பள்ளி விடுமுறை. ராமு கிராமத்தில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்குச் சென்றான். ஊரில் ஒரு பெரிய குளம். குளத்தை ஒட்டி ஒரு பெரிய அரச மரம். அந்த மரத்தில் பேய் இருக்கிறதாம். ஊர்க்காரர்கள் யாரும் அந்தப் பக்கமே போக மாட்டார்கள்.
"அந்த மரத்தை நான் போய்த் தொட்டுப் பார்க்கப் போறேன். எவ்வளவு பந்தயம்?" நண்பர்களிடம் கேட்டான் ராமு. "வேண்டாம் ராமு!" நண்பர்கள் எச்சரித்தனர். "இல்லடா, இன்னைக்கு சாயங்காலம் 7 மணிக்குக் கிளம்புறேன். மரத்துக்கு எதிர்ப்பக்கம் இருக்குற குளக்கரைக்கு வந்துடுங்க."
சரியாக 7 மணிக்குச் சொன்னபடியே அனைவரும் ஆஜரானார்கள். ராமு மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். பத்து நிமிடம், அரை மணி நேரம் என நேரம் ஆயிற்று. ராமு திரும்பவில்லை. நண்பர்கள் அழத் தொடங்கினார்கள்.
ஒரு மணி நேரம் கழித்து ராமு திகில் பிடித்தவன் மாதிரி வந்தான். "என்னடா ஆச்சு?" நண்பர்கள் கேட்டதற்கு, "ஒன்றும் இல்லை"என்று முறைத்துக் கொண்டே பதில் சொன்னான்.
அத்தை வீட்டுக்கு அவனைக் கூட்டிக் கொண்டு நண்பர்கள் வந்தார்கள். 'உர்'என்றே இருந்தான். அத்தையும் மாமாவும், "உனக்கு என்ன ஆச்சு... ஏன் இப்படி இருக்கே?" என்று கேட்டார்கள். ராமு வாயைத் திறக்கவே இல்லை. பத்து மணிக்கு ராமுவைக் காணவில்லை! அத்தையும், மாமாவும் பதறினர்.
சற்று நேரம் கழித்து வீடு திரும்பினான். "எங்கேடா போனே?" அப்போதும் பதில் இல்லை. சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் தூங்கினார்கள்.
சரியாக மணி பன்னிரண்டு. ராமு கண் விழித்தான். கதவைத் தடதடவென யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அத்தை பதறி அடித்து எழுந்து கதவைத் திறந்தார்.
வாசலில் போலீஸ்காரர்கள். அவர்களுக்குப் பின்னால் அக்கம்பக்கத்து வீட்டினர். ராமுவின் நண்பர்கள் கூட. ஜீப்பில் இரண்டு திருடர்கள்.
"சபாஷ் ராமு! நீ துப்புக் குடுத்த மாதிரியே திருடர்களைப் பிடிச்சிட்டோம்." இன்ஸ்பெக்டர் சொன்னார். "இவ்வளவு காலமா அந்த மரத்துக்குப் பின்னாடி இந்தத் திருடர்கள் டேரா போட்டுருக்காங்க. பேய்ப் பிசாசு கதையைக் கிளப்பிவிட்டதும் இவங்கதான். இதைக் கண்டுபுடிச்சி ராமு எங்ககிட்ட வந்து சொன்னான்."
நண்பர்கள் ராமுவிடம் வந்து, "அன்னைக்கு நீ ஒரு மணி நேரமா என்ன செஞ்சேன்னு இப்பத்தான் புரியுது" என்றார்கள்.
"அப்ப இன்னைக்குப் பத்து மணிக்கு நீ காணாம போனியே... ஸ்டேஷனுக்கா போயிருந்தே!" என்று அத்தை கேட்க, பெரிய மனுஷன் மாதிரி "ஆம்" என்று தலை ஆட்டினான் ராமு.