'ஆப்பிள்' என்றதும் உங்களுக்கு மொபைல் போனோ, மேக் (Mac) கணினியோ ஞாபகம் வந்திருக்குமே…
இந்த ஆப்பிளை அறிமுகப்படுத்தி, உலகில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு முன்பிருந்தே, வேறு இரு ஆப்பிள்கள் பிரபலமாக இருக்கின்றன.
ஏவாள் சாப்பிட்ட ஆப்பிள் பற்றி கதை உண்டு. அது முதல் ஆப்பிள்.
அறிவியல் உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது, ஐசக் நியூட்டனின் ஆப்பிள்! மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து, 'புவி ஈர்ப்பு விசை' என்பதை உலகத்துக்கு நிரூபித்தார் அந்த விஞ்ஞானி.
இதை எல்லாம் யோசிக்கும்போது ஆப்பிள் என்கிற பழத்தின் சுவாரசியம் நமக்குத் தெரிகிறது.
அது ஒரு பக்கம் இருக்க, ஆங்கிலத்தில் 'Apple' என்பது பழத்தைக் குறிப்பதோடு, வேறு எதை எதையோ குறிப்பிடும். கவனித்திருக்கிறீர்களா?
Idiom எனப்படும் மரபுத் தொடர்களில் ஆப்பிள் என்கிற சொல் பல வேறு அர்த்தங்களைத் தருகிறது.
ஒரு கூட்டத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க, ஒருவர் மட்டும் மோசமானவராக இருந்தால், அவரை 'rotten apple' என்பது வழக்கம்.
அதே பலரில், ஒருவரை மட்டும் நமக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அவரை 'you are the apple of my eyes' என்று சொல்வோம். அப்படியே எதிர்ப்பதம் ஆகிறது, பாருங்கள்!
'பட்டிக்காட்டு ஆள்' என்பதைக் கூட, 'apple knocker' என்று ஆங்கிலேயர்கள் கிண்டல் கலந்து கூப்பிடுவார்கள்.
தொடர்பே இல்லாத இரண்டு விஷயங்களைக் குறிப்பிட, ஆப்பிளைத் தொடர்பு படுத்தி ஒரு சொற்றொடர் உண்டு. Apples and oranges என்பதுதான் அது. அதாவது, டேவிட்டையும் பீட்டரையும் ஒப்பிடவே முடியாது, ஏனென்றால் அவர்கள் ஆப்பிளும் ஆரஞ்சும் போல (like apples and oranges) என்று குறிப்பிடுவார்கள்..
இரண்டு விஷயங்கள் ஒப்பிடவே முடியாமல் உருண்டு கிடப்பது கூட ஓ.கே... ஆனால், சதுர ஆப்பிள் என்பதுதான் இடிக்கிறது. விதிமுறை
களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவரை 'square apple' என்கிறார்கள்.
அதேபோல பொருட்களை எல்லாம் அதிக பட்சமாக சுத்தமாக வைத்திருப்பதற்கு 'apple - pie - order' என்று பெயர்.
ஒழுங்காக இல்லாமல், வேலைகளை நியதிப்படி செய்யாமல் இருப்பவர், வேலை சொன்னவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கும்! இப்படி, தேவையில்லாமல் புகழ்ந்து பேசுவதை, 'polish the apple' என்கிறார்கள். (தமிழில் இதை 'சோப்புப் போடுவது' என்று சொல்லும் வழக்கம் உண்டு.)
ஒரு நகருக்கே ஆப்பிள் என்று பெயர் உண்டு. ஆம், நியூயார்க் நகரத்தை 'Big apple' என்பார்கள்.
அதே நேரம், “அங்கே 'Road apple' கிடக்கு” என்று யாராவது சொன்னால், குனிந்து பழத்தைத் தேடாதீர்கள்... ரோடு ஆப்பிள் என்றால், குதிரைச் சாணி!