நீக்கப்படுகின்றன. இருந்தாலும், அவை இருந்த இடத்தில் வேறு ஒரு பைல் எழுதப்படும் வரை, அந்த இடத்தில் டேட்டா தங்கிக் கொண்டு தான் இருக்கும். வேறு ஒரு தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் வைத்துத்தான் அவற்றை மீட்டெடுக்க முடியும். ஆனால், அது 100% உறுதி இல்லை.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயக்கம் உள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான பைல்களை டவுண்லோட் செய்துவிட்டேன். ஆனால், அதனை கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ள விருப்பமில்லை. இவற்றை ஒரு தனி ஹார்ட் ட்ரைவில் (எக்ஸ்டர்னல்) வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அவை எங்கிருக்கும்?
கே. ஜோதி நிர்மலா, திண்டிவனம்.
பதில்:
இந்த பைல்களை நீங்கள் இன்னொரு ஹார்ட் ட்ரைவிற்குக் கொண்டு செல்லலாம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் C: > Windows> Software Distribution அங்கு download என்ற பிரிவில் இருக்கும். ஆனால், இவற்றை இன்னொரு ஹார்ட் ட்ரைவிற்கு கொண்டு செல்வதில் எந்த பயனும் இருக்கப் போவதில்லை. இவற்றை தனியான ஹார்ட் ட்ரைவில் வைத்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட முடியாது. எனவே, உங்கள் கம்ப்யூட்டரிலேயே வைத்து, பின்னர் பயன்படுத்தும் எண்ணம் வந்தால், பயன்படுத்தலாம். இல்லை எனில் அழித்துவிடலாம்.

கேள்வி: அலுவலக லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன். எட்ஜ் பிரவுசர் மிக விரைவாக ப்ரவுசிங் செய்வதில் நல்ல அனுபவத்தினைக் கொடுக்கிறது. இதில் எக்ஸ்டன்ஷன்களை இணைத்துக் கொள்ள மைக்ரோசாப்ட் முன்வந்துள்ளது என்ற தகவல்களைப் படித்தேன். இவற்றை எப்படி எங்கிருந்து பெறுவது? எந்த எந்த வசதிக்கான எக்ஸ்டன்ஷன்கள் தரப்பட்டுள்ளன?
என். கயல்விழி தேவி, சென்னை.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டம் மற்றும் சார்ந்த தகவல்களைப் பெறுவதில் காட்டும் ஆர்வத்தினைப் பாராட்டுகிறேன். நீங்கள் கூறியது உண்மையே. மைக்ரோசாப்ட் ஆறு மாதங்களுக்கு முன்னர், எக்ஸ்டன்ஷன் குறித்து தான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிவிட்டது. (காண்க: https://blogs.windows.com/msedgedev/2016/03/17/preview-extensions/) அண்மையில் தரப்பட்ட Build 14291 என்ற மேம்பாட்டு பைலுடன் இது உள்ளது. மூன்று எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவை: 1) இணைய தளங்களைத் தானாக மொழி பெயர்க்கும் Microsoft Translator, 2) Reddit செயலியில் புதிய விஷயங்களை இணைத்துக் கொள்ள உதவும் எக்ஸ்டன்ஷன் மற்றும் 3) மவுஸ் அசைவுகளை அறிந்து இயக்கும் செயலியாக Mouse Gestures. ஆனால், இவை தற்போதைக்கு, மைக்ரோசாப்ட் சிஸ்டத்தினை ஆய்வு செய்துவரும் (testers) வாடிக்கையாளருக்கு மட்டுமே தரப்படுகிறது. விரைவில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், 'விண்டோஸ் ஸ்டோர்' வழியாகத் தரப்படலாம். சற்று பொறுத்திருங்கள்.

