மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் - த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
சுக்கிர தசை, சுக்கிர தசை என்கிறார்களே… யார் இந்த சுக்கிரன்? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?
-கோ.தீபேஷ், பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, செங்கல்பட்டு.
சுக்கிரன் என்பது வெள்ளி எனும் வீனஸ் கிரகத்துக்கு இருக்கும் மற்றொரு பெயர். முற்காலத்தில் கோள்கள் என்றால் என்னவென்று சாதாரண மக்கள் அறிந்திருக்கவில்லை. நேர்த்தியான விண்மீன் தொகுப்புக்கு இடையே அங்கும் இங்கும் செல்லும் கோள்களை அச்சத்துடன் பார்த்தனர். மின்னல் என்பது நிலை மின்சாரம் என்றும், நிலை மின்சாரம் பாயும்போது காற்றில் ஏற்படும் விரிசல்தான் இடி முழக்கமாக கேட்கிறது என்றும் இன்று நாம் அறிவோம். அதுபோலத்தான் சுக்கிர தசையும். சுக்கிரன் எனும் வீனஸ், கல்லும் மண்ணும் உடைய கோள்தான் என்று இப்போது தெரிகிறது. அதன் தரைமீது சோவியத் யூனியன் அனுப்பிய விண்கலம் கால் பதித்துள்ளது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்கிறார்களே, அது ஏன்?
-சூர்யா, சென்னை.
'கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு' என 1,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆரியபட்டர் முதலிய விஞ்ஞானிகள் கண்டு தெளிந்து அறிவியல் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அறிவியலைப் பொறுத்தவரை, கிரகண நாட்களில் மட்டுமல்ல, சாதாரண நாட்களில்கூட, மிகப் பிரகாசமான ஒளியை நீண்டநேரம் பார்ப்பது ஆபத்துதான். கண்விழிப் படலத்தில் அழற்சி ஏற்படலாம். எனவே, சூரியக் கண்ணாடி போன்ற பாதுகாப்பு வடிகட்டி மூலம் மட்டுமே சூரியனை பார்க்கவேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.
சூரியனை நீண்ட நேரம் உற்றுநோக்குவதும் கண்களுக்கு ஆபத்து. அளவுக்கு அதிகமாக ரப்பரைப் பிடித்து இழுத்தால் அது தன் நெகிழும் தன்மையை இழந்து விடுவது போல, விழித்திரையில் உள்ள கூம்பு (cones) மாறும். கோல் (rods) செல்கள் மீது கூடுதல் பிரகாச ஒளி படிந்தால் அவை பழுதடைந்து விடும். பார்வைத் திறன் இழக்கும். எனவே நீண்ட நேரம் கண்களை விரித்து சூரியனைப் பார்த்துக்கொண்டே இருந்தால் சோலார் ரெட்டினோபதி (Solar retinopathy) எனும் பாதிப்பு ஏற்படும். சுமார் 100 நொடிகளுக்கு மேல் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் விழித்திரை எரிந்து ஓட்டை ஏற்படலாம். விழித்திரையில் வலி உணரும் நரம்புகள் இல்லை. எனவே, விழித்திரை சூரிய ஒளியில் எரிந்து போகும்போது நம்மால் உணர முடியாது. வெல்டிங் செய்வது போன்ற பிரகாசமான ஒளியைப் பார்க்க வேண்டிய சூழலில், கண்களுக்குப் பாதுகாப்பு தரும் கண்ணாடிகளைப் போடுவதும் இதனால்தான்.
தேங்கிய குட்டை நீரில் மின்கம்பி கிடந்தால் அது 'ஷாக்' அடித்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. பரப்பளவு அதிகமான ஏரி, குளம் போன்ற பெரிய நீர்ப்பரப்புகளிலும் அறுந்த மின்கம்பி விழுந்தால் இதே பாதிப்பை ஏற்படுத்துமா?
-கோபால், மதுரை.
தேங்கிய நீரில் மின்கம்பி அறுந்து விழுந்தால் அந்தக் கம்பி மின்சாரத்தைப் பரப்பி, தன்னைச் சுற்றி மின்புலத்தை ஏற்படுத்தும். மின்புலம் சற்றேறக்குறைய பந்து வடிவிலும், தொலைவு செல்லச் செல்ல வீச்சு குறைந்தும் அமையும்.
மின்புலத்துக்குள் நீந்திச் சென்றால் நிச்சயமாக ஷாக் அடிக்கும். நமது உடலில் உப்பு கரைசல் கூடுதாக இருப்பதால், குறிப்பாக நன்னீர் நிலைகளில் ஷாக் வலுவாக இருக்கும். கூடுதல் அளவு மின்சாரம் பாய்ந்தால் மரணம் கூட ஏற்படலாம்.
பொதுவாக வீடுகளில் பிரிட்ஜ் முதலியவற்றை இயக்க 15 ஆம்ப்பியர் (Ampere) வைத்திருப்பார்கள். உடல் திசுக்கள் செயலிழந்து நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்து மடிய, சுமார் 30 மில்லி ஆம்ப்பியர் மின்சாரம் போதும். நன்னீரில் மின்சாரம் ஒரு வோல்ட்டுக்கு (Volt) இரண்டு அடி என்ற விகிதத்தில் பரவும். அதாவது இந்தியாவில் பயன்படுத்தும் 240 வோல்ட் மின்சாரம் சுமார் 480 அடி தொலைவு வரைதான் பாய முடியும். நீச்சலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள், நீர் நிலைகள் அருகே மின்சாரம் தாக்கி மடியும் சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகம்.
பாலும் தேனும் கலந்து சாப்பிட்டால் உடலுக்குச் சத்துகள் கிடைக்குமா?
- கே.ரம்யா, சென்னை.
பால், தேன் இவற்றைத் தனித்தனியாகச் சாப்பிட்டாலும் சத்துகள் கிடைக்கும். பாலில் நமக்குத் தேவையான புரதப் பொருட்களும், வளர் இளம் பெண்களுக்கு அவசியமான கால்சியம் போன்ற சத்துப் பொருட்களும் அதிகம் உள்ளன. தேன் ஒரு செறிவான ஆற்றல் உணவு. அதிலும் பல்வேறு வகையான புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு வேதிப் பொருட்கள் இருக்கின்றன. பாலின் வாசனை சிலருக்கு ஒவ்வாது, எனவே பாலில் தேனைக் கலந்துகொண்டால் விரும்பி அருந்த முடியும்.
காதுக்கு அருகில் ஒரு டம்ளரை வைத்தால் 'கொய்ங்ங்ங்' என்ற சத்தம் வருகிறதே, ஏன்?
- S. பத்ரி நாராயணன், சங்கர வித்யாலயா, புதுச்சேரி.
இதற்குக் காரணம் ரெசோனேடிங் (resonating) எனப்படும் உடனிசைவு அமைப்புதான். டம்ளர் அல்லது சங்கு போன்ற பொருட்களில் புகும் ஒலி, மங்கிக் குறைவது வரை அங்கும் இங்கும் பட்டுத் தெறித்து எதிரொலித்தபடி இருக்கும். வெளிப்புற ஓசை, இடுக்கு வழியாக உள்ளே கசிந்து உடனிசைவு நிகழ்வதுதான் 'கொய்ங்ங்ங்' என்ற சத்தம். டம்ளர் கூடத் தேவையில்லை, வெறும் கையைக் குவித்து காதின் மீது வைத்து மறைத்துப் பாருங்கள்... அப்போதும் கேட்கும் 'கொய்ங்ங்ங்' சத்தம்.