“நான் ஒரு முட்டாளுங்க…” என்று பாடிக் கொண்டே வந்தான் பாலு. “அதான் எங்களுக்கு எப்பவுமே தெரியுமே” என்று கலாய்த்தது வாலு.
“ஏப்ரல் 1 வர்றதுக்கு முன்னாலயே என்னை முட்டாளாக்கிட்டாங்க. இந்த வருஷத்துலருந்து மார்ச் மாசத்துக்கு 32 நாளாம். ஏதோ சூரியன் சுத்தற கணக்குல மில்லிசெகண்ட் மாறியிருக்குன்னு, மாசத்தோட நாளையும் மாத்தி வெச்சுக்கணும்னு ஐ.நா.சபையில முடிவு பண்ணிட்டாங்களாம். இப்பிடின்னு என்கிட்ட நம்மி அக்கா சொன்னாங்க. நானும் நம்பிட்டேன். மார்ச் 32 நாள்ன்னா, அப்ப ஏப்ரல் 1 இந்த வருஷம் வெள்ளிக் கிழமை வராதா? சனிக்கிழமைதான் வருமான்னு கேட்டேன். இல்லையில்லை. தேதியத்தான் மாத்துவாங்க. கிழமையை மாத்தமாட்டாங்கன்னாங்க. அப்ப ரெண்டு வெள்ளிக்கிழமை வருமா, இல்ல ரெண்டு சனிக்கிழமை வருமான்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. நம்மி அக்காகிட்ட கேட்டா, சிரிசிரின்னு சிரிக்கறாங்க. எல்லாரும் ஏப்ரல் ஃபூல்தான் ஆவாங்க. நீ மார்ச் ஃபூல் ஆயிட்டேங்கறாங்க.”
“பாலு, ஏப்ரல் ஃபூல் ரூல்ஸ்படி நம்மி அக்காதான் ஃபூல்” என்றார் ஞாநி மாமா. ''அதென்ன ரூல்ஸ்?'' ''இதெல்லாம் யாரும் எழுதி வெச்ச ரூல்ஸ் இல்ல. காலம் காலமா பின்பற்றும் விதி. அவ்வளவுதான். நாங்க ஸ்கூல்ல படிக்கும்போதும் அப்படித்தான். ஏப்ரல் 1ந்தேதி காலையிலருந்து லஞ்ச் வரைக்கும் யாரும் யாரையும் ஏமாத்தலாம். அதுக்கு முன்னாலயோ அப்பறமோ ஏமாத்தினா, ஏமாத்தறவங்களத்தான் ஏப்ரல் ஃபூல்னு சொல்லுவோம்.”
''ஏன் ஏப்ரல் 1 அன்னிக்கு ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தணும் ? இது என்ன விசித்திரமான பண்டிகையா இருக்கே?''-ன்னு
மாமாவைக் கேட்டேன்.
“இது எப்பிடி வந்துச்சுன்னு ஒரு வரலாறே இருக்கு. இதை ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சவர் பாஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் பாஸ்கின். சுமார் 1800 வருஷம் முன்னால, ரோம் நாட்டு சக்ரவர்த்தியா கான்ஸ்டேண்டின் இருந்தார். அப்ப அவரோட அரசவை கோமாளி கூகல் அவருக்கு ஆட்சி நடத்தவே தெரியலன்னு ஒரு நாள் கிண்டல் செஞ்சான். அரசர் உடனே, 'நீ ஒரே ஒரு நாள் இருந்து ஆட்சி நடத்து பார்க்கலாம்'னு சொன்னார். அப்பிடி அவன் ஒரே ஒரு நாள் ஆட்சியில இருந்தப்ப ஒரு உத்தரவு போட்டான். அன்னிக்கு எல்லாரும் ஒருத்தரையொருத்தர் ஒரு தடவையாவது ஏமாத்தணும். ஆனா அதுனால யாருக்கும் எந்த கஷ்டமும் இருக்கக்கூடாது. எல்லாரும் ஜாலியா இருக்க இதான் வழி அப்பிடின்னு. அந்த நாள்தான் ஏப்ரல் 1. அன்னிலேருந்து ஏப்ரல் ஃபூல் விளையாட்டு உலகம் முழுக்க பரவிடுச்சு. இதான் கதை” என்றார் மாமா.
