ஐரோப்பாவில், மத்திய காலத்தைச் சேர்ந்த ஓவியர்கள், மனித உடல் அமைப்பைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.
'மோனலிசா', 'இறுதி விருந்து' போன்ற புகழ்பெற்ற ஓவியங்களைத் தீட்டிய ஓவியர், லியனார்டோ - டாவின்சி (Leonardo - daVincy.) இவர், தசை, நரம்பு போன்ற உடல் உள் உறுப்புகளையும் தத்ரூபமாக வரைய விரும்பினார். அதனால் உடற்கூறு இயல் படித்தார்.
கண், கால், கை, கருப்பை என உடல் உறுப்புகளை விளக்கும் 240 ஓவியங்கள் வரைந்தார். ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும், உடல் பாகங்கள் பற்றிய குறிப்புகளை எழுதினார். அவற்றை, முகம் பார்க்கும் கண்ணாடியில் படித்தால் மட்டுமே தெரியும் வகையில் (Mirror Image) எழுதினார்.
சாதனைகள்: முதன் முறையாகத் தமனி மண்டலத்தை வரைந்தார். வயதாகும்போது தமனியின் உட்சுவர் தடிமனாகும் என்பதையும் கண்டறிந்தார். நவீன மருத்துவத்தில் இதற்கு 'ஆர்டீரியோஸ்க்ளிரோசிஸ்' என்று பெயர். (Arteriosclerosis). வயதானவர்களின் உடற்பாகங்களுடன் இளம் வயதினரின் உடற்பாகங்களை ஒப்பிட்டும் வரைந்தார். தசைகள், உந்தி இயங்குவதை (மஸில் லிவரேஜ் - Muscle leverage) இயற்பியல் மற்றும் கணிதத் தத்துவத்தோடு பொருத்தி விளக்கினார்.
டாவின்சி வரைந்த உடற்கூறியல் ஓவியங்கள், அவர் வாழ்ந்த காலத்தில், வெளியாகவில்லை. அவரது இறப்புக்குப் பிறகு, பலரிடம் கைமாறிய அந்த ஓவியங்கள், 1690-ஆம் ஆண்டில், இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் கைக்குப் போயிற்று. இன்று அந்த ஓவியங்கள், பிரிட்டிஷ் ராயல் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
லியனார்டோ இறந்து 170 ஆண்டுகளுக்குப் பிறகுதான், அவர் உடற்கூறியலில் செய்த ஆய்வுகள் பற்றித் தெரியவந்தது. இந்த விஷயம் உலகுக்குத் தெரிவதற்கு முன்னதாகவே, ஆண்ட்ரு வெசாலியஸ் (Andreas Vesalius) என்பவர் 'உடற்கூறியலின் தந்தை' என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார்!