கேள்வி: அனைவரும் என்னை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு (நீங்கள் உட்பட) மாறச் சொல்லி, நானும் பத்து நாட்கள் முன்பு மாற்றினேன். நான் அடிக்கடி, கம்ப்யூட்டரில் போட்டோக்களை சரி செய்திடுவேன். இதனை ஒரு பொழுது போக்காகவே செய்வேன். விண்டோஸ் 10ல் இந்த அப்ளிகேஷன் மிக நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், மிகவும் அடிப்படையிலான புரோகிராம் போல உள்ளது. ”எம்.எஸ்.பெயிண்ட்” அளவு கூட இல்லை. ஏன் இப்படி? வேறு வழிகள் உள்ளனவா?
என். ராஜேந்திரன், திருப்பூர்.
பதில்
: எம்.எஸ். பெயிண்ட் அளவு இல்லை என்று கூறுவது எதன் அடிப்படையில் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. இருப்பினும், நீங்கள் எதிர்பார்க்கும், அடோப் போட்டோஷாப் அளவிற்கு, இதில் வசதிகள் இருக்காது. ஆனால், இலவசமாக புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதில் அடோப் போட்டோ ஷாப் தரும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். அதன் பெயர் ஜிம்ப் (GIMP GNU Image Manipulation Program). இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் சிறப்பாக இயங்குகிறது. இதனை http://www.gimp.org/downloads/ என்ற முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் குறித்து கிடைக்கும் நூல்களுடன், இந்த புரோகிராம் பதியப்பட்டுள்ள சி.டி. இலவசமாக இணைத்துத் தரப்படுகிறது.

கேள்வி: என் வீட்டில் உள்ள லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் பி.சி. இரண்டையும் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற்றிவிட்டேன். ஆனால், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க மறுக்கிறது. தேவையற்ற புரோகிராம்களை நீக்கியும் பார்த்துவிட்டேன். விண்டோஸ் 10க்கு மாறிய பின்னர், ஒரு மாதத்திற்குள் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறலாம் என்று முன்பு நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதற்கான வழிகளைக் கூறவும்.
எஸ். பெர்னாண்டஸ், புதுச்சேரி.
பதில்
: உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பதிந்து 30 நாட்கள் இன்னும் ஆகவில்லை என்றால், நீங்கள் பழைய விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழி முறைகளை இங்கு தருகிறேன்.
1. முதலில் Start > Settings > Update & security > Recovery எனச் செல்லவும்.
2. இப்போது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை ரீசெட் செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திலேயே தங்கிக் கொள்ள ஓர் ஆப்ஷன் தரப்படும். ஆனால், இதனை மேற்கொண்டால், அடுத்து பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்ல முடியாது.
3. இன்னொரு ஆப்ஷனாக, “Go back to Windows 7 [or 8.1]” தரப்படும். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் பயன்படுத்தி வந்த முந்தைய சிஸ்டத்திற்குச் செல்லலாம்.
இருப்பினும், உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேரை திறன் உயர்த்த முடியுமா என இது குறித்து அறிந்தவர்களிடம் கேட்டு, இயன்றால் உயர்த்தி, விண்டோஸ் 10 சிஸ்டத்திலேயே இயங்கப் பார்க்கவும். எதிர்காலத்தில் அதுவே சிறந்ததாகக் கருதப்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

கேள்வி: பல விண்டோக்களை ஒரே நேரத்தில் திறந்து பணி புரியும் பழக்கம் என்னையும் அறியாமல் என்னைத் தொற்றிக் கொண்டது. சில வேளைகளில், இவற்றை மூடுகையில், டாஸ்க் பார் சென்று, ஒவ்வொன்றாக திரைக்குக் கொண்டு வந்து மூட வேண்டியுள்ளது. இவற்றை ஒவ்வொன்றாகத் திரைக்குக் கொண்டு வந்து மூடாமல், எளிதாக மூட வழி உள்ளதா? ஆல்ட்+எப் 4 அழுத்தினால், திரையில் உள்ள புரோகிராம் மூடப்படுகிறது. எனவே, இந்த வழியைப் பயன்படுத்தவில்லை. வேறு வழி கூறவும்.
என். பாக்யநாதன், கோவை.
பதில்:
உங்கள் கேள்வியில் தெளிவு இல்லை. இருப்பினும், திறந்திருக்கும் விண்டோக்களை மூட ஓர் எளிய வழி தருகிறேன். உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய விண்டோக்கள் திறந்த நிலையில் உள்ளதா? ஒவ்வொன்றிலும் ஏதேனும் புரோகிராம் ஒன்று திறக்கப்பட்டு, பைல் ஒன்று செயல்பாட்டில் உள்ளதா? அல்லது எந்த செயல்பாடும் இன்றி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதா? இவற்றை மூடிட, Windows Logo + Home என்ற கீகளை அழுத்தவும். ஒவ்வொரு முறை அழுத்தும்போதும், ஒவ்வொரு விண்டோ மூடப்படும். நீங்கள் அப்போது டெஸ்க்டாப்பில் திறந்து வைத்து செயல்படும் விண்டோ மட்டும் திறந்தபடியே இருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X