“கதையா ? வரலாறுன்னு இல்ல சொன்னீங்க ?”
“நம்பிட்டீங்களா? இந்தக் கதையை 1983ல அந்தப் பேராசிரியர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்துக்கு தன் ஆராய்ச்சின்னு சொல்லி வெளியிட்டார். இதை நிறைய பேப்பர்ல நிஜம்னு நம்பி வெளியிட்டாங்க. அப்பறம்தான் அந்த பேராசிரியர் சொன்னார் இதுவே ஒரு ஏப்ரல் ஃபூல் கதைதான்னு!”.
“அப்ப நிஜமாவே ஏன் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாச்சுன்னு யாருக்குமே தெரியாதா?”
“இதை ஒரு 700, 800 வருஷமா கொண்டாடறாங்க. எப்பிடி வந்துச்சுன்னு விதவிதமா கதை இருக்கு. புது வருட ஆரம்பத்தை முதல்ல மார்ச் 25லதான் கொண்டாடிக்கிட்டிருந்தாங்க. அதை ஜனவரி 1ன்னு மாத்தினதை சில பேர் முதல்ல ஏத்துக்கல. அவங்க தொடர்ந்து மார்ச் 25 அன்னிக்கே கொண்டாடினதை மத்தவங்க முட்டாள்தனம்னு கிண்டல் பண்ணினாங்க. இது ஒரு கதை.”
“நிஜமா எப்பதான் வருஷம் பிறக்குது ?” என்று கேட்டது வாலு.
“வசந்த காலத்தையொட்டித்தான் வருடப் பிறப்புன்னு பல நாடுகள்ல வழக்கம் இருக்கு. மாசியும் பங்குனியும்தான் நமக்கு வசந்த காலம். சித்திரை 1 ஏப்ரல் நடுவுல வரும். ஏப்ரல் 1 எல்லாரும் ஜாலியா இருக்கறதுக்கான ஒரு வசந்த திருவிழா. அவ்வளவுதான். பங்குனி பௌர்ணமி அன்னிக்குதான் வட இந்தியா முழுக்க ஹோலி கொண்டாடறாங்க. அதுவும் ஒரு வசந்தத் திருவிழாதான். சிலப்பதிகாரத்துல கூட வசந்த திருவிழா பத்தி சொல்லியிருக்கு.”
“சரி மாமா. ஏன் ஹோலி அன்னிக்கு எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கலர் பவுடர் பூசறாங்க ?” என்று கேட்டான் பாலு.
“ஏன்னு தெரியாமலேதான் நீங்களும் கலர் அடிச்சு வெளையாடினீங்களா?” என்றார் மாமா. “அதுக்கும் ஒரு கதை இருக்கு”.
“இன்னிக்கு ஒரே கதை நேரமா இருக்கே, ஜாலி” என்று வாலு வாலை ஆட்டியது.
“புராணக் கதைகள்ல ஹிரண்ய கசிபு, பிரகலாதன் கதை தெரியுமா உங்களுக்கு? ஹிரண்யன் அப்பா. பிரகலாதன் மகன். அப்பா தான்தான் ரொம்ப சக்தி வாய்ந்தவர், தன்னை விட அதிக சக்தியோட யாருமே கெடையாதுன்னு நினைச்சிகிட்டிருந்தவர். மகன் பிரகலாதனோ, உனக்கு மேல கடவுள் ஒருத்தர் இருக்காருன்னு சொல்லிகிட்டே இருந்தான். இது அப்பாவுக்கு பிடிக்கல. அவருக்கு ஒரு அன்பான தங்கச்சி இருந்தா. பிரகலாதனோட அத்தை. அவ பேருதான் ஹோலிகா. இந்தப் பிரகலாதன் ரொம்ப தொல்லையா இருக்கான், அவனைக் கொன்னுடனும்னு முடிவு பண்ணி என்னென்னவோ முயற்சிலாம் பண்ணிப் பார்த்தா. என்னால் நெருப்பு மேல படுக்க முடியும். உன்னால முடியுமான்னு பிரகலாதனை ஹோலிகா கூப்பிட்டா. ரெண்டு பேரும் நெருப்பு மூட்டி அது மேல போய் படுத்தாங்க. ஹோலிகா நெருப்பு சுடாத மாதிரி ஒரு அங்கி போட்டிருந்தா. ஆனா பலமா காத்து வீசி அவ அங்கி கழன்று பிரகலாதன் மேல போய் மூடிடுச்சு. அவன் தப்பிச்சுட்டான். ஹோலிகா எரிஞ்சுபோய்ட்டா. இதான் கதை.”
“ கதையில கலர் பொடி வரவே இல்லியே ?” என்றது வாலு.
“ஹோலிகாவை எரிச்ச சாம்பலை திருநீறா நினைச்சு பூசிக்கற பழக்கம் வந்தது. அது அப்பிடியேமாறி விதவிதமான கலர் பொடியை பூசிக்கறதா ஆயிருச்சு” என்றார் மாமா.
“மாமா. இதுவும் ஏப்ரல் ஃபூல் கதை மாதிரிதான் இருக்கு. பிரகலாதனை ஏமாத்தணும்னு ஹோலிகா முயற்சி பண்றா. கடைசியில அவளே ஏமாந்துடறா.” என்றான் பாலு.
“கரெக்ட். இன்னொருத்தரை ஏமாத்த முயற்சி பண்ணா நாமே ஏமாந்துருவோம்னு நீதிக் கதைன்னு வெச்சுக்கலாம். எப்பிடி பார்த்தாலும் எல்லா நேரமும் எல்லாரையும் யாரும் ஏமாத்தவே முடியாது.” என்றார் மாமா.
“ஹை. எனக்கு அந்த கொட்டேஷன் தெரியும். you can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the people all the time. ஆப்ரஹாம் லிங்கன் சொன்னது.” என்றேன்.
“எல்லாரையும் ஒரே நேரத்துல ஏமாத்தலாம். மேஜிக் ஷோல.” என்றார் மாமா. “அதுக்கு மாஸ் ஹிப்னாசிஸ்னு ஒரு டெக்னிக் இருக்கு.”
“அதே டெக்னிக்கை பயன்படுத்தி எல்லாரையும் ஏமாத்தற இன்னொரு விஷயமும் இருக்கு!” என்றது வாலு. “என்ன ?” என்றார் மாமா.
“தேர்தல்!” என்றது வாலு. எல்லாரும் சிரித்தோம்.
“இது ஜோக் இல்ல வாலு. நிஜம்தான். மாஸ் ஹிப்னாசிஸ் டெக்னிக்கை உலகத்துல எல்லா பெரிய தலைவர்களும் பயன்படுத்தியிருக்காங்க. ஹிட்லர்ல இருந்து ஒபாமா வரைக்கும்.”
“அதுல நாம மாட்டிக்காம எப்படி மாமா தப்பிக்கறது ?”
“ஏப்ரல் 1 அன்னிக்கு நம்மை யாரும் முட்டாளாக்கிடக் கூடாதுன்னு விழிப்பா இருக்கோம் இல்ல. அந்த விழிப்பு எல்லா நாள்லயும் இருந்தா தப்பிக்கலாம்!”
“ஹை.. அப்ப ஏப்ரல் ஒன்றையே விழிப்பு உணர்வு தினமா கொண்டாடலாமே!” கொண்டாடுங்கள்!!
வாலுபீடியா 1: 1857ல் ஏப்ரல் 1 அன்று லண்டன் கோபுரத்தில் சிங்கங்களைக் குளிப்பாட்டப் போகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு, நிறைய மக்கள் வேடிக்கை பார்க்கப் போய் ஏமாந்தார்கள்!
வாலுபீடியா 2: 1998ல் ஏப்ரல் 1 அன்று நிக் டஃப் எனும் டி.வி நிருபர், பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேயர் பேசுவதாக நெல்சன் மண்டேலாவிடம் பேசி ஏமாற்றினார்!