ம : எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
சா : என்ன மஞ்சு காலைலயே 'உலகப் பொதுமறை' படிச்சுட்டு இருக்க?
ம : ஏய்! நான் படிக்குறது உலகப் பொதுமறை இல்ல திருவள்ளுவர் எழுதுன திருக்குறள்.
சா : சரிதான். திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, உத்தரவேதம், பொய்யாமொழி, தெய்வநூல், முப்பால், வாயுறை வாழ்த்து இப்படிப் பல பெயர்கள் இருக்கு.
ம : ஆஹா! திருக்குறள முழுசாப் படிச்சாதான் இதெல்லாம் தெரியும் போல.
சா : சீக்கிரமா தெரிஞ்சுக்கோ... தமிழ்ல முதல் எழுத்து 'அ'. கடைசி எழுத்து 'ன்'. அதே மாதிரி திருக்குறளும் 'அ'ல ஆரம்பிச்சு 'ன்'லதான் முடியும், தெரியுமா?
ம : வள்ளுவர், தமிழ்ல எழுதுனதால, 'அ'ல ஆரம்பிச்சு 'ன்'ல முடிச்சிருக்காரு.
சா : அப்படி சொல்றயா! ஆனா தமிழ்ல 'ஔ' ங்கற உயிர் எழுத்தைத் தவிர மத்த எல்லா உயிர் எழுத்துகளையும் குறள்ல பயன்படுத்திருக்காரே அது ஏன்?
ம : அவ்வ்வ்வ்... ஔ... இதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கலாம்.
சா : அது தெரியல. திருக்குறள்ல தமிழ் இல்ல தெரியுமா!
ம : ஆ... உளறாத சாந்தி! இவ்ளோ நேரமா தமிழ்லதான நான் படிச்சேன்…
சா : தமிழ்லதான் படிச்சே. ஆனா 1330 குறள்கள்ல ஓர் இடத்துல கூட 'தமிழ்'ங்குற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை!
ம : அப்படியா? ஏன்?
சா : ஏன்னு தெரியல. ஆனா திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்கள் எப்படி வாழணும்கிற தகவல்கள் ரொம்ப இருக்கு.
ம : அதனாலதான் 'உலகப் பொதுமறை'ன்னு சொல்றாங்க, இல்லையா?
சா : அது மட்டுமில்ல. அதிகமான மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்ல இதுவும் ஒண்ணு.
ம : ஓ! உலக மக்கள் எல்லாரும் நம்ம திருக்குறளைத் தேடித் தேடிப் படிக்குறாங்க. நானும் படிக்கப் போறேன். அப்புறம் வந்து நீ சந்தேகம் கேளு சாந்தி...
சா : !